14+1 சீட்டு தந்தால்தான் ஆச்சு! - தே.மு.தி.க. பிரேமலதா பேச்சின் பின்னணி என்ன?

14+1 சீட்டு தந்தால்தான் ஆச்சு! - தே.மு.தி.க. பிரேமலதா பேச்சின் பின்னணி என்ன?

நாடாளுமன்றத் தேர்தலில் 14 மக்களவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் தந்தால்தான் கூட்டணி என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். 

சென்னையில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச்செயலாளர் கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதைத் தெரிவித்தார். 

கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இணைந்த அணியில், இக்கட்சிக்கு திருச்சி( வேட்பாளர் டாக்டர் இளங்கோவன்), விருதுநகர் (அழகர்சாமி), வடசென்னை (அழகாபுரம் மோகன்ராஜ்), கள்ளக்குறிச்சி (எல்.கே.சுதீஷ்) ஆகிய தொகுதிகள் தரப்பட்டன. ஆனால் ஒன்றில்கூட தே.மு.தி.க. வெல்லவில்லை. இந்நிலையில், இப்போது பா.ஜ.க. அணியில் நான்கு மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் என தே.மு.தி.க.வுக்குத் தர விரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால்,தே.மு.தி.க. தரப்பில் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பா.ஜ.க.வைப் போலவே அ.தி.மு.க.வும் ஒரே சமயத்தில் தங்கள் கூட்டணிக்கு இழுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. இதனால் தே.மு.தி.க.வுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் தே.மு.தி.க. தலைமையகத்தில் கூட்டப்பட்ட மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில், சிலருக்கு மட்டும் பேச அனுமதி அளிக்கப்பட்டது. மற்றவர்களிடம் அவர்களின் கருத்துகள் எழுத்து மூலம் பெறப்பட்டுள்ளது. அதில் 30 பேர் தனியாக நிற்கலாம் எனக் கூறியதாகவும், 10 பேர் பா.ஜ.க.வுடன் கூட்டு வைக்கலாம் எனக் கூறியதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

அதிகாரபூர்வமற்ற இந்தத் தகவல் மூலம், தே.மு.தி.க. தரப்பில் பா.ஜ.க., அ.தி.மு.க. இரு தரப்புகளுக்குமே ’கூடுதல் தொகுதிகள் வேண்டும்’ என்பதைப் பூடகமாக உணர்த்தியுள்ளது என்பதே தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com