அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

இலங்கைக் கூட்டம்- நடந்தது இதுதான்: அமைச்சர் தென்னரசு விளக்கம்!

இலங்கை மலையகத் தமிழர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்த்துச்செய்தி வாசிக்கப்படாதது, கடைசி நேரம்வரை அனுமதி அளிக்காமல் இருந்தது ஆகியவை பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். 

சொந்தத் தொகுதியான விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் இன்று மதியம் அவர் ஊடகத்தினரைச் சந்தித்தார்.

அப்போது கூறியதாவது:

“ இலங்கையில் மலையக தமிழர்கள் அங்கே குடியேறி தோட்டப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட 200வது ஆண்டு விழாவிற்காக முதலமைச்சர் அழைக்கப்பட்டார். கடந்த 2ஆம் தேதி இலங்கையின் தலைநகரான கொழும்புவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் முதலமைச்சர் கலந்துகொள்ள வேண்டும் என்றும் முறையான அழைப்பு தமிழ்நாடு அரசிற்கு அனுப்பப்பட்டது. அவர் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள இயலாத நிலையில், அவருக்கு பதிலாக தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக என்னை அந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு பணித்திருந்தார்.

அங்கு இருக்கக்கூடிய விழா ஏற்பாட்டாளர்களுக்கு முறைப்படி நாங்கள் தெரிவித்தோம். இதில் மிக முக்கியமாக, முதற்கட்டமாக, இலங்கை பயணம் மேற்கொள்வதற்காக ஒன்றிய அரசின் வெளிவிவகாரத் துறையிலிருந்து உரிய அனுமதியினை பெறுவதற்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி உரிய வழிமுறைப்படி விண்ணப்பம் நம்முடைய பொதுத்துறையால் அனுப்பப்பட்டுவிட்டது. விமான டிக்கெட்டுகள் எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு, political clearance என்று சொல்லக்கூடிய வெளிவிவகாரத்தின் அனுமதி கிடைப்பதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்.

விழா 2-ஆம் தேதி மதியம். ஆனால் 1-ஆம் தேதி இரவு ஒன்பது மணிவரை அதற்கான அனுமதி ஒன்றிய அரசின் வெளிவிவகாரத் துறையிடமிருந்து நமக்கு அதற்கான அனுமதி வரவில்லை. நான் அன்றைய தினம் ஏறத்தாழ எட்டு, எட்டரை மணிவரை தலைமைச் செயலகத்தில் தான் இருந்தேன். தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய அதிகாரியிடத்தில் அதற்கான ஒப்புதல் வந்துவிட்டதா? என்று விசாரித்தபோது இதுவரை வரவில்லை என்று தெரிவித்தார்.

மறுநாள் காலை விமானத்தில் நான் கொழும்பு செல்வதற்கான பயணத் திட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், முதல் நாள் 1-ஆம் தேதி இரவு எட்டரை மணி வரை நான் தலைமைச் செயலகத்தில் இருக்கும்வரை வரவில்லை. அதற்குப்பிறகு நான் அதிகாரிகளிடத்தில் கேட்டு, இதற்கு பிறகு அத்தகைய அனுமதி கடிதம் வருவது கடினம் என்ற சூழ்நிலையில், அதற்கு பின்பு நான் இலங்கையில் இருக்கக்கூடிய விழா ஏற்பாட்டாளர்களை அழைத்து, சூழ்நிலையை அவர்களிடத்தில் விளக்கி, ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி இதுவரை வராத காரணத்தால் நான் பயணத்தை மேற்கொள்ள இயலாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி, என்னுடைய பயண ஏற்பாடுகளை நான் இரத்து செய்துவிட்டு வீடு திரும்பினேன். அதற்குப்பிறகு ஒன்பதரை மணிக்கு மேல் அனுமதி வந்திருக்கிறது.

2-ஆம் தேதி காலை சுமார் 11 மணிக்கு இலங்கையிலிருந்து நமது முதலமைச்சர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு இதுபோல தமிழ்நாடு அமைச்சர் அவர்களும் வர இயலாத சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்துச் செய்தியினை அனுப்பிட வேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.  சுமார் 11 மணிக்கு செய்தி கிடைத்த உடன் பல்வேறு அலுவல்களுக்கிடையே, இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை கருதி உடனடியாக முதலமைச்சர் நேரம் ஒதுக்கி அதற்கான வாழ்த்துச் செய்தியும் உடனடியாக தயார் செய்து அங்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். அந்த வாழ்த்துச் செய்தி இங்கிருந்து பகல் 2 மணிக்குள் அவர்களுக்கு கிடைத்துவிட்டது. அவர்கள் நம்மிடத்தில் தெரிவித்தது நிகழ்ச்சியில் முதலமைச்சர் அவர்களுடைய வாழ்த்துச் செய்தி ஒளிபரப்பப்படும் (Video clipping) என்று சொன்னார்கள். அங்கே இருக்கக்கூடிய பல்வேறு செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு அது அனுப்பப்பட்டிருக்கிறது.

ஆனால் என்னவாயிற்றது என்றால், என்ன காரணத்தினாலோ முதலமைச்சர் அவர்களுடைய வாழ்த்துச் செய்தி அந்தக் கூட்டத்தில் அவர்களால் ஒளிபரப்பப்படவில்லை. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டிலிருந்தும், இந்திய அளவிலும் அந்நிகழ்ச்சியில்  பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால் என்ன காரணத்தினால் முதலமைச்சர் அவர்களுடைய வாழ்த்துச் செய்தி அங்கே ஒளிபரப்ப இயலவில்லை என்பது எனக்கு தெரியவில்லை.

அதற்கு என்ன காரணம் என்பதை பத்திரிகையாளர்களாகிய உங்கள் யூகத்திற்கு நான் விட்டுவிடுகிறேன். ஆனால் அதற்கு பிறகு முதலமைச்சர் அவர்களுடைய வாழ்த்துச் செய்தி பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளியே வந்திருக்கிறது. இதுதான் இந்த விஷயத்தில் நடந்தது.” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். 

 

 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com