பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை
பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை

பெரியார் சிலை விவகாரம்: பின்வாங்கிய அண்ணாமலை!

பெரியார் சிலை இருக்கக் கூடாது என்பதில்லை; கோயில் முன்பு இருக்கக் கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தால் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள பெரியார் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜூலை 28ஆம் தேதி தொடங்கிய என் மண் என் மக்கள் யாத்திரை 103 தொகுதியை முடித்துள்ளது. கடந்த 9 ஆண்டு கால மத்திய அரசின் ஆட்சி அடித்தட்டு வரை சென்றிருப்பது யாத்திரையில் தெரிகிறது. ஜனவரிக்குள் யாத்திரையை முடித்து விட்டு நாடாளுமன்றத் தேர்தல் பணியை தொடங்க உள்ளோம்.

யாத்திரையின் போது திராவிட மாடல் ஆட்சியின் சமூக அநீதியை எல்லா இடங்களிலும் காண முடிந்தது. இவர்கள் பேசுவது வேறு, நடப்பது வேறாக இருக்கிறது.

பெரியாரை பொறுத்த வரை பா.ஜ.க.வின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. பெரியார் கூறிய கடவுள் மறுப்பு வாசகம் கோவிலுக்கு வெளியே உள்ள சிலையில் இடம்பெற்றுள்ளது. அது அங்கு இருக்கக் கூடாது. பெரியார் சிலையை பொது இடத்தில் வைத்து போற்றிக்கொள்ளட்டும்.

எல்லா தலைவர்களையும் ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.க. பெரியாரை அவமதிக்கவில்லை. பெரியாரை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும். கோயிலுக்கு எதிரே வைக்க வேண்டாம்.

பெரியார் கம்யூனிஸ்ட், தி.மு.க., காங்கிரஸ் பற்றி சொன்ன கருத்துகளை அந்த கட்சிகளின் அலுவலகத்தின் முன்னால் வைத்தால் ஒத்துக் கொள்வார்களா?

பா.ஜ.க.வைபொறுத்தவரை இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சமமாக இருக்கக் கூடிய கட்சி. இந்த வார்த்தைகளை ஒரு மசூதிக்கு வெளியே வைக்க கட்சிகள் ஒப்புக் கொள்வார்களா? தேவாலாயத்துக்கு வெளியே வைக்க ஒப்புக் கொள்வார்களா? பெரியார் அவர்கள் எங்கே இருக்கனுமோ அங்கே உயரிய கவுரவத்தோடு அங்கே வைக்கலாம்.

கோயிலுக்கு வெளியே வேண்டாம் என்ற மக்கள் கருத்தை நாங்கள் பிரதிபலிக்கிறோம். அதை எங்கள் அரசியல் பிரகடனம் வைக்கமாக வைக்கிறோம். இதில் அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.”என்று அண்ணாமலை கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com