ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி தடுமாற்றத்திற்கு என்ன காரணம்?

இங்கிலாந்தின் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, முதல் நாளிலேயே மூன்று விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்து வலுவான தொடக்கத்தை பெற்றுள்ளது.

போட்டியின் தொடக்கத்திலேயே சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் போக போக சொதப்பினார்கள். கவாஜா - 0, டேவிட் வார்னர் - 43, லபுஸ்சேன் -26 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்டீவ் ஸ்மித் - 95, டிராவிஸ் ஹெட் - 146 ஆகியோர் முதல் நாள் ஆட்ட முடிவில் களத்தில் இருந்தனர். தற்போது இரண்டாம் நாள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 174 பந்தில் 163 ரன்கள் சேர்த்த டிராவிஸ் ஹெட், சிராஜ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தவறிய ரோகித் சர்மாவின் முடிவும், ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினை சேர்க்காமல் தவிர்த்ததும் தவறானவையாக விமர்சிக்கப் படுகின்றன.

இந்திய அணியின் முதல் நாள் ஆட்டம் தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா பேட்டி ஒன்றில், “பொதுவாக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது மிகவும் கடினமாகும். அதிலும் குறிப்பாக வெப்பமான இந்தியத் துணை கண்டத்திலிருந்து வரும் அணிகள், குளிர்ச்சியான சூழலை கொண்ட இங்கிலாந்துக்கு தங்களை உட்படுத்திக் கொள்வதற்கே 5 – 6 நாட்கள் தேவைப்படும்.

10 நாட்கள் முன்பாக முக்கிய வீரர்கள் இங்கிலாந்து வந்த நிலையில் ஜடேஜா, ரஹானே போன்றவர்கள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடி விட்டு 2 நாட்கள் முன்பாக தான் இந்திய அணியுடன் இணைந்தனர். சவாலான இங்கிலாந்து கால சூழ்நிலைகளில் நடைபெறும் இந்த ஒரே ஒரு போட்டியில் வெற்றி காண்பதற்கு முன்கூட்டியே பயணித்து, பயிற்சி போட்டிகளில் விளையாட தவறியதே இந்தியாவின் தடுமாற்றத்திற்குக் காரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com