பீகாரில் முதல்வர் நிதீஷ்குமார் பங்கேற்கும் சாதிவாரிக் கணக்கீடு
பீகாரில் முதல்வர் நிதீஷ்குமார் பங்கேற்கும் சாதிவாரிக் கணக்கீடு

சாதிவாரிக் கணக்கீட்டு அரசியல்!

இப்போது அரசியலில் சத்தமில்லாமல் யுத்தம் செய்துவரும் ஒரு விவகாரம் எது எனக் கேட்டால், சாதிவாரிக் கணக்கெடுப்பு என்று நிச்சயமாகச் சொல்லமுடியும்.

நாடு முழுவதும் பேசப்படும் இந்த ஒற்றைக் கோரிக்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது பீகார் மாநிலம்தான் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் 2022ஆம் ஜூன் 6ஆம் தேதி அன்று அந்த மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார், அதிரடியான அந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், அதை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது, நீதிமன்றம்.

நாடு முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவது மத்திய அரசின் பொறுப்பும் கடமையும் என்கிறது அரசமைப்புச் சட்டம். சுதந்திரத்துக்கு முன்னர் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் 1871ஆம் ஆண்டு முதல் 1931ஆம் ஆண்டுவரை பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகைக் கணக்கும், அதனுடன் சாதிவாரியான கணக்கும் எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1941ஆம் ஆண்டில் எடுக்கப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கு எடுக்கப்படவில்லை.

நாடு சுதந்திரம் அடைந்தபிறகு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவேண்டாம் என மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினரின் தொகை மட்டும் எடுக்கப்பட்டு வருகிறது. 

அது எதற்காக?

சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் பட்டியல் சமூகத்தினருக்கான தனி தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்காக நடத்தப்படுகிறது.

இப்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துமாறு கேட்கிறவர்கள்,எதற்காகக் கேட்கிறார்கள்?

இந்தக் கோரிக்கையை இப்போது வலியுறுத்துகின்ற -பெரும்பாலும் சமூக நீதிக்கான அமைப்புகளும் பல சாதிச் சங்கங்களும், மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கமுடியும் என்கிற முகாந்திரத்தில்தான், இதை முன்வைக்கின்றன.

அரசமைப்புச் சட்டப்படி மத்திய அரசுதான் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கையும் (சென்சஸ்) எடுக்க முடியும் என்பதால், பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தி குரல் கொடுக்கின்றன. பல மாநில அரசுகளுமேகூட மைய அரசுக்கு இதை வலியுறுத்தி முறைப்படி கடிதங்களை அனுப்பியும் நேரில்சென்றும் வலியுறுத்திவிட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த அக்டோபர் 21ஆம் தேதியன்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து முறைப்படி கடிதம் அனுப்பினார்.

ஆனால், பீகார் மாநிலத்தை முன்மாதிரியாக வைத்து, மாநில அரசே இதைச் செய்யமுடியும்; செய்யவேண்டும் என்ற குரல்களும் இன்னொரு பக்கம் உரக்கக் கேட்கின்றன. உச்சநீதிமன்றமும் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வழிமொழிந்துவிட்டது என்பதே முக்கிய காரணம். அரசமைப்புச் சட்ட மீறல் வராதபடி, பீகார் அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக -சென்சஸ் என இல்லாமல்,

சர்வே என்று அதை அறிவித்தது. அதன்படி, அந்த மாநிலத்தின் இட ஒதுக்கீட்டையும் மாற்றியமைத்து சட்டமன்றத்தில் தீர்மானமும் கொண்டுவந்துவிட்டது. பீகாரைத் தொடர்ந்து ஒடிஷா, ஆந்திரா , கர்நாடகா மாநிலங்களும் இதில் இறங்கிவிட்டன.  

தமிழ்நாட்டில் பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் சில மாதங்களாக தி.மு.க. அரசிடம் இந்த விவகாரம் பற்றி வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருக்கிறார். கடந்த மாதம் 27ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற வி.பி.சிங் சிலைத் திறப்பு விழாவையொட்டி, ஸ்டாலினுக்கு உருக்கமான வேண்டுகோளும் விடுத்திருந்தார், இராமதாஸ்.

பக்கத்து மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், கேரளத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு சாதகமான நிலை உருவாகியுள்ளது என்றும் சமூக நீதித் தொட்டிலான தமிழ்நாடு மட்டும் ‘இருண்ட தீபகற்பம்' போல இருப்பதாக வார்த்தைகளில் கொஞ்சம் கடுமையும் காட்டினார், இராமதாஸ்.

வழக்கமாக, பதிலுக்குப் பதில் என பரபரப்பைக் கூட்டும் தி.மு.க. தரப்பில் இதற்கு சிறிய எதிர்வினைகூட வெளிப்படவில்லை.

வி.பி.சிங் சிலை திறக்கப்பட்ட நவ.27 அன்றுகூட, மைய அரசுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என அழுத்தமாக தங்கள் நிலையிலேயே மீண்டும் பேசினார் முதலமைச்சர்.

தி.மு.க. கூட்டணிக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. இரண்டு இடதுசாரி கட்சிகளும் மத்திய அரசுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்கின்றன.

ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ ஓ.பி.சி.

 ஒதுக்கீடு தொடர்பான நீதிமன்றத்தின் கேள்வி குறித்து கடந்த மாதம் 9ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி புள்ளிவிபரங்களையும் எடுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும்,' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ‘பீகார் மாநில அரசைப் போல தமிழ்நாடு அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் போது 1931இல் கடைசியாக நடைபெற்ற சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது நிகழ்ந்த குறைபாடுகள் களையப்பட வேண்டும்,' என்று கடந்த மாதம் 20ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற வி.சி.க. உயர்நிலைக் கூட்டத்தில் தனித் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

இன்னொரு கூட்டணிக் கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனோ, தமிழக அரசே சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த செப்டம்பரில் சேலத்தில் தெரிவித்திருந்தார்.

பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘சாதிவாரிக் கணக்கீட்டை பாஜக எதிர்க்கவில்லை. ஆனால் இதுகுறித்து ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் முடிவு எடுக்கவேண்டும்' என்றுதெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் நிலை குறித்து அக்கட்சியின் அமைப்புச்செயலாளர் செம்மலையிடம் பேசினோம். 

‘அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிரானது அல்ல. இதுகுறித்து பலவித கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. எந்த நோக்கத்துக்காக இந்தக் கணக்கெடுப்பு  என்பதை வரையறுக்க வேண்டும். அதன்பிறகு அனைத்து சாதியினரிடமும் ஒருமித்த கருத்து உருவாக்க வேண்டும். வாக்கு வங்கி அரசியலாக இல்லாமல் அனைவருக்குமான வளர்ச்சிக்காக இது இருக்கவேண்டும். மற்ற மாநிலங்களுக்கெல்லாம் தமிழ்நாடு முன்மாதிரியாக இருந்துவருகிறது. ஒரு முடிவு வருவதற்கு முன், சாதக பாதங்களை அலசி ஆராய்வது அவசியமாகிறது. இதுபற்றி எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் உரிய முடிவை எடுப்பார்,' என்றார் அவர்.

இது ஒருபுறம் இருக்க, அடிப்படையிலேயே இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி எதிர்மறையான கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஏற்கெனவே, அந்தந்த வட்டார அளவில் 'ஆண்ட சாதி'ப் பெருமிதம் பேசி, முட்டல் மோதல் வன்முறையென சமூக வளர்ச்சியைப் பின்னோக்கி இழுத்துவருகிறார்களே; அவர்களையெல்லாம் ஊக்குவிக்கும்படியாக -  சாதியத் தீமைகளை இன்னும் அதிகரிக்கும்படியாக ஆகிவிடாதா என்கிறார்கள், அந்த சாரார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியவரும் இந்தியா முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் -  ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டுக்காக அரும்பாடு பட்டவர், மறைந்த வே. ஆனைமுத்து. அவருடைய மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின்  துணைப் பொதுச்செயலாளர் வாலாசா வல்லவனிடம் இதே கேள்வியைத் திருப்பிவிட்டோம். 

‘சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தினால்தான் சமூகரீதியான பின்தங்கிய நிலைமையை ஆதாரமாகக் கண்டுகொண்டு, அதற்கேற்ப அரசு செயல்பட முடியும். இதனால் சாதியம் வலுப்பெறுகிறது என்பது தவறு. சாதிவாரியான இட ஒதுக்கீடு சரியல்ல. வகுப்புவாரி இட ஒதுக்கீடு( பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. போன்றவை) சரியானது. குறிப்பாக, இப்போதைய இட ஒதுக்கீட்டிலேயே இதுவரை பயன்பெறாத சமூகங்களைத் துல்லியமாகக் கண்டு, அதன்படி, இப்போதைய பிரிவுகளையே மாற்றியமைக்கலாம். அதாவது, பிற்படுத்தப்பட்டோரில் உள் ஒதுக்கீடாக முஸ்லிம்களுக்கும் ஒடுக்கப்பட்டோரில் அருந்ததியருக்கும் உள் ஒதுக்கீடாகக் கொடுத்ததைப் போல செய்யலாம். சட்டப்படியும் இடம் உண்டு. இட ஒதுக்கீடு என்பதே அரசு நிர்வாகத்தில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்பதற்கான ஒரு வழிமுறையே தவிர, இது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல. எனவே, இப்போதைய பி.சி., எஸ்.சி. பட்டியலில் இன்னும் பல பிரிவுகளை உண்டாக்கவேண்டும். குறிப்பான விவரங்கள் கிடைத்தால் அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட முடியும். இதுவே சமூக நீதியாக இருக்கும். இதுதான் பெரியார் காலத்திலிருந்து சொல்லப்பட்டு வருகிறது,' என்று ஒரு பார்வையை முன்வைக்கிறார்.

 சமூகத்தின் அனைத்து பிரிவினரும் அதிகாரத்தில் பங்கேற்பது நடக்குமா?

(தா. பிரகாஷ் உதவியுடன்)

ஜி.ராமகிருஷ்ணன்

சி.பி.எம்.

பத்து வருடத்துக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு நடத்தவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட வேண்டும்.

சமூகரீதியிலான பொருளாதார பகிர்வுக்கு ஒன்றிய அரசின் திட்டம்தான் முக்கியமானது.

இரா.முத்தரசன்

சி.பி.ஐ.

 சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அகில இந்திய அளவில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.

மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுத்தாலும் அது எந்த அளவுக்கு பயனளிக்கும் என்று தெரியாது. நூறு சதவீத இடொதுக்கீடு பின்பற்றப்படவேண்டும்.  எந்ததெந்த சாதி எத்தனை சதவீதம் உள்ளதோ அதற்கேற்றாற் போல, இடொதுக்கீட்டைக் கொடுங்கள்.

பா.ஜ.க.வுக்கு கொள்கை ரீதியாக இட ஒதுக்கீட்டில் உடன்பாடு இல்லை.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com