ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் சம்பள பாக்கியைக் கேட்டு ஊரக வேலைத் திட்டப் பணியாளர்கள் போராட்டம்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் சம்பள பாக்கியைக் கேட்டு ஊரக வேலைத் திட்டப் பணியாளர்கள் போராட்டம்

100 நாள் வேலை- 22.22 இலட்சம் ஏழைகளுக்கு பாக்கியைத் தரவேண்டும் : இராமதாஸ்

தீப ஒளி திருநாளைத் கொண்டாட பணம் இல்லாமல் மக்கள் திண்டாடும் நிலையில், நிதி வழங்குவதை மத்திய அரசு தாமதிப்பது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.

”தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மேற்கொண்ட பணிகளுக்காக கிராமப்புற ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில், இதுவரை சுமார் ரூ.3000 கோடியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. 

மாநில அரசு அதன் பங்கை முழுமையாக வழங்கிவிட்ட நிலையில், மத்திய அரசு அதன் பங்கை இன்னும்  வழங்கவில்லை என்பதால், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணி செய்த ஏழைகளுக்கு  கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை.’ என்று அவர் தெரிவித்துள்ளார். 

”ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக  8 முதல் 15 நாட்களுக்கான ஊதியம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அதனால், கிராமப்புற மக்களின்  வாழ்வாதாரம் கடுமையாக முடங்கியிருப்பதுடன், ஊரக பொருளாதாரமும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. வேறு வாழ்வாதாரம் இல்லாத மக்கள் தான் இந்தத் திட்டத்தின்படி வழங்கப்படும் வேலைகளை செய்கின்றனர். அதன் மூலம் கிடைக்கும் ஊதியம்தான் அவர்கள் வீட்டில் அடுப்பு எரிய  உதவியாக உள்ளது. அந்த ஊதியத்தைக்கூட வழங்காமல் நிலுவை வைப்பது எவ்வகையிலும் நியாயமல்ல.” என்றும், 

”வேலை உறுதித் திட்ட ஊதியம்தான் லட்சக்கணக்கான குடும்பங்களின் பசியைப் போக்குகிறது என்பதை புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை 3 மாதங்களுக்கும் மேலாக மத்திய அரசு பாக்கி வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும். தமிழ்நாட்டில் 66.66 லட்சம் குடும்பங்கள் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு பெறுகின்றன. தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர், தாமதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.” என்றும், 

“2022-23ஆம்  ஆண்டில் இந்தத் திட்டத்திற்கு ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இந்த ஒதுக்கீடு குறைந்தது ரூ.80,000 கோடியாக அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக நடப்பாண்டில்  ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ரூ.60,000 கோடியாக குறைக்கப்பட்டது. கடந்த காலங்களில்  வேலை உறுதித் திட்டத்திற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யும். ஆனால், இம்முறை அவ்வாறு எந்த கூடுதல் நிதியும் ஒதுக்கீடு  செய்யப்படாதது தான் ஏழை மக்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதற்கு காரணம் ஆகும்.” என்றும் இராமதாசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com