பேய் மழை- விரைந்து மக்களை காக்கச் சொல்லும் வி.சி.க.!

பேய் மழை- விரைந்து மக்களை காக்கச் சொல்லும் வி.சி.க.!

தென் கோடி மாவட்டங்களில் பேய் மழை,பெரு மழையால் ஏற்பட்டுள்ள பெருந்துயரிலிருந்து மக்களை விரைந்து மீட்க வேண்டும் என தமிழக அரசுக்கு  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில்,

”நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

வரலாறு காணாத வகையில், சுமார் 100செமீ. மழை பதிவாகியிருப்பது, யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாத அதிர்ச்சியளிக்கும் பேரிடராகும்.  இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பும் மதிப்பிடமுடியாத வகையில் உள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் என்னும் வானிலையால் அம்மாவட்டங்களிலுள்ள அணைகட்டுகள் பல திறந்து விடப்பட்டுள்ளன். அதனால், தாமிரபரணி உள்ளிட்ட  பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில்,  பொதுமக்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களின்றி பரிதவிக்கின்றனர்.

அரசு தமது மீட்பு பணிகள், நிவாரணப் பணிகளை மேலும் திறம்பட ஆற்றிட வேண்டுமென  கேட்டுக் கொள்கிறோம்.” என்று கூறியுள்ளார். 

”மென்மேலும் பெருமழை தொடர்வதால் பீதியில் உறைந்து கிடக்கும் மக்களைத் பெருந்துயரிலிருந்து விரைந்து மீட்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

பாதிக்கப்படாத பிற மாவட்டங்களைச் சார்ந்த விசிக தோழர்கள், குறிப்பாக, முன்னணி பொறுப்பாளர்கள் இயன்ற வகையில் மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.”என்றும் தொல். திருமாவளவன் தன் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com