மாமன்னன் திரைப்படத்தை திரையிட்டால் தாக்குதல் நடத்துவோம் - இந்திய பார்வர்டு பிளாக் கட்சி எச்சரிக்கை
மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டால் தேனி வெற்றி திரையரங்கம் மீது தாக்குதல் நடத்தப்படும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். அவர்களுடன் ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது.
ஏற்கெனவே மாமன்னன் படத்தின் ஆன்லைன் புக்கிங் தொடங்கிய நிலையில், இதுவரை பெரியளவில் புக்கிங் ஆகவில்லை என சொல்லப்படுகிறது. சென்னையில் உள்ள பல திரையரங்குகளிலும் டிக்கெட் புக்கிங் மந்தமாகவே உள்ளதாம்.
அதேபோல், தயாரிப்பாளர்கள் தயாரிப்பில் திரையரங்க உரிமையாளர்களிடம் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்குக் கிடைக்கும் வசூலில் 60 சதவீதம் தயாரிப்பாளருக்கும், 40 சதவீதம் திரையரங்க உரிமையாளருக்கு கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால், மாமன்னன் படத்துக்குத் தயாரிப்பாளர் தரப்பில் 70 சதவீதம் கேட்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டால் தேனி வெற்றி திரையரங்கம் மீது தாக்குதல் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளனர். அதேபோல், சாதி மோதலை உண்டாக்க நினைக்கும் மாமன்னன் படத்தை தடை செய்ய கோரியும் அவர்கள் தேனி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
தேவர் மகன் படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதிலிருந்து மாமன்னன் படத்துக்கு எதிராக தினந்தோறும் எதிர்ப்புகள் வந்து கொண்டே உள்ளது.