மீண்டும் அதே பதவியில் திருச்சி சூர்யாசிவா! - அண்ணாமலை அறிவிப்பு!
பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்டிருந்த திருச்சி சூர்யாசிவா தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடர்வார் என்று அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பா.ஜ.க.வில் ஓ.பி.சி. மாநிலச் செயலாளராக இருந்தவர் திருச்சி சூர்யாசிவா. இவர், பா.ஜ.க. சிறுபான்மை அணித் தலைவர் டெய்சியுடன் பேசிய ஆபாச ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோ வெளியானது தொடர்பாக இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருச்சி சூர்யாசிவா கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அண்ணாமலை உத்தரவிட்டார்.
இந்த நிலையில், திருச்சி சூர்யாசிவா தான் வகித்து வந்த பதவியிலேயே மீண்டும் தொடர்வார் என்று அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
"சூர்யாசிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடிப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யாசிவா, தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.