பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயுவில், ஆண்டுக்கு ஒன்பது சிலிண்டர்களிலிருந்து வெறும் நான்காக மத்திய அரசு குறைத்துள்ளது.
மேற்காசியப் போர் தொடங்கியதிலிருந்து இரண்டாவது முறையாக, ஒரு சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்படுவதாக அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. முன்னதாகச் செய்யப்பட்ட மாற்றங்களுடன் சேர்த்து, வீட்டு சமையல் எரிவாயு விலை தற்போது ரூ.89 அளவுக்கு உயர்ந்துள்ளது.
புதுடெல்லியில் தற்போது 14.2 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை ரூ.942 ஆகும். மத்திய அரசிடமிருந்து ஒரு சிலிண்டருக்குக் கூடுதலாக ரூ.300 மானியம் பெறும் பிரதமர் திட்டப் பயனாளிகள், ரூ.642 செலுத்துவதாகக் கூறப்படுகிறது.
மானிய விலையில் கேஸ் வழங்கல் குறைக்கப்பட்டது குறித்துக் கேட்டபோது, பெட்ரோலிய அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் கானூஜா விலை நிர்ணயத்தை நியாயப்படுத்திப் பேசினார்.
”நான் பிரதமர் உஜ்வாலா திட்ட நுகர்வோராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி (சர்வதேச விலை நிர்ணயத்தின்படி) ரூ. 1,600 ஆக இருக்க வேண்டிய ஒரு சிலிண்டரை, ரூ. 942-க்கு வாங்குகிறேன் – இதுவும் ஒரு மறைமுக மானியமே. அது மட்டுமின்றி, பிரதமர் உஜ்வாலா நுகர்வோருக்கு கூடுதலாக ரூ. 300 கிடைக்கிறது, எனவே அவர்கள் ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ. 1,000 மானியம் பெறுகிறார்கள்.” என்று அவர் கூறினார்.