ஆடிப் பெருக்கு நாளில் மட்டும் 14,449 நில ஆவணங்கள் பதிந்து அசத்தல்!
ஆடிப் பெருக்கு நாளான கடந்த 3ஆம் தேதி ஒரே நாளில் மாநில அளவில் 14 ஆயிரத்து 449 நில ஆவணங்கள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டு அரசின் வணிவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையின் செயலாளர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
பொதுவாக சுப முகூர்த்த நாள்கள் எனக் கருதப்படும் நாள்களில், அதிக அளவில் ஆவணப் பதிவுகள் செய்யப்படும். இதன் காரணமாக, அந்த நாள்களில், நில ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கப்படுகின்றன. இதன்படி, ஆடிப் பெருக்கு பண்டிகையை முன்னிட்டு கடந்த 3ஆம் தேதி அன்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக 50 முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டன. அன்றைய நாளில் மாநில அளவில் மொத்தம் 14,449 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் ரூ.100 கோடிவரை வருவாய் ஈட்டப்பட்டது என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த நாளான 21.08.2023 அன்று, அதிக அளவில் பத்திரப் பதிவு செய்யப்படும் என்பதால், கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததாகவும் பதிவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த நாளான 21.08.2023 அன்று, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்குப் பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்குப் பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்குப் பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளும், அத்தோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் வழங்கவேண்டும் என அரசுச் செயலாளர் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.