திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

திண்டுக்கல் - மலைக்கோட்டை மாநகரில் எம்.பி.யாக வலம்வரப் போவது யார்?

சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி என பாதி மதுரையோடு, பாதி திண்டுக்கல்லுமாக இருந்தது, பழைய திண்டுக்கல் மக்களவைத் தொகுதி. 2008ஆம் ஆண்டு மறுசீரமைப்புக்குப் பிறகு, கிட்டத்தட்ட திண்டுக்கல் மாவட்டமே திண்டுக்கல் மக்களவைத் தொகுதியாக ஆகிவிட்டது. தற்போது, திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை(தனி), ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. (இந்த மாவட்டத்தின் வேடசந்தூர் தொகுதி மட்டும் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.)

வரும் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். 26 வயதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவராக இருந்தவர், அதன்பிறகும் இரண்டு முறை உள்ளாட்சிப் பிரதிநிதியாக இருந்துள்ளார். அ.தி.மு.க. அணி சார்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ.க. கூட்டணி சார்பில், பா.ம.க.வின் பொருளாளர் திலகபாமா வேட்பாளர்! நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் கயிலை ராஜன் துரைராஜன் போட்டியிடுகிறார்.

மதுரை மாவட்டத்தின் பழைய மூன்று தொகுதிகளும் இருந்தவரை, குறிப்பாக அ.தி.மு.க. என்கிற கட்சி உருவாகும்வரை, மாநில ஆளும் கட்சியே இத்தொகுதியில் வெற்றி பெற்றுவந்துள்ளது. அ.தி.மு.க. உருவானதும் அந்தக் கட்சி சந்தித்த முதல் தேர்தல், 1977 திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தல்தான். அப்போது, அ.தி.மு.க. சார்பில் வென்ற மாயத்தேவர், அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்; ஆனால் அந்த முறை தி.மு.க.வின் சார்பில்!

அதன்பிறகு, அவரின் செயலாளரைப் போல இருந்துவந்த சீனிவாசன், அ.தி.மு.க.வின் சார்பில் நான்கு முறை எம்.பி.யாக இருந்தார். இடையில் அதே அ.தி.மு.க.வின் கே.ஆர்.நடராஜன் ஒரு முறையும், 1996-98 காலகட்டத்தில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட என்.எஸ்.வி. சித்தன் ஒரு முறையும் வெற்றிபெற்றனர்.

சீனிக்குப் பிறகு 2004 முதல் 2014வரை சித்தனே காங்கிரஸ் கட்சியின் சார்பில் தி.மு.க. ஆதரவுடன் எம்.பி.யாக இருந்தார்.

பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அ.தி.மு.க. வென்றது, 2014 தேர்தலில்!

தற்போதைய எம்.பி.யான வேலுச்சாமி தி.மு.க.வைச் சேர்ந்தவர்தான் என்றாலும், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தொழில் பிரமுகரான அவருக்கு கொங்கு பகுதியை ஒட்டிய ஊர் என்பதால், கொங்கில் உள்ள அ.தி.மு.க. தலைமைவரை இவரை விரும்பியவர்கள் உண்டு. மாவட்டச்செயலாளரான ஐ. பெரியசாமியுடன் ஒட்டியபடி படத்துக்கு போஸ் கொடுப்பதைத் தாண்டி, இவருடைய முகத்தை தொகுதிவாசிகள் அதிகமாகப் பார்த்ததில்லை. பதவி இருக்கிற ஒருவரே இப்படி இருந்தால் சீட்டு எப்படிக் கிடைக்கும் என ஆளும் கட்சிக்காரர்களே அலட்டிக்கொண்டார்கள், தொகுதி எந்தக் கட்சிக்கு என்பது உறுதியாகும்வரை!

தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால் நிம்மதி அடைந்த கட்சிக்காரர்களின் எண்ணிக்கை கணிசமானது!

தற்போதைய நிலையில், முதன்மைப் போட்டி தி.மு.க. அணிக்கும் அ.தி.மு.க. அணிக்கும்தான்!

அ.தி.மு.க. அணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் சுற்றிவளைத்து பிரச்சாரம் செய்யும் முபாரக், இசுலாமிய அடையாளத்தை முக்கியத்துவமாக வைத்து பிரச்சாரம் செய்யவில்லை. மாவட்டத்தில் திண்டுக்கல் நகரத்தில் குறிப்பிட்ட பகுதியிலும் மற்ற சில சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிதறியபடியுமாகவே இசுலாமியர்கள் வசித்துவருகின்றனர். வாக்கு சதவீதத்தில் அது சொற்பமாகவே இருக்கும் என்பதும் முபாரக் தரப்பில் பொது அடையாளத்தை நிறுவுவதற்கான ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளின் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் குறிப்பிட்டுச் சொல்லி விளம்பரம் செய்து வாக்கு சேகரிக்கிறது, எஸ்.டி.பி.ஐ. கட்சி. முன்னாள் அமைச்சர்களான அ.தி.மு.க.வின் மாவட்டச்செயலாளர்களும் தற்போதைய எம்.எல்.ஏ.களுமான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் இருவருமே பிரச்சாரங்களில் தொடர்ந்து பங்கேற்கின்றனர். கடந்த 9ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியும் முபாரக்குக்கு வாக்கு கேட்டு, திண்டுக்கல் மணிக்கூண்டில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிடுவதால், அ.தி.மு.க. வாக்குகள் இவருக்குக் கிடைத்துவிடும் என நம்பலாம்.

எதிரணியில் நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தமோ, என்.வரதராஜன், பாலபாரதி போன்றவர்களைப் போல தனி நபராக செல்வாக்கு பெற்றவர் அல்ல. ஆனாலும் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் என்கிற அளவில் மாவட்டத்தில் மக்கள் மத்தியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் அரசியல் ஊழியராகச் செயல்பட்டுவருபவர். எண்ணிக்கை பலம் எனப் பார்த்தால், இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குகள் சச்சிதானந்தத்துக்கே கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதைவிட முக்கியமாக, மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி இருவருமே இவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என தீவிரமாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். முன்னதாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரியசாமி, அவரின் மகன் செந்தில்குமார் பொறுப்பான தி.மு.க. கிழக்கு மாவட்டத்திற்குள் திண்டுக்கல்லிலும் நத்தத்திலும் அ.தி.மு.க. வென்றது. இது, தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சி அளித்தது. மு.க. ஸ்டாலினின் அமைச்சரவையில் கருணாநிதி கால வருவாய்த் துறை அமைச்சரான பெரியசாமிக்கு, முதலில் கூட்டுறவுத் துறை ஒதுக்கப்பட்டது. இதைக் காரணமாகக் குறிப்பிட்டுப் பேசும் தி.மு.க. வட்டாரத்தினர், இந்த முறை நத்தம், திண்டுக்கல் இரு தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளருக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தரவேண்டிய அவசியம் ஐ.பெரியசாமிக்கு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

நிலக்கோட்டை தொகுதியைப் பொறுத்தவரை, நீண்ட காலமாகவே தி.மு.க.வை ஒப்பிட அ.தி.மு.க.வசமே அதிகமாக இருந்துவந்திருப்பது, முபாரக்குக்குச் சாதகம்.

பா.ஜ.க. அணியின் சார்பில் பா.ம.க.வின் திலகபாமா இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். விருதுநகர் பக்கம் உள்ளவரை இங்கு நிறுத்தியிருந்தாலும், அவர் சார்ந்த சமூக வாக்குகளும் திண்டுக்கல், நிலக்கோட்டை, வேடசந்தூர் உட்பட்ட தொகுதிகளில் உள்ள பா.ம.க. வன்னியர் வாக்குகளும் இவருக்குக் கிடைக்கும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. கூடவே, புதிதாக பா.ஜ.க.வுக்குக் கிடைக்கலாமென எதிர்பார்க்கப்படும் வாக்குகளும் திலகபாமாவின் கணக்கில் சேரும். எல்லா இடங்களிலும் நூதன பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்களைப் போல, இவரும் நாற்று நடுவது, குதிரை வண்டியோட்டுவது என அவ்வப்போது செய்திகளில் இடம்பிடித்து கவனத்தை ஈர்க்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் கயிலை ராஜனும் ஒரு வேட்பாளராக வலம்வருகிறார்.

ஆத்தூர் தொகுதியில் பெரியசாமி, பழனி தொகுதியில் அவரின் மகன் செந்தில்குமார், ஒட்டன்சத்திரம் தொகுதியில் சக்கரபாணி என ஆளும் கட்சியின் கையே ஓங்கியிருக்கும் நிலையில், குறிப்பிடும்படியான மாற்றம் வந்துவிட வாய்ப்பில்லை.

வேட்பாளரின் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கெனவே மாவட்டத்தில் பாதி தொகுதிகளில் வெற்றிபெற்று, மக்கள் மனதில் நல்ல பெயரை எடுத்துள்ளது. குறிப்பாக, பாலபாரதிக்கு மாவட்டம் முழுவதும் செல்வாக்கு உண்டு. எல்லாமே அந்தக் கட்சி செய்துவரும் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களால் வந்தது என்பதும் சச்சிதானந்தத்தின் வாக்குகளைக் கூட்டும். அவரே விவசாயிகளுக்காகவும் பழங்குடியினருக்காகவும் களத்தில் தொடர்ச்சியாக செயல்பட்டுதான் கட்சியின் மாவட்டச்செயலாளர் பதவிக்கு வந்தார். அந்தப் பெயரும் அவருக்கு கூடுதல் பிளஸ்.

முதலமைச்சர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய, மாநிலத் தலைவர்கள், நடிகை ரோகிணி போன்றவர்களின் பிரச்சாரம், அந்தக் கட்சியின் கலைக்குழுக்களின் மாறுபட்ட பிரச்சாரம் ஆகியவை சச்சிதானந்தத்துக்கு உற்சாகத்தை அள்ளித்தந்தபடி இருக்கிறது.

இந்த மாவட்டத்தின் சட்டப்பேரவைத் தொகுதிகள் பலவற்றிலும் வெற்றிபெற்றிருந்தாலும், முதல்முறையாக நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம், மலைக்கோட்டை மாநகரில் எம்.பி.யாக வலம்வருவார் என்றே பெரும்பான்மைக் காரணிகளும் கட்டியம் கூறுகின்றன.

அதிசயம் ஏதும் நிகழ்ந்தால் தவிர இதில் மாற்றமிருக்காது எனக் கூறமுடியும்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com