61 பேர் வெப்ப அலைக்கு பலி; 23 தேர்தல் அதிகாரிகளும் அடக்கம்!

அகமதாபாத்தில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை
அகமதாபாத்தில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை
Published on

நாடு முழுவதும் நிலவிவரும் கடும் வெப்பத்தால் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 61 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 23 பேர் கடைசிக் கட்டத் தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அரியானா, சண்டிகார், தில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், மகராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, இமாச்சலப்பிரதேசம், ஜார்க்கண்ட், கடலோர ஆந்திரம், ஏனாம் ஒன்றியப் பகுதி ஆகிய பகுதிகளில் நேற்று வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது என்று இந்திய வானிலை துறை தெரிவித்துள்ளது.

பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, இராஜஸ்தான், ஜார்க்கண்ட்ஆகிய மாநிலங்களில் அதிகமானவர்கள் வெப்பத்தாக்குதலுக்கு பலியாகி இருக்கின்றனர். 

பீகார் மாநிலத்தில் வெள்ளியன்று மட்டும் 10 தேர்தல் அதிகாரிகள் உட்பட 14 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். போஜ்பூர், ரோட்டாஸ், கைமூர், ஔரங்காபாத் ஆகிய மாவட்டங்களில் உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீர்சாபூர் மாவட்டத்தில் 13 பேர் வெப்பத்தால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 7 பேர் ஊர்க்காவல் படையிலும் 3 பேர் சுகாதாரத் துறை துப்புரப் பணியிலும் ஒருவர் ஊர்க்காவல் படையின் அலுவலகப் பணியிலும் இருந்துள்ளனர். இவர்கள் அனைவருமே இன்று நடைபெற்றுவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாகவே இந்த வட்டாரத்தில் வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாதபடி கடுமையாக இருந்துவருகிறது.

ஒடிசா மாநிலத்தில் 26 பேர் வெயிலில் இறந்துபோயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சரக்கு வாகன ஓட்டுநர்கள் என்றும் வண்டிகளின் உலோகக் கூண்டு சூட்டை மேலும் அதிகப்படுத்தி உடல் பாதிப்பை உண்டாக்கியுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜார்க்கண்டில் நான்கு பேர் வெப்பத் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com