நீலகிரி- சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி பலி! உயிர் அச்சத்தில் மக்கள் பீதி!!

நீலகிரி- சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி பலி! உயிர் அச்சத்தில் மக்கள் பீதி!!

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதியில் மலைத்தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது. அங்குள்ள மேங்கோரேஞ்சு மலைத்தோட்டத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கங்குவார் பணிபுரிந்துவருகிறார். இவரின் மகளான  3 வயது சிறுமி நான்சி, பால்வாடியில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது காட்டுப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை குழந்தையைத் தாக்கியது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரட்டியதும் அது குழந்தையை விட்டுவிட்டு ஓடிவிட்டது. அங்கிருந்தவர்கள் குழந்தையை பந்தலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்க தூக்கிச்சென்று ஓடினர். ஆனால், குழந்தை முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

ஏற்கெனவே கடந்த 4ஆம் தேதி நான்கு வயது சிறுமி ஒருவரும், அதற்குமுன் பெண்கள் இருவரும் சிறுத்தையால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர். கோவையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்தார். 

இந்நிலையில் சிறுமி உயிரிழந்ததால் கொதிப்படைந்த மக்கள், பந்தலூர், தேவாலா, உப்பட்டி, கொளப்பள்ளி ஆகிய இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கர்நாடகம், கேரளம், தமிழ்நாட்டு எல்லையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

சில மாதங்களாகவே இந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டமும் தாக்குதலும் அதிகரித்துவருவதைத் தடுத்துநிறுத்துமாறு அரசுக்கு பல தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர். மக்கள் உயிர் அச்சத்துடனேயே நடமாடிவருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com