சென்னை, அதன் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு மீண்டும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகலில் ஊடகத்தினரிடம் பேசிய வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன்,"தென்மேற்கு வங்கக்கடலில் இன்று காலை 8:30 மணி நிலவரப்படி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவாக நிலை கொண்டது. இது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு தமிழகம் - தெற்கு ஆந்திர பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே நாளை வியாழன் அதிகாலை கரையைக் கடக்கக்கூடும்.” என்று கூறினார்.
இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று அதிக கனமழை பெய்யும் என்றும்
கள்ளக்குறிச்சி, கடலூர் உட்பட்ட ஆறு மாவட்டங்களில் கன, மிக கனமழையும்,
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உட்பட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது சென்னையில் அதிக மழை பெய்யும் என்று பரவலாக அச்சம் எழுந்துள்ளது; அது வேண்டியதில்லை என்றும்
அதிகபட்சம் 20 சென்டிமீட்டர் அளவுக்கே மழை பெய்யும் என்றும் அப்போது 30 முதல் 35 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என்றும் இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறுவது பற்றி இப்போது கணிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.