அமர்பிரசாத் - அண்ணாமலை
அமர்பிரசாத் - அண்ணாமலை

பா.ஜ.க. கொடிக் கம்ப விவகாரம்: நீதிமன்றக் காவலில் அமர்பிரசாத்…கொதிக்கும் அண்ணாமலை!

“பா.ஜ.க.வினரைப் பழிவாங்கும் தி.மு.க.வின் போக்கு நெடுங்காலம் நீடிக்காது” என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னைன கானத்தூர் பகுதியில் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இந்த வீட்டின் காம்பவுன்ட் சுவர் முன்பாக நேற்று முன்தினம் இரவு 45 அடி உயரமுள்ள பா.ஜ.க. கொடிக் கம்பம் வைக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சியில் அனுமதி பெறவில்லை. மேலும் அந்தக் கொடிக் கம்பம் பொதுமக்களுக்கு இடையூறாகவும் அந்தப் பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த மின்கம்பி இணைப்புக்கு அருகில் இருந்ததாலும், ஆபத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்தன. அதன்படி கானத்தூர் போலீஸார் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக் கம்பத்தை அகற்ற சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

கொடிக் கம்பத்தை கிரேன் மூலம் அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் முயற்சி செய்தபோது, பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கிரேன் இயந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மீதும் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டார். கிரேன் கண்ணாடியை உடைத்து, அரசு சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில், அமர் பிரசாத் ரெட்டி தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தாம்பரம் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, அமர் பிரசாத் ரெட்டி புழல் மத்திய சிறையில் காவலில் வைக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர்பிரசாத்தையும் பா.ஜ.க. நிர்வாகிகள் சுரேந்திர குமார், பாலகுமார், கன்னியப்பன், வினோத் குமார், செந்தில் குமார் ஆகியோரையும், காவல்துறையை ஏவி கைது செய்திருக்கும் தி.மு.க. அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஊழலில் கொழுத்த நபர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, தி.மு.க.வின் சீர்கெட்ட ஆட்சியை விமர்சிக்கும் ஒரே காரணத்துக்காக பா.ஜ.க.வினரைப் பழி வாங்கும் திமுகவின் போக்கு நெடுங்காலம் நீடிக்காது. அதிகாரத் திமிரிலும், ஆணவத்திலும் ஆடிக் கொண்டிருக்கும் தி.மு.க.வுக்கு, மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com