முதலமைச்சர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம், கனகராஜ் சந்திப்பு
முதலமைச்சர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம், கனகராஜ் சந்திப்பு

உயிருக்கு அச்சுறுத்தல் - மதுரை துணைமேயருக்கு பாதுகாப்பு தர முதல்வரிடம் நேரில் கோரல்!

வாச்சாத்தியில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வனத்துறை, காவல்துறை கொடூரர்கள் நிகழ்த்திய வன்கொடுமைகளை எதிர்த்து வாச்சாத்தி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் 30 ஆண்டு காலமாக போராடி குற்றவாளிகளில் 269 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நீண்ட போராட்ட பயணத்தில் தொடக்கம் முதல் பணியாற்றிய பெ. சண்முகத்துக்கு தமிழ்நாடு அரசு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இதையொட்டி முதலமைச்சர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் ஆகியோர் நேற்று சந்தித்து நன்றியைத் தெரிவித்தனர்.

மேலும்,

“மிக்ஜம் புயல் மற்றும் கன மழையினால் சென்னை உள்ளிட்டு அருகமை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போதும், தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போதும் தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள், அனைத்து துறை ஊழியர்களும் களத்தில் நின்று துரிதமாக பணியாற்றி வெற்றிகரமாக மக்களின் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டனர். அத்தோடு ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளுக்கு மறு சீரமைப்பு பணிகளுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத நிலையில் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியில் மக்களுக்கு ரூ. 6,000/- மற்றும் குறைந்த பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் ரூ. 1,000/- நிவாரண நிதி அளித்து மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டியது.” என்று பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்தனர்.

”மதுரை மாநகராட்சி, துணை மேயர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் தி. நாகராஜன் அவர்களை சமீபத்தில் சமூகவிரோத சக்திகள் கொலைசெய்யும் நோக்கோடு பயங்கர ஆயுதங்களுடன் கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற போது நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்; சமூக விரோத சக்திகள் எப்போது வேண்டுமானாலும் தோழர் தி. நாகராஜன் மீது மீண்டும் கொலைவெறித் தாக்குதல் தொடுக்கும் அபாயம் இருப்பதால் அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.” என்றும் அவர்கள் முதலமைச்சரிடம் வலியுறுத்தினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com