மக்களவைத் தேர்தலில் பாஜக அணியில் இடம்பெற்றுள்ள ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அவரே போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலையிலிருந்து பாஜக அணியின் தொகுதிப்பங்கீடு விவரங்கள் வரிசையாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இரவு 7 மணி அளவில் பாஜகவின் 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதையடுத்து கூட்டணி கட்சிகளின் தொகுதி விவரங்கள் வெளியிடப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
அதன்படி சிறிது நேரத்திற்கு முன்னர் ஊடகத்தினரிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம் இராமநாதபுரம் தொகுதியில் தானே போட்டியிடப் போவதாகத் தெரிவித்தார்.
மேலும், பா.ஜ.க. கூட்டணியில் தினகரனின் அ.ம.மு.க. கட்சிக்கு தேனி, திருச்சி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை தொகுதியில் தேவநாதனின் கட்சி போட்டியிடுகிறது.
வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம் கட்சியின் சார்பில் அவரே போட்டியிடுகிறார்.
த.மா.கா.வுக்கு தூத்துக்குடி, ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜான்பாண்டியன் கட்சி தென்காசியில் போட்டியிடுகிறது.
பாமகவுக்கு திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள தொகுதிகளில் குறிப்பாக மேற்கு மாவட்டங்களை பாஜக முதன்மையாக கவனம் செலுத்தி தன் பக்கமே வைத்துக் கொண்டுள்ளது. அக்கட்சி மொத்தம் 20 இடங்களில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.