டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நான்காவது நாள் ஆட்டம் எப்படி இருக்கும்?

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நான்காவது நாள் ஆட்டம் எப்படி இருக்கும்?

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. போட்டியின் முடிவை உறுதி செய்யும் நாள் என்பதால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க முற்படலாம். இதை இந்தியப் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்த முனைப்புக்காட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வெளியேறினர். சிறப்பாக ஆடிய ரஹானே 89 ரன்களிலும் ஷர்துல் தாகூர் 51 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இதன் மூலம் முதல் இன்னிங்சில் 296 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது இந்திய அணி. இதன்மூலம் இந்திய அணி 173 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் அவுட்டாகினார். உஸ்மான் கவாஜா 13 ரன்னில் வெளியேறினார். அடுத்து லபுசேனுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 3வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 34 ரன்னில் வீழ்ந்தார். அடுத்ததாக களமிறங்கிய கேமரூன் கிரீன் 7 ரன்கள் எடுத்தார். லபுசேனே 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆஸ்திரேலியா அணி தற்போது 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து, 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்தியா சார்பில் சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி வேகமாக ரன்களை சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பேட்ஸ்மேன்கள் அதிரடியைக் கையாண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளனர். இதேபோக்கில் இன்றைய நான்காவது நாள் ஆட்டமும் அமைந்தால், ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்குள் ஆட்டமிழக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், லாபுஷேன், அலெக்ஸ் காரே, கேமரூன் க்ரீன் போன்றவர்களை இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினால், ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடலாம். இது நடக்கிறது என்று பார்ப்போம்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com