கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்களை அனுப்பிவைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் சென்னை, எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மைக் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் நிருவாகத் துறை அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வுசெய்து ஊடகத்தினருக்கு அரசின் தயார்நிலையை எடுத்துக்கூறினார்.
அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினும் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்புகொண்டு கனமழையை எதிர்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உட்பட்ட அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனமழை தொடர்பான எச்சரிக்கை குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.
முன்னதாக, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களின் நியமிக்கப்பட்டுள்ள மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநில / மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருகின்றன.
பொதுமக்கள், வாட்சாப் எண்.94458 69848 மூலம் புகார்களைப் பதியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.