பழ. நெடுமாறன்
பழ. நெடுமாறன்

உச்சநீதிமன்றம் கூறியபிறகும் 4 பேர் சிறை தொடர்வதா?- மனிதநேயம் அற்றது என நெடுமாறன் சாடல்!

உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பிறகும் நால்வர் சிறையில் தொடர்வது மனிதநேயத்திற்கு எதிரானது என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து 26 தமிழர் உயிர்காப்பு வழக்கு நிதிக்குழுவின் தலைவர் என்கிற பெயரில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதன் விவரம்:

“இராசீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 31 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட முருகன் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரும், அவரது மனைவியான நளினியும் தங்களது மகள் வாழும் இலண்டனுக்கு அனுப்பி வைக்குமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

ஆனால், அவர்களை இலண்டன் அனுப்ப முடியாது என இந்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பிடிவாதமாகத் தெரிவித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஏற்கெனவே 26பேருக்கும் தூக்குத் தண்டனை கீழ்நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட போது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தோம். அதில் 19பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. விடுதலையானவர்களில் 9பேர் ஈழத் தமிழர்கள். அவர்களுடைய உறவினர்கள் வாழும் வெளிநாடுகளுக்குத் தங்களை அனுப்ப வேண்டும் என அவர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு, அவர்களை அவ்வாறே அனுப்புமாறு உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அதைப்போல இப்போது சிறப்பு முகாமில் உள்ள நால்வரையும் விடுதலை செய்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கவேண்டியது இந்திய அரசின் நீங்காத கடமையாகும்.

31 ஆண்டு காலமாக முருகனும் மற்றும் மூவரும் சிறைக் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனால், உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பிறகும்கூட, அவர்கள் இன்னமும் சுதந்திரமாக நடமாட முடியாத சூழல் நீடிப்பது மனிதநேயத்திற்கு முற்றிலும் எதிரானதாகும்.

எனவே இந்த பிரச்சனையில் இந்திய அரசை வலியுறுத்தி சிறப்பு முகாமில் உள்ள நால்வரையும் விடுதலை செய்து, அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க தமிழக முதலமைச்சர் உதவவேண்டும்.”என்று நெடுமாறன் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com