மழையில் தொடர் விபத்து: 5 பேருந்துகள், லாரி மோதி 37 பேர் காயம்

மழையில் தொடர் விபத்து: 5 பேருந்துகள், லாரி மோதி 37 பேர் காயம்

திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் அடுத்தடுத்து 5 பேருந்துகள், ஒரு லாரி மோதி தொடர் விபத்துகள் நிகழ்ந்தன. இதில் மொத்தம் 37 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடிக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது.

இந்தப் பேருந்து நேற்று அதிகாலை 4 மணியளவில் திருச்சியை அடுத்து, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செட்டியாபட்டி கோரையாற்று பாலம் அருகே லாரி ஒன்றை முந்த முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கோரையாற்றுப் பாலத்தின் தடுப்புச் சுவரில் பேருந்து மோதியது. அதன் பின்னால் சென்றுகொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள், சாயல்குடிப் பேருந்துடன் ஒன்றன்பின் ஒன்றாக மோதின.

விபத்து குறித்து பேருந்துகளின் ஓட்டுநர்கள் கீழே இறங்கி ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்தபடி இருந்தனர்.

அப்போது திருச்சி சுற்றுவட்டாரத்தில் நல்ல மழை பெய்துகொண்டிருந்த நிலையில், மூன்றாவதாக நின்றுகொண்டிருந்த பேருந்தின் பின்னால் ஒரு லாரி மோதியது.

அதையடுத்து சிறிது நேரத்தில் அந்த லாரி மீது இன்னொரு தனியார் பேருந்து மோதி நின்றது.

அடி மேல் அடி என்பதைப் போல, அந்தப் பேருந்தின் மீது இன்னொரு தனியார் சொகுசுப் பேருந்து வேகமாக மோதியது.

ஐந்து பேருந்துகளும் ஒரு லாரியும் மோதியதில் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள், 3 பெண், 2 ஆண் பயணிகள் என 7 பேர் தலை, கைகால்களில் காயம் அடைந்தனர்.

மற்ற 30 பயணிகள் இலேசான காயங்களுடன் பெரும் பாதிப்பில்லாமல் தப்பினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com