பொங்கலை முன்னிட்டு வேலைநிறுத்தத்தைத் தள்ளிவைத்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினருடன் வரும் 19ஆம்தேதி மீண்டும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு 27 தொழிலாளர் சங்கங்களுக்கும் போக்குவரத்துக் கழகத்தின் எட்டு மண்டல மேலாண்மை இயக்குநர்களுக்கும் தொழிலாளர் நலத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையானது 19ஆம்தேதி மதியம் 12 மணியளவில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் என்று தனி இணை ஆணையர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த நவம்பர் முதல் மூன்று நாள்களுக்கு முன்னர்வரை மூன்று சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், உடன்பாடு எட்டப்படவில்லை. அதையடுத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றதையடுத்து, பொங்கலையொட்டி 19ஆம் தேதிவரை வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கு ஒப்புக்கொண்ட தொழிலாளர் சங்கத்தினர், மீண்டும் வேலைக்குத் திரும்பினர்.