மின்கம்பத்தில் மோதிய பேருந்து ஓட்டுநர் ஷாக் அடித்து மரணம்- ரூ.2 இலட்சம் அறிவித்த முதல்வர்!

மின்கம்பத்தில் மோதிய பேருந்து ஓட்டுநர் ஷாக் அடித்து மரணம்- ரூ.2 இலட்சம் அறிவித்த முதல்வர்!

நீலகிரி மாவட்டம் சேரங்கோடு கிராமத்தில் அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.  

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு-1 கிராமம், மழவன் சேரம்பாடி என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் மாலை கூடலூர் - அய்யன்கொல்லி வழித் தடத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டிஎன்43 என் 0779 என்ற பதிவெண் கொண்ட அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அது மழவன் சேரம்பாடி பேருந்து நிறுத்தத்தின் அருகில் சென்றபோது எதிரில் வந்த வண்டிக்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் பக்கவாட்டில் ஒதுக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து மின்கம்பத்தில் மோதியது. மின்கம்பியின் காப்புகள் உடைந்ததில், மின்கம்பி வழியாக பேருந்துக்குள் மின்சாரம் பாய்ந்தது எனக் கூறப்படுகிறது.

அலறியடித்தபடி பயணிகள் கீழே இறங்கினர். இந்த விபத்தில் இருபது பயணிகள் காயமடைந்தனர். பேருந்து ஓட்டுநர் நாகராஜ் (வயது 49), சேரங்கோடு-1 கிராமம், பூஞ்சக்கொல்லி பகுதியைச் சேர்ந்த பயணி பாலாஜி (வயது 51) ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி அந்த  இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தாகவும் இருவரையும் இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com