அதிமுகவின் ஊழலை மறைக்க அவதூறு பேசுவதா? ஈபிஎஸ்-க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

அதிமுகவின் ஊழலை மறைக்க அவதூறு பேசுவதா? ஈபிஎஸ்-க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அவதூறு பரப்புவதா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தியிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு அடித்து விரட்டியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019-ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு, ’எடுபடாத மாநாடு’ என விமர்சித்துள்ள அமைச்சர்,போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து கணக்கு மட்டுமே காட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் நாள்தோறும் உழைக்கும் முதலமைச்சரைப் பார்த்து தரக்குறைவாக பேசுவதன் மூலம், அரசியல் நாகரிகத்திற்கும் தனக்கும் ஆயிரம் மைல் தொலைவு என்பதை எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியின் ஊழலை மறைக்க இதுபோன்ற அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com