தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெப்பநிலை நூறு டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி வாட்டியெடுக்கிறது. கோடையில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றும் இதையொட்டி குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தமிழ்நாடு உட்பட ஏழு மாநிலங்களுக்கு இந்திய வானிலை துறை இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர் உட்பட்ட மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பதினைந்து மாவட்டங்களிலும் மாலை வெயிலின் தாக்கம் இருக்கும்வரை மக்கள் தேவையின்றி வெளியில் போவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.