நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்

ஆர்.எஸ்.பாரதிக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கண்டன அறிக்கை!

”திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி நாகா மக்களைப் பற்றி இழிவாகப் பேசியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது” என்று நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

”அனுமானமாக ஒட்டுமொத்த நாகர் இனத்தவரையும் நாய்க்கறி உண்பவர்கள் என்று முத்திரை குத்துவது, மோசமானதும் மட்டுமின்றி, பல்வேறு வகைப்பட்ட - மாறுபட்ட கண்ணியமான நம்முடைய கலாச்சாரத்தைக் கேவலப்படுத்துகிறது.

நாகாலாந்து என்பது ஒவ்வொரு பழங்குடியினக் குழுவும் அதனதன் தனித்துவமான பண்பாடு, பாரம்பரியத்தைக் கொண்ட உயர்ந்த ஒரு மரபின் தாயகம் ஆகும். சிலரின் உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த மக்களையும் ஒரே மாதிரியாகக் கருதுவதும் சிறுமைப்படுத்துவதும் அவமரியாதைக்குரியது மட்டுமல்ல, தவிர்க்கமுடியாமல் நம் அடையாளத்தைச் சிதைப்பதற்கும் வழிவகுக்கிறது.

உணவுப் பழக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்; அதன் அடிப்படையில் ஒருவரின் குணத்தையோ கண்ணியத்தையோ மதிப்பையோ வரையறுக்கக் கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அத்தகைய விருப்பங்களை அடிப்படையாக வைத்து யாரையும் அவமதிக்கவோ அவமரியாதை செய்யவோ கூடாது.

ஒருவரின் பண்பாடு, நெறிமுறைகள், சமூகத்திற்கான பங்களிப்பு ஆகியவையே அவரை யார் எனக் காட்டுமே தவிர, அவரின் உணவுப் பழக்கம் அல்ல.

நாகர்கள் கண்ணியமும் பண்பாடும் கொண்ட- தம் மரபுப் பண்பாட்டுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதை நான் மரியாதையுடன் வலியுறுத்துக் கூறுகிறேன். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சானது உணவுப் பழக்கவழக்கத்தின்படி ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையே சிறுமைப்படுத்தும் துரதிர்ஷ்டவசமான பொதுமைப்படுத்தல் ஆகும்.

நாகாலாந்தில் தமிழர்கள் அமைதியாகவும் பரஸ்பர மதிப்பு மரியாதையுடனும் கொண்ட சூழலில் வாழ்ந்துவருகின்றனர்; இதைப்போலவே நாகர்களும் தமிழ்நாட்டில் அமைதியாகவும் கண்ணியமாகவும் படிப்பிலும் பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகாலாந்திலும் தமிழ்நாட்டிலும் தமிழர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே நிலவும் சமூக நல்லிணக்கமானது, இரண்டு இனத்தவரும் பரஸ்பரம் இரு இனங்களின் மகத்தான பாரம்பரியத்தின் மீது கொண்டுள்ள அளப்பரிய மரியாதைக்குச் சான்றாக உள்ளது.

மேலும், ஆளுநர் ஆர்.என். ரவி நாகாலாந்தில் இருந்து துரத்தப்பட்டார் என்கிற அநியாயமான கருத்து, அவமரியாதை மட்டுமல்ல, உண்மைக்குப் புறம்பானதும்கூட. நான் சந்தித்து உரையாடிய பெரும்பாலான நாகர் இனத்தவர் அவர்மீது அபிமானமும் மரியாதையும் கொண்டவர்களாகவே உள்ளனர்.

நாகாலாந்து ஆளுநர் என்ற முறையில், பாரதியின் இந்தக் கருத்துகளைக் கண்டிப்பதோடு, இதுபோன்ற நடத்தைகளை ஊக்கப்படுத்தாமல், பரஸ்பர மதிப்புமரியாதையை மேம்படுத்தவும், ஒற்றுமையை வலுப்படுத்தவும் வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

பலதரப்பட்ட பண்பாடுகளைப் பற்றி விவாதிக்கும்போது குறிப்பாக தலைமைப் பதவியில் இருப்பவர்கள் கவனத்தோடும் அனைத்து சமூகங்களுக்கிடையில் பரஸ்பர மரியாதையை ஊக்குவிக்கும்படியாகவும் இருக்கவேண்டும். பாரதியின் கருத்தை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உண்மையான குரல் அல்ல என்பதால், நாகாலாந்து மக்கள் இதைப் புறக்கணிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று இல.கணேசன் தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com