அண்ணாமலை - பொன்னையன் - ஜெயக்குமார்
அண்ணாமலை - பொன்னையன் - ஜெயக்குமார்

அண்ணாமலைக்கு எதிராக திரும்பும் அதிமுகவின் மூத்த தலைவர்கள்!

அண்ணாமலையின் ஆசைகள் நிறைவேறாது என அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் கூறியுள்ள நிலையில், அதிமுகவை விமர்சிப்பதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநாட்டுக்குழு உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனவும், நாடே கண்டிராத வகையில் மிகவும் எழுச்சிக்கரமாக மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை அரசியல் விஞ்ஞானி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவின் அடிமட்ட தொண்டனை விமர்சனம் செய்தால் கூட, நாங்கள் கண்டனம் தெரிவிக்க தவறியது கிடையாது. அதிமுகவை தொட்டவன் கெட்டான் என அண்ணாமலைக்கு நன்றாக தெரிந்திருக்கும். அதிமுகவினரை விமர்சிப்பதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும். அந்த இடத்துக்கு அண்ணாமலை போகமாட்டார் என்று நினைக்கிறேன்” என்றார்.

ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையனிடம், களத்தில் அதிமுக பலமாக இருக்கும் போது அண்ணாமலையின் முதலமைச்சர் ஆசை நிறைவேறுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பொன்னையன், ஆசை, அவருக்கு ஒரு ஆசை, அதை சொல்கிறார். ஆசை என்பது வேறு யதார்த்தம் என்பது வேறு.

ஆளுங்கட்சியாக இருக்க வேண்டிய அதிமுக ஆளுங்கட்சியாக வர இருக்கிறது.” என்றார்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி என்றால் அது பாஜக தான் என்ற நிலை உருவாகியுள்ளதாக தெரிகிறதே, என்ற கேள்விக்கு, கற்பனைக்கு எல்லை இல்லை. எப்படி வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளலாம்.

மேலும், பாஜகவுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் ஒட்டு இல்லை, கிறிஸ்துவர்கள் ஓட்டு இல்லை. முஸ்லிம்கள் ஓட்டு இல்லை. ஏழைகளின் ஓட்டு இல்லை. நதிநீர் பிரச்னையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஓட்டு இல்லை. இந்திய ஆதரிக்கின்ற பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை. மக்கள் தீர்ப்பு சொல்வார்கள்” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com