சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

”முதல்வரின்கீழ் செயல்படும் மெட்ரோ ரயிலில் 10 ஆண்டுகளாக போனஸ் தராமல் இருக்கலாமா?”

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் செயல்படும் துறையின் ஒரு நிறுவனமான சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்களுக்கு 10 ஆண்டுகள் போனஸ் வழங்கப்படாமல் இருப்பதாக சி.ஐ.டி.யு. அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வெளியிட்ட அறிக்கை:

“ சென்னை மெட்ரோ ரயில் கம்பெனி சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள லிமிட்டட் கம்பெனியாகும். இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாகவே ஒரு பைசாவும் போனஸாக வழங்கப்படவில்லை.

அரசிற்குச் சொந்தமான போக்குவரத்து கழகங்கள் என்கிற கம்பெனிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், மின் வாரிய தொழிலாளர்களுக்கும், குடிநீர், டாஸ்மாக், சிவில் சப்ளைஸ் போன்ற தொழில்களில் பணியாற்றுவோருக்கும் 10 சதத்திலிருந்து 20 சதம் வரை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் ரயில்வேயில் பணியாற்றுவோருக்கும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் தமிழக முதல்வரின் கீழ் செயல்படும் நிறுவனமாகும் இந்த நிறுவனம் தொழிலாளர் பணிநிலைகள்தொடர்பான எந்த சட்டத்தையும துளியளவும் மதிப்பதில்லை.

நிலையணைகள் சட்டம், பிழைப்பூதிய சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், தொழிற்தகராறு சட்டம் போன்ற அனைத்து சட்டங்களும் தங்களுக்குப் பொருந்தாது என்று இந்த நிறுவனம் கூறுகிறது. இதுசட்டத்தின் ஆட்சி நிலவுகிற நமது நாட்டிற்கு ஒவ்வாத சர்வாதிகார போக்காகும்.

இந்த நிறுவனம் தனது இயக்குநர் அவையில் CMRL HR Manual என்று ஒரு விதியை உருவாக்கிக் கொண்டு அதுதான் இந்த நிறுவனத்தில் பொருந்துகிற ஒரே சட்டம் என்று கூறுகிறது. இது எந்த சட்ட அங்கீகாரமும் இல்லாத தன்னிச்சையாக சுயமாக போட்டுக்கொண்ட விதியே தவிரவேறல்ல. இதன் மூலம் நாடாளுமன்றமும், தமிழக சட்டமன்றமும் நிறைவேற்றிய சட்டங்களையும் விதிகளையும் மீறிச் செயல்படுகிறார்கள்.

இதே வகையில்தான் சி.எம்.ஆர்.எல் தொழிலாளர்களுக்கு 10 ஆண்டுகளாக போனஸ் மறுக்கப்பட்டு வருகிறது. போனஸ் சட்டத்தின் உச்சவரம்பை கணக்கில் கொள்ளாமல் தான் அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் கருணைத் தொகையாக தீபாவளி நேரத்தில் வழங்கப்படுகிறது. இதர அரசு நிறுவனங்களில் செயலில் இருக்கும் இந்த நியதியும் தங்களுக்குப் பொருந்தாது என்று சி.எம்.ஆர்.எல் நிர்வாகம் தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது.

சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் இந்த தன்னிச்சைப் போக்கை முதல்வர் கைவிடச் செய்து சட்ட வரையறைக்குள் செயல்பட வைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். தங்கள் துறையைச் சார்ந்த இந்தத் தொழிலாளர்களுக்கும் போனஸ் கருணைத் தொகை வழங்கிட ஆணையிட வேண்டும் என்றும் முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து முதலமைச்சருக்கு மனுவும் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.” என்று சவுந்தரராசன்தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com