பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த தாக்குதல் வழக்கில் பா.ஜ.க. எம்.பி. ராம் சங்கர் கதேரியாவுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்ந்து தகுதிநீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் எடாவா மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராம் சங்கர் கதேரியா, மத்திய அமைச்சராகவும் இருந்தவர். கடந்த 2011ஆம் ஆண்டில் மின்சார விநியோக நிறுவன ஊழியர் ஒருவரைத் தாக்கினார். இது தொடர்பான வழக்கில் ஆக்ரா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், இவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகளோ அதற்கு மேற்பட்டோ சிறைத்தண்டனை பெற்றால், அவர் உடனடியாகத் தகுதிநீக்கம் செய்யப்படுவார். இதன்படி ராம் சங்கரின் எம்.பி. பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எடாவா மக்களவைத் தொகுதி உறுப்பினரான இவர், கடந்த 2014 நவம்பர் முதல் 2016 ஜூலைவரை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சராகப் பதவிவகித்தார்.
சர்ச்சைக்கு உரிய ராம் சங்கர் கடந்த 2019ஆம் ஆண்டில், ஆக்ரா சுங்கச் சாவடியிலும் ஊழியர் ஒருவரைத் தாக்கினார். அவருடைய பாதுகாவலர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களைத் தாக்கியதுடன், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடவும் செய்தனர்.
கண்காணிப்பு கேமராவில் மொத்த சம்பவமும் பதிவானதால், அது பரவலாகி மாட்டிக்கொண்டனர். அந்த சம்பவம் தொடர்பாகவும் ராம் சங்கர் மீது வழக்கு பதியப்பட்டு, நிலுவையில் உள்ளது.