சதுர மீ. ரூ.8 தானாம் சுவீடனில்... வீடு கட்டத் தயாரா?

கோதென்ன, சுவீடன்
கோதென்ன, சுவீடன்
Published on

சுவீடன் நாட்டில் சதுர மீட்டர் 8 ரூபாய்க்கு வீட்டு மனை விற்கப்படும் என நகராட்சி ஒன்று அழைப்புவிடுக்க, மற்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா குறிப்பாக இந்தியா, பாக்கிஸ்தான் நாடுகளிலிருந்து ஏராளமானவர்கள் பதிவுக்கு முண்டியடித்துள்ளனர்.

அங்குள்ள கோதென்ன நகராட்சியின் மேயர்தான் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டார். சுமார் 5 ஆயிரம் பேர் நகருக்குள்ளும் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்த்து 13 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஆனால், முதியோர் எண்ணிக்கை அதிகரித்தும் குழந்தைப் பிறப்பு குறைந்தும்வரும் நிலையில் அதிகமானவர்களை இங்கு குடியேற்ற விரும்புவதாகச் சொல்கிறார், நகரத்தின் மேயர் மான்சன்.

ஐரோப்பாவின் மிகப் பெரிய ஏரியான வேனன் ஏரிக்குப் பக்கத்தில் உள்ளதுதான், இந்த நகரம். வேனன் ஏரியுடன், யுனெஸ்கோ பெருமை கொண்ட பிளாட்டபெர்கன் புவியியல் பூங்கா, வேனன் ஏரி ஆர்ச்பிளேகா ஆகிய இரண்டு பாரம்பரிய இடங்களும் யுனெஸ்கோ புவிக்கோள வனமும் இங்கு உள்ளன.

இப்படியான பெருமைகளை உடைய இந்த நகரத்தில் சொந்த வீடு இருப்பதென்றால் யார்தான் விரும்பாமல் இருப்பார்கள்?

முதல் கட்டமாக முப்பது வீட்டு மனைகளை சதுர மீட்டர் எட்டு ரூபாய்க்கு (உண்மைதான் அந்நாட்டு நாணயம் ஒரு குரோனாவுக்கு) விற்பனை செய்வதாக கோதென்ன மேயர் அறிவித்ததும், பல நாடுகளிலிருந்தும் வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதில்சொல்லத்தான் ஆள் இல்லை.

நகராட்சியில் தொலைபேசி விசாரணைக்கு பதில்சொல்ல இரண்டே இரண்டு பணியாளர்கள்தான் இருக்கிறார்கள்; இந்த அழைப்புகளால் அவர்கள் திணறிப்போய்விட்டார்கள் என்றும் மேயர் கூறினார்.

அதிகம் பேர் போட்டியிட்டால் 30 மனைகளும் ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வெறும் எட்டு ரூபாய்க்கு சதுர மீட்டர் இடம் தந்தால் பிரச்னை எதுவுமே இருக்காதா என்றால், இல்லாமல் எப்படி இருக்கும்?

சும்மா இல்லை, இடத்தை வாங்கிவிட்டு 2 ஆண்டுகளுக்குள் வீடு கட்டாவிட்டால், 8 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்!

வீடு கட்டுவோர் கட்டட அனுமதிப் பத்திரத்துக்கு 2.4 இலட்சம் ரூபாயும், குடிநீர், வடிகால் இணைப்புக்கு 8.5 இலட்சம் ரூபாயும், மின்சாரத்துக்கு 3.2 இலட்சம் ரூபாயும் செலவிட வேண்டியிருக்கும்.

வழக்கமாக, ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அதிகபட்சம் 30 இலட்சம் ரூபாய்வரை செலவாகுமாம். அந்தப் பகுதியில் வீட்டு மனை விலை மட்டும் சுமார் 3.76 இலட்சம் ரூபாய் இருக்கும்.

இத்துடன், வீட்டு மனை வாங்குவதற்கு சுவீடன் வங்கிக் கணக்கும் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

ஏகப்பட்ட பேர் வீட்டு மனைக்கு அணுகியுள்ளதால், இப்போதைக்கு வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதிவரை இந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com