100 நாள் வேலை- பா.ஜ.க.வைக் கண்டித்து 15இல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின்படியான 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு சிதைப்பதாகக் கூறி, வரும் 15ஆம் தேதி தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார்.
“காங்கிரஸ் ஆட்சியில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டதால் ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு இதை செயல்படுத்துகிறது. நாடு முழுவதும் தற்போது மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியின் மூலமாக மொத்த பயனாளிகள் 6.49 கோடி குடும்பங்களில் 10 சதவீதத்தினர் மட்டும்தான் 100 நாள் வேலைவாய்ப்பை இதுவரை பெற்றுள்ளனர். மீதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதால் கிராமப்புற தொழிலாளர்கள் புலம்பெயரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.” என்றும்,
”எனவே, 100 நாள் வேலைத் திட்டத்தைச் சிதைத்து, சின்னாபின்னமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பாக வரும்15ஆம்தேதி காலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.” என்றும் அழகிரி கூறியுள்ளார்.