காவிரி டெல்டா மாவட்டங்களில் 11ஆம் தேதி முழு அடைப்பு!
காவிரியில் நீர் திறக்காத கர்நாடக அரசைக் கண்டித்து வரும் 11ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு நடத்தப்பட உள்ளது.
பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் இணைந்து காவிரிப் படுகைb பாதுகாப்பு கூட்டியக்கம் என்கிற பெயரில், முக்கியமாக தி.மு.க., சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளின் விவசாயிகள் சங்கங்கள் இதை முன்னெடுத்துள்ளன.
உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி நீரைத் திறக்கவும், கர்நாடகத்தில் தமிழகத்துக்கு எதிராகப் போராட்டங்களைத் தூண்டிவிடும் பாஜக, மற்ற அமைப்புகளைக் கண்டித்தும், எஞ்சிய சம்பா பயிர்களைப் பாதுகாக்க காவிரியில் நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவிடவும் கோரியும், தமிழக அரசு பல முறை கோரியும் பாராமுகமாக இருக்கும் மைய அரசைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெறுவதாக தி.மு.க.வின் ஏ.கே.எஸ்.விஜயன், சிபிஎம் பெ.சண்முகம் முதலிய தலைவர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசு அலுவலகங்களின் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
வணிகர் சங்க அமைப்புகளின் தலைவர்களும் இப்போராட்டத்தை ஆதரிப்பதாக உறுதியளித்திருப்பதாக பெ.சண்முகம் கூறினார். விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா இருவரும் உடனடியாக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.