சென்னை, கலைவாணர் அரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட வழங்கல் விழாவில்...
சென்னை, கலைவாணர் அரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட வழங்கல் விழாவில்...

தொண்டை வலியுடன் அரசு நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

தொண்டை வலியுடனேயே முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இன்று மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று காலையில் மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட வழங்கல் விழா நடைபெற்றது. சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி, உயரதிகாரிகள் பலரும் நிகழ்வில் பங்கெடுத்தனர். 

இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது:

”கடந்த சில நாட்களாக காய்ச்சலும், தொண்டை வலியும் எனக்கு இருந்தது. இப்போது காய்ச்சல் குறைந்துவிட்டாலும், தொண்டை வலி மட்டும் இருக்கிறது. என்னுடைய குரலைக் கேட்கும்போதே உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான், சில நாள்களாக வீட்டிலேயே முழு ஓய்வு எடுத்துக்கொண்டேன். இந்த வாரம் முழுக்க ஓய்வெடுக்கவேண்டும் என்று என்னுடைய மருத்துவர்கள் சொன்னாலும், என்னால் மக்களைச் சந்திக்காமல் இருக்க முடியவில்லை.

அதனால்தான், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி மூலமாக இணைந்திருக்கின்ற உங்களை எல்லாம் பார்க்க வந்துவிட்டேன். தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது. அதனால்தான் வந்துவிட்டேன். உங்களைப் பார்க்கும்போது என்னுடைய உடல் வலி எல்லாம் குறைந்து மனது மகிழ்ச்சியில் நிறைந்துவிட்டது. இந்த ஆயிரம் ரூபாயை வாங்கும்போது உங்களுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியைவிட, கொடுக்கும்போது, எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியைவிட சிறந்த மருந்து எதுவாக இருக்கமுடியும்? அதனால்தான், மருத்துவர்கள் அறிவுரையையும் மீறி இந்த விழாவுக்கு வந்துவிட்டேன்.

ஒரு திட்டம் பெற்ற வெற்றியைத் தொடர வேண்டுமென்றால், அதை தொடர்ந்து கவனிக்கவேண்டும். அதனால், முகாம்களில் விண்ணப்பித்து, தகுதி இருந்தும் தேர்ந்தெடுக்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கும், முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், பதிவாகாமல் போன விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களும் தரவுகளை தொடர்ந்து சரிபார்க்கப்பட்டது. இதற்காக மட்டுமே அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏறக்குறைய 54,220 அலுவலர்கள் மாவட்ட அளவிலும், கிராம அளவிலும் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சரிபார்த்து ஒரு பட்டியலை எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அதில் இந்த மாதத்திலிருந்து, 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். உங்களுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் '1000 ரூபாய் இனி பெறப்போகிறார்கள்.

விண்ணப்பித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற காரணத்தை, குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தோம். காரணம் ஏற்புடையதாக இல்லையென்றால், மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு கொடுத்தோம். அதைப் பயன்படுத்தி, மேல்முறையீடு செய்தார்கள். அவர்களுடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்துக்கொண்டு இருக்கிறோம். சரிபார்ப்பு அலுவலர்கள் களஆய்வு செய்து, தகுதிபெறும் மகளிருக்கு, வருகிற டிசம்பர் மாதத்திலிருந்து 1000 ரூபாய் வழங்கப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்கின்ற வரைக்கும், திராவிட மாடல் அரசின் இந்தப் பணி நிச்சயம் தொடரும்!

இதேமாதிரியான திட்டம், வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டபோது, பொதுமக்கள் கூட்ட நெரிசல்களில் எப்படிப்பட்ட இன்னல்களுக்கும், அலைக்கழிப்புக்கும் ஆளாகினார்கள் என்று ஊடகங்களில் வந்தது. அதுமாதிரி எந்த நிகழ்வும் இல்லாமல் அமைதியான முறையில் அனைத்து தகுதியுள்ள மகளிரையும் இந்தத் திட்டம் சென்று சேர்ந்திருக்கிறது. எந்தவிதமான சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்திக்காட்டிய பெருமை, அரசு அலுவலர்களையும், பணியாளர்களையும்தான் போய்ச் சேரும்!

இந்தத் திட்டத்திற்குப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் தம்பி உதயநிதி, அரசு அலுவலர்களுடன் இந்தத் திட்டச் செயல்பாடு குறித்து தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள நடத்திக்கொண்டே இருப்பார். தொடர்ந்து களத்திலும் ஆய்வு செய்துகொண்டு இருக்கிறார். அது இனியும் தொடரும். அதில் எந்தவித சந்தேகமும் இருக்கவேண்டிய அவசியமில்லை.

ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டும் என்றால், அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் முதல், தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் என அனைத்து நிலை பணியாளர்களும் தொடர்ந்து உழைத்ததின் விளைவுதான், இந்த மாபெரும் வெற்றி. இது, ஊர் கூடி இழுத்த தேர். ஊருக்காக நம்முடைய திராவிட மாடல் அரசு, உருவாக்கிய தேர். மக்களின் தேர் இது. தேசிய ஊடகங்களும், பிற மாநில அரசுகளும் கூட நம்முடைய இந்த திட்டமிடல், நிர்வாக நடைமுறையை வியந்து பார்க்கிறார்கள். அந்த வகையில், இந்தத் திட்டம் இவ்வளவு பெரிய இமாலய வெற்றி.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com