வைகோ
வைகோ

தமிழக நூற்பாலை ஏற்றுமதி 28%-க்குக் குறைந்துள்ளது - நாடாளுமன்றத்தில் வைகோ வேதனை!

தமிழகத்தில் நூற்பாலைத் தொழில் பல மாதங்களாக வரலாறு காணாத இழப்பைச் சந்தித்து வருகிறது; கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக நூல் மற்றும் ஜவுளி ஏற்றுமதி சுமார் 28 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேதனையுடன் எடுத்துரைத்தார். 

பொருளாதார நிலை குறித்த விவாதத்தில் நேற்று அவர் உரையாற்றியபோது, ”இந்தியாவின் தற்போதைய ஜிடிபி 3.75 டிரில்லியன் அமெரிக்க டாலர்; இது 2025இல் 5 டிரில்லியன்களாக இருக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இந்த வளர்ச்சியால் யாருக்கு லாபம்? இது வேலைவாய்ப்புகள் இல்லா வளர்ச்சி. அக்டோபர் 2023 நிலவரப்படி, வேலையின்மை 10.05 சதவீதமாக உள்ளது. படித்த வேலையில்லாத இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடி வேலை இழப்பு ஏற்படுகிறது. தொழிலாளர் ஊதியமும் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.”என்று கூறினார். 

தமிழ்நாட்டைப் பற்றிப் பேசுகையில், “ சுமார் 10,000 ஸ்பின்டில்களைக் கொண்ட ஒரு ஆலை ஒரு நாளைக்கு 2,500 கிலோ நூல் உற்பத்தி செய்யும், இதனால்ஒரு நாளைக்கு 1,00,000/- ரூபாய் நட்டம் ஏற்படுகிறது.  ஆலைகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், வங்கிக் கடன் திருப்பிச் செலுத்துதல் (முதல் மற்றும் வட்டி), பருத்தி கொள்முதல் கட்டணம், மின் கட்டணம், ஜி.எஸ்.டி., இ.எஸ்.ஐ., பி.எப். போன்ற செலவிலனங்களைச் சரிகட்ட முடிவதில்லை.

இதே நிலை நீடித்தால், நூற்பாலைகள் விரைவில் செயல்படாத நிலைக்கு மாறி, ஆலைகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் ஏற்படும். எனவே,பருத்தி விலை மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநில நிதியின் கட்டமைப்பு மிகவும் பாதிக்கப்பட்டு, வருமானம் குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வருவாயில் மாநிலங்களுக்கு முறையான விநியோகம் செய்யப்படுவது இல்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை விட, பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்கும் மாநிலங்களுக்கு சாதகமான நிலை உள்ளது. தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தும், ஜிஎஸ்டி வரி பங்கீட்டை முழுவதுமாக ஒன்றிய அரசு தரவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக்ஜம் புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பேரழிவை உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த 6 நாட்களாக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களின் படகுகளும் வலைகளும் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

வெள்ள நீர் விளை நிலங்களில் தேங்கியுள்ளதால், விவசாயிகள் பயிர்களை இழந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகரில் பெய்த வரலாறு காணாத கனமழையால், நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கி தமிழ்நாடு அரசு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது. இருந்தாலும், மீட்புப் பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.

எனவே, ஒன்றிய அரசு நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை தமிழக அரசிற்கு வழங்கி, மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள உதவிசெய்ய வேண்டும்.” என்று வைகோ பேசினார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com