ஐ.சண்முகநாதன், பத்திரிகையாளர்
ஐ.சண்முகநாதன், பத்திரிகையாளர்

ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு- ஸ்டாலின் உட்பட தலைவர்கள் இரங்கல்!

தினத்தந்தி நாளேட்டில் நீண்ட காலமாகப் பணியாற்றிய ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் சண்முகநாதன் மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90.

”அன்னாரது உடல் (பிளாட் எண்-1001, ஏரி ஸ்கீம், முகப்பேர் (நொளம்பூர் காவல் நிலையம் அருகில்), சென்னை- எனும் முகவரியில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை எட்டு மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும்.” என்று எழுத்தாளர் தமிழ்மகன் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சண்முகநாதனின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

” மூத்த பத்திரிகையாளரும், 2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவருமான திரு. ஐ. சண்முகநாதன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் காலத்தில் 1953-ஆம் ஆண்டு அந்நாளேட்டில் உதவி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்த சண்முகநாதன் அவர்கள் 2023-ஆம் ஆண்டு இதழியத் துறையில் எழுபதாண்டுகளைக் கடந்த பெருமைக்குரியவர். தினத்தந்தி குழுமம் வெளியிட்டு, ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான “வரலாற்றுச் சுவடுகள்” நூலின் ஆசிரியர். “ஒரு தமிழன் பார்வையில் 20ம் நூற்றாண்டு வரலாறு”, “கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம்” வரை முதலான பல்வேறு நூல்களையும் படைத்துள்ளார்.

நீண்ட நெடிய அனுபவத்துக்கும், எண்ணற்ற பங்களிப்புகளுக்கும் சொந்தக்காரரான திரு. சண்முகநாதன் அவர்களது மறைவு தமிழ் இதழியல் உலகுக்குப் பெரும் இழப்பாகும்.

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

”பத்திரிகைத் துறையில் 70 ஆண்டுகள் அனுபவம் பெற்ற 'தினத்தந்தி' ஏட்டின் மேனாள் ஆசிரியர் - அமைதியின் திருவுருவம் அய். சண்முகநாதன் (வயது 90) அவர்கள்  இன்று (3.5.2024) மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
அவரின் மறக்க முடியாத, என்றும் நிலைத்து நிற்கும் - 'தினத்தந்தி' குழுமத்தினரால் வெளியிடப் பட்ட "வரலாற்றுச் சுவடுகள்" என்ற நூல் ஒரு தகவல் களஞ்சியமாகும்.
2021ஆம் ஆண்டு "கலைஞர் எழுதுகோல்" விருது வழங்கப்பட்டவர்.

பிற்பகல் நேரங்களில் ஓய்வெடுக்க - 'தினத்தந்தி'க்கு பக்கத்து அலுவலகமான 'விடுதலை' வளாகத்தில் தம் காரில் ஓய்வு எடுப்பவர் - அந்த அளவுக்கு நம்மிடம் நேசமும், பாசமும், உறவும் கொண்டவர்.

பழுத்த பத்திரிகைத் துறை அனுபவம் வாய்ந்த அவரின் மறைவு - பத்திரிகையாளர் உலகிற்கு மாபெரும் இழப்பாகும்.

அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கழகத்தின் சார்பிலும், விடுதலைக் குழுமத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.”  

பா.ம.க. நிறுவனர் இராமதாசு

”தமிழ்நாட்டின் முதுபெரும் பத்திரிகையாளர்களில் ஒருவரும், தினத்தந்தி நாளிதழின் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான அன்புச் சகோதரர் ஐ. சண்முகநாதன்.


சண்முகநாதனை அறியாதவர்கள் கூட அவரது எழுத்துக்களையும், படைப்புகளையும் நன்றாக அறிந்திருப்பர். உலக அளவில் வெளியிடப்பட்ட ‘சிபிஸிளிழிமிசிலிணி ளிதி 20ஜிபி சிணிழிஜிஹிஸிசீ பிமிஷிஜிளிஸிசீ’ என்ற தொகுப்புக்கு சவால் விடும் வகையில் இவர் தொகுத்தளித்த ‘ ஒரு தமிழன் பார்வையில் இருபதாம் நூற்றாண்டு வரலாறு’’ என்ற நூல் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. உலக வரலாறு, வரலாற்றுச் சுவடுகள் உள்ளிட்ட பதிவுகளையும், தமிழ் இலக்கிய உலகில் முத்திரை பதித்த கந்தர்வ கானங்கள், இதயதாகம், கண்ணே காஞ்சனா உள்ளிட்ட புதினங்களையும் படைத்தவர் இவர்.

ஐ.சண்முகநாதன் பத்திரிகைக்கு மட்டுமின்றி, பத்திரிகையாளர்களுக்கும் ஆசிரியராக திகழ்ந்தவர். இவரிடம் அனுபவப் பாடம் படித்து உயர்ந்த பத்திரிகையாளர்கள் ஏராளம். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார், சிவந்தி ஆதித்தனார் ஆகியோரின் அன்பையும், மதிப்பையும் பெற்றிருந்தவர் ஐ.சண்முகநாதன். அவரது மறைவு இதழியல் துறைக்கு பெரும் இழப்பு.

ஐ.சண்முகநாதன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், இதழியல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” 


செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

” "உலகில் ஓரிருவர் சரித்திரமாகிறார்கள்; ஒரு சிலர், சரித்திரத்தை உருவாக்குகிறார்கள்; பலர் சரித்திரத்தில் இடம்பெறுகிறார்கள்" என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் பொன்மொழிக்கு ஏற்ப 'தினத்தந்தி' நாளிதழின் சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்தவர் ஐ.சண்முகநாதன் அவர்கள்.

எளிமையான குடும்பத்தில் பிறந்து, தான் தேர்ந்தெடுத்த இதழியல் பணியில் எழுபது ஆண்டுகளைக் கடந்தவர். 'வரலாற்றுச் சுவடுகள்' முதலான சிறந்த நூல்களை எழுதியுள்ளார். 'நாதன்' என்ற பெயரில் பல புதினங்களை எழுதியவர்.

இவருடைய இதழியல் பணிகளைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 2021-ஆம் ஆண்டுக்கான "கலைஞர் எழுதுகோல் விருது" வழங்கிப் பெருமை சேர்த்ததை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன்.

இன்று (03.05.2024) தனது 90ஆவது வயதில் உடல்நலக் குறைவினால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும். இதழியல் துறையைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com