டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் மத்திய அரசு எதிர்க்கட்சிகள் இன்றி பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது.
அந்தவகையில், நேற்று எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. எனினும், மசோதாக்கள் மாநிலங்களவையில் தொடர்ந்து விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன. பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் மசோதா 2023, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2023 ஆகிய மசோதாக்கள் உணவு இடைவேளைக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன.
உணவு இடைவேளைக்குப் பிறகு கூடிய மக்களவையில், டெல்லி அரசு திருத்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இந்த அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் டெல்லி அரசு மசோதாவை நிறைவேற்ற நினைப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. பல காரணங்களுகாக இது மிக மோசமான மசோதா. இதை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றார்.
அப்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஊழலில் திளைத்த டெல்லி அரசு தனது ஊழல்களை மறைக்கவே அதிகாரிகள் நியமன மசோதாவை எதிர்க்கிறது என்றார். அமித் ஷாவின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
டெல்லி யூனியன் பிரதேசம் தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. டெல்லி தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற முடியும் என்று உச்ச நீதிமன்றமும் தெரிவித்திருக்கிறது. இந்த பின்னணியிலேயே மசோதா நிறைவேற்றப்பட்டது என்பதே மத்திய அரசின் வாதமாக இருக்கிறது.
இதற்கு கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ள டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லி மசோதாவை நிறைவேற்ற அமித் ஷா மக்களவையில் கூறிய காரணங்களில் ஒன்றுகூட பொருத்தமானது அல்ல. அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்கே தெரியும். அவர்கள் டெல்லி மக்களை அடிமையாக்கும் நோக்கில் இதனைச் செய்கிறார்கள். இந்த சட்ட மசோதா அவர்களை டெல்லி மக்களவை நிர்க்கதியாக்கும். இதை இண்டியா கூட்டணி அனுமதிக்காது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.