தி.க. தலைவர் கி.வீரமணி
தி.க. தலைவர் கி.வீரமணி

4 மாநிலத் தேர்தல் முடிவு- கி.வீரமணி கூறும் காரணங்கள்!

தெலங்கானவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்துள்ள தி.க. தலைவர் கி.வீரமணி, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு இல்லாதது இந்தத் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், பல காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

”சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் ஹிந்து முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்துடன்தான் இதுகாறும் வாழ்ந்து வந்தனர்.
அதனை உடைக்க மதவாதப் பிரச்சினையை ஏற்படுத்தி, ஹிந்து வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளனர். காங்கிரஸ் தோற்று இருக்கலாம்; இப்பொழுது அது தன் கையில் எடுத்துள்ள சமூகநீதியும், மதச்சார்பின்மையும்தான் மக்களின் சகோதரத்துவத்துக்கும், சமத்துவத்துக்கும், இயல்பு வாழ்வுக்கும் உரியதாகும். அரசமைப்புச் சட்டப்படியானதாகும்.

இதற்கு மாறான சித்தாந்தத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ள பி.ஜே.பி.யின் நடவடிக்கை என்பது மக்களைப் பிரித்தாளும் பிற்போக்குத்தன்மை கொண்டது; சமூகநீதிக்கு ஆழக் குழிபறிப்பதும் ஆகும் - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே விரோதமானதமாகும்.” என்றும்,

” வெற்றி பெற்ற கட்சி வேட்பாளர்களின் எண்ணிக்கையை வைத்து மட்டும் தேர்தல் வெற்றித் தோல்வியை மதிப்பிட முடியாது. மதவாதத்தைக் கையில் எடுத்துக்கொண்ட காரணத்தால் பி.ஜே.பி. வெற்றி பெற்றுவிட்டது; எனவே, நாமும் அதனைக் கையில் எடுத்தால் என்ன என்று குறுக்குவழியில் சிந்திக்கக் கூடாது.

தொடக்கத் தோல்வியாக இருந்தாலும், காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி எடுத்துள்ள சமூகநீதி, மதச்சார்பின்மை என்ற கொள்கைகளை  நாடு தழுவிய அளவில் அடிமட்டத்துக்கும் கொண்டு சென்று மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும்.

காங்கிரசுக்குள்ளும் பி.ஜே.பி.யின் மதவாத சிந்தனைக் கர்த்தாக்கள் இருப்பதைப் புறந்தள்ளிவிட முடியாது. அத்தகையவர்களைக் களையெடுத்து மாநில அளவிலும், இந்திய ஒன்றிய அளவிலும் இள ரத்தம் பாய்ச்சப்படவேண்டும்.

ராஜஸ்தானும், மத்திய பிரதேசமும் தரும் இந்தப் பாடத்தைக் காங்கிரஸ் அய்யந்திரிபறக் கற்றுக்கொள்ளவேண்டும்.

கட்சியில் உண்மை உழைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்; வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தித்து உண்மைகளைத் தக்க வகையில் புரிய வைக்கும் வகையில், தொண்டர்களுக்குப் பயிற்சி கொடுத்து அனுப்பி வைக்கப்படவேண்டும். தேர்தல் காலத்தில் மட்டுமல்ல - இந்தக் களப்பணி எப்பொழுதுமே அவசியமாகும். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் சுட்டிக்காட்டியுள்ளார்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் ‘இந்தியா’ கூட்டணி என்ற அடிப்படையில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கவில்லை. அது ஏதோ நாடாளுமன்றத்திற்கு மட்டும்தான் என்பதுபோல நடந்துகொண்டனர். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்கூட இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாடி கட்சி, ஆம் ஆத்மி, அய்க்கிய ஜனதா தளம், இடதுசாரிகளும் தனித்தனியே போட்டியிட்டதன்மூலம் - வாக்குகள் பிரிந்ததன்மூலம் காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான காரணம் என்பதில் அய்யமில்லை.
உளவியல் ரீதியாகவும் அது ‘இந்தியா’ கூட்டணிபற்றி முழுமையாக புரிந்துகொள்ளக்கூடிய பாடம் அனைத்துக் கட்சிகளும் புரிந்து செயல்படவேண்டும்!

எடுத்துக்காட்டாக ராஜஸ்தான் மாநிலத்தில் பி.ஜே.பி. பெற்ற வாக்கு விழுக்காடு 41.69; காங்கிரஸ் பெற்றது 39.53. ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு செய்து போட்டியிட்டு இருந்தால், 44.95 விழுக்காடு வாக்குகள் ‘இந்தியா’ கூட்டணிக்குக் கிடைத்திருக்கும். இது எதைக் காட்டுகிறது? ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குறைபாடாகும்.

இலவசங்களைக் குறை கூறிய பிரதமர் மோடி - பி.ஜே.பி. நடந்து முடிந்த தேர்தலில் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இலவசங்களை வாரி இறைத்தது ஏன்? அவையும் ‘ஜூம்லா’தானா?

தெலங்கானா வெற்றி இந்த வகையில் காங்கிரசுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு.” என்றும் வீரமணி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com