“நின்னு சண்டை செய்யணும்...” விஜய்க்கு ஆலோசனை சொன்ன சீமான்!

சீமான்
சீமான்
Published on

விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று கூறியுள்ள சீமான், வெற்றி என்பது ஒரே நாளில் சாத்தியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சீமான், “அரசியல் கட்சி தொடங்கும் ஒவ்வொருவருக்கும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் கனவு. விஜய்க்கு அந்த கனவு இருந்தால் நாம் அதை வாழ்த்த வேண்டும்.

விஜய்யைத் தட்டிக்கொடுப்போம். எந்தவொரு தலைவனின் வருகைக்காகவும் வரலாறு காத்திருந்ததில்லை. இருக்கிறவர்களில் ஒருத்தரை அதுவே தேர்வு செய்து கையைப் பிடித்து நடத்திச் சென்றுவிடும். அதில், அவரும் வர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கான வேலைகளைச் செய்கிறார், வரட்டும்.

என்னென்ன கோட்பாடுகள், என்னென்ன கொள்கைகளை முன்னிறுத்துகிறோம் என்பதை மக்கள் ஏற்கும்போதுதான், அது வெற்றி பெறும். அது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. தி.மு.க-விலிருந்து வெளியே வந்த பிறகு எம்.ஜி.ஆரே கட்சி தொடங்க பயந்தார். மீண்டும் தி.மு.கவுடனே இணைந்துவிடலாம் என்றெல்லாம் பெரும் முயற்சி செய்தார். பிறகு, கருணாநிதி மட்டுமே இருந்ததால் அவரை எதிர்க்க ஓர் ஆள் தேவைப்படுதே என்று அவரே வந்தார். எம்.ஜி.ஆரைப் பார்த்து என்.டி.ஆர் கட்சி தொடங்கினார். அதன் பிறகு அங்கு வந்த சிரஞ்சீவியோ, பவன் கல்யாணோ அந்த அளவுக்குச் செல்ல முடியவில்லை.

இங்கேயும் விஜயகாந்த் வலிமையாக இருந்தார். ஆனால், விஜயகாந்த் நின்று சண்டை செய்யாமல், ஜெயலலிதாவிடம் கூட்டணிக்குச் சென்றதால் சரிந்தார். எனவே, நின்று சண்டை செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றியை நெருங்க முடியும். ஒரே நாளில் வெற்றி என்பதெல்லாம் சாத்தியப்படுத்த முடியாது. எனவே விஜய்யின் கனவு வெல்வதற்கு வாழ்த்துகள்" என்று சீமான் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com