மணலி சடையங்குப்பத்தில்  புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை அளித்த தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா.
மணலி சடையங்குப்பத்தில் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை அளித்த தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா.

நிவாரணமாக 4,35,000 கி.கி. அரிசி, 10,77,000 பாட்டில் குடிநீர்- 34 மாவட்டங்கள் தந்தது!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.17.60 கோடிமதிப்பிலான நிவாரணபொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அரசுச் செய்திக்குறிப்பு ஒன்றில்,

“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  மிக்ஜாம் புயல் மற்றும் மழையினால் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உதவுவதற்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை  ரிப்பன் கட்டடத்திலுள்ள பெருநகர சென்னைமாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 06.12.2023 முதல் இயங்கி வருகிறது. பல்வேறு மாவட்ட நிர்வாகங்களின் வாயிலாக பெறப்படும் நிவாராணப் பொருட்கள் வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு, தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் மாவட்ட அலுவலகங்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.               

இதுவரை 10,77,000  குடிநீர்பாட்டில்கள், 3,02,165 பிரெட் பாக்கட்டுகள், 13,08,847 பிஸ்கட் பாக்கெட்டுகள், 73.4 டன் பால்பவுடர்,  4,35,000 கிலோ அரிசி, 23,220 கிலோ உளுந்து மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் பெறப்பட்டுள்ளன. 

மேலும் 82,400 பெட்ஷீட்டுகள் மற்றும் லுங்கிகள்,நைட்டிகள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள், குவளைகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் என ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

34 மாவட்டங்களிலிருந்து இவை பெறப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட15 மண்டலங்கள், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகள்,  ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகள், குன்றத்தூர் நகராட்சி ஆகிய பகுதிகளில் அளிக்கப்பட்டன.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட வாட்சாப் எண் மூலம் தோராயமாக ரூ.50 இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு அவையும் தேவையான பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com