மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்

மகளிர் உரிமைத் தொகை: ஸ்டாலின் உரை முக்கிய அம்சங்கள்- திருத்திச் சொன்ன வாசகம்!

தமிழ்நாட்டில் பரவலாக வரவேற்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத் திட்டத்தின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த உற்சாகமாகக் காணப்பட்டார். அப்போது பேச்சின் இடையே தவறிச்சொன்ன வாசகத்தை அவர் பின்னர் சரிசெய்து விளக்கம் அளித்தார்.

தமிழக நிர்வாக வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு திட்டமாக, குடும்பத்தலைவியர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, புதிய- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பயனாளிகள் 13 பேருக்கு அடையாளபூர்வமாக பண அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள்:

’சுருக்குப்பை- நிமிர்ந்து நடப்பேன்’

“ சமீபத்தில் ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் ஒரு நிருபர், மக்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1000 ரூபாய் கொடுக்கப்பட்ட பிறகு என்ன செய்வீர்கள், என்று கேட்கிறார்… “காசு இல்லாததால் மருந்து மாத்திரை சாப்பிடுறதில்ல.. இனி மாத்திரை வாங்குவேன்” என்று ஒரு பாட்டி சொல்கிறார்கள்.

இன்னொரு பெண்மணி சொன்னார்கள், என்ன சொன்னார்கள் என்றால், “தினமும் ஒருவேளைதான் சாப்பிடுகிறேன்.. இந்த ஆயிரம் ரூபாய் கிடைச்சா... காலையில ரெண்டு இட்லி சாப்பிடுவேன்” என்று சொன்னார்கள்.

இந்த இரண்டு பதிலும் எனக்கு நெகிழ்ச்சியை தந்தாலும், காலத்திற்கும் எண்ணி நான் பெருமைப்படுகிற மாதிரியான ஒரு பதிலை, நாம் எந்த நோக்கத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோமோ அதை ஒரு வரியில் சொல்கின்ற மாதிரி இன்னொரு பெண்மணி ஒன்று சொன்னார்…

“சுருக்கு பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடந்து போவேன்” என்று அவர் சொன்னார். அதாவது, “சுருக்கு பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடப்பேன்” என்று அவர் சொன்னார். இதைவிட இந்தத் திட்டத்திற்கும், எனக்கும் வேறு என்ன பெருமை வேண்டும்?

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்

நிதிநிலைமை சரியில்லை, தரவில்லை!

“இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி, பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டார்கள். இவர்களால் தர முடியாது” என்று பொய் பரப்புரையை தங்களுடைய உயிர்மூச்சாக வைத்து வாழுகின்ற சிலர் சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்திருப்போம். ஆனால் நிதி நிலைமை சரியாக இல்லை. அதுனால்தான், நிதி நிலைமையை ஓரளவுக்கு சரி செய்துவிட்டு இப்போது கொடுக்கின்றோம். இதையும் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! பொய்களையும், வதந்திகளையும் கிளப்பி இந்த திட்டத்தை முடக்க நினைத்தார்கள். அறிவித்துவிட்டால், எதையும் நிறைவேற்றிக் காட்டுவான் இந்த ஸ்டாலின். நான் போட்ட ஒரு கையெழுத்து, பலரது வாழ்க்கையை மாற்ற போகிறது என்ற அந்த உரிமையை எனக்குக் கொடுத்தவர்களே நீங்கள்தான்!

இரண்டு நோக்கங்கள்!

இந்தத் திட்டம், இரண்டு நோக்கங்களைக் கொண்ட திட்டம். ஒன்று, பலனை எதிர்பாராமல் வாழ்நாளெல்லாம் உழைக்கக்கூடிய பெண்களுடைய உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம்! இரண்டாவது நோக்கம், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கப் போகின்றது. இது பெண்களுடைய வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் பெண்கள் வாழ உறுதுணையாக இருக்கும்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்

வீட்டில் சும்மாவா நீங்கள் இருக்கிறீர்கள்?

ஏழைத் தாய்மார்களின் குழந்தைகள் இன்றைக்கு மருத்துவர்களாக, பொறியாளர்களாக, ஆசிரியர்களாக வலம் வருவதை பார்க்கின்றபோது பெருமையாக இருக்கிறது. இந்தச் சமூகத்தில் வெற்றிபெற்ற ஒவ்வொரு சாதனையாளருடைய பின்னாலும், பெண்களுடைய உழைப்பு இருக்கின்றது என்று யாரும் மறுக்க முடியாது. இன்றைக்கும் ஏழைக் குடும்பங்களையும், கிராமப் பொருளாதாரத்தையும் சுமக்கும் முதுகெலும்பாக பெண்கள்தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் அவருடைய தாய், சகோதரி, மனைவி என அந்த ஆணின் வீட்டுப் பெண்களுடைய பல மணிநேர உழைப்பு மறைந்திருக்கிறது.

ஒரு ஆணினுடைய வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளுடைய கல்வி, உடல்நலம் காக்கவும், ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் பெண்கள் உழைத்திருப்பார்கள்? அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு கொடுத்தால் எவ்வளவு கொடுப்பது? “வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள்” என்று சிலர் சொல்வார்கள். வீட்டில் சும்மாவா நீங்கள் இருக்கிறீர்கள்? வீட்டில் பெண்களால் சும்மா இருக்க முடியுமா? வீட்டில் பார்க்கின்ற வேலைகளை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்

ஏன் கலைஞர் பெயர்?

•பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்தார்.

•கலைஞர் அளித்த பணியிடங்களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீட்டை, இப்போது 40 விழுக்காடு ஆக்கியிருக்கிறோம்.

•உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். இன்றைக்கு அது 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டு, அதற்கும் மேலாக பெண்கள் இப்போது மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய தேர்தல்களில் வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

•ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கினார்.

•ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரி கல்வி வரை இலவசக் கல்வியும் வழங்கினார்.

•ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக, மகளிரை நியமித்தார்.

•டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு உதவித்திட்டம்

•மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் நினைவு திருமண உதவித்திட்டம்

•டாக்டர் தருமாம்பாள் நினைவு கைம்பெண் மறுமணத் திட்டம்

•அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம்

•ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழைக் கைம்பெண்களின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டம்

- இப்படி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தவர் கலைஞர். அவருடைய பெயரில் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுவது என்பது மிக, மிக, மிகப் பொருத்தமானது. அதுவும் அவருடைய நூற்றாண்டில் இது தொடங்கப்பட்டிருக்கிறது.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்

1.45 கோடி குடும்பங்களுக்கு தமிழ்நாட்டு அரசின் ஓய்வூதியம்!

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய முதியோர் ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம், கைம்பெண் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களில் 39 லட்சத்து 14 ஆயிரத்து 81 பயனாளிகளுக்கு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மாத ஓய்வூதியத்தை 1,200 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருக்கிறேன். மொத்தத்தில், இன்று மகளிர் உரிமைத் தொகையை பெறும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டும் அல்லாமல், ஓய்வூதியம் பெறும் 39 லட்சம் பேரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மொத்தத்தில் ஒரு கோடியே 45 லட்சம் குடும்பங்கள் தமிழ்நாடு அரசினுடைய மாத ஓய்வூதியத் திட்டங்களால் பயன்பெற்று வருகிறார்கள்.” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்

உற்சாகத்தில் தவறி, திருத்தினார்!

முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கத்துக்கு மாறான உற்சாகத்துடன் இந்தக் கூட்டத்தில் பேசினார். அப்போது, 2 ஆண்டுகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் எனப் பேசிவிட்டார். அவர் உரையை முடித்தபின்னர் உதவியாளர் துண்டுச்சீட்டைத் தந்தபின்னர், அதே குரலில், தான் மகிழ்ச்சியில் உற்சாகத்தில் பேசியபோது தவறாகக் குறிப்பிட்டுவிட்டதாகவும், ஓராண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் என்றே வந்திருக்க வேண்டும் என்றும் தன் பேச்சைத் திருத்திக் கூறினார்.

அதைக் கேட்ட அரங்கத்தில் இருந்த அனைவரும் மேலும் பரவசம் அடைந்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com