நிறைவும் நிம்மதியும்

முன்னுக்கு வர வேண்டிய இளைஞர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய சிறப்புப் பக்கங்களை வடிவமைத்து இரு பகுதிகளாக பிரித்து -–கட்சிகளும் கலைக்குழுக்களும், ரிஸ்க் எடுத்தேன்- வெற்றிக் கதைகளை சுவையாகத் தொகுத்து வழங்கியிருக்கும் ஆசிரியர் குழுவினருக்கு பாராட்டுகள்! முதற் பகுதி அரசியல் கட்சி சார்ந்த பாடகர்கள்- கலைக்குழுவினர்கள் எப்படி உருவானார்கள், அவையால் அரசியல் கட்சிகளுக்கு என்ன ஆதாயங்கள் போன்றவற்றை அக்குழுவினரிடம் நேரில் கேட்டு நிழற்படங்களோடு வெளியிட்டு சிறப்பித்திருப்பது சிறப்பு. அடுத்து ரிஸ்க் எடுத்து வெற்றி பெற்ற பல்துறை ஆளுமைகளின் அசத்தலான, சவால் நிறைந்த அனுபவங்களை ‘த்ரில்’ கதைகளைப் படித்ததைப் போன்ற நிறைவும் நிம்மதியும்; கலையாளுமை கரு. பழனியப்பன், மதுரா டிராவல்ஸ் பாலன், படைப்பாளி சாரு நிவேதிதா, கால்நடை மருத்துவர் எஸ். முத்துகிருஷ்ணன், டாக்டர் வடிவேல் முருகன் ஆகியோரின் துணிச்சலான செயல்கள் ஒவ்வொன்றும் அவர்களை வெற்றியாளர்களாக உருவாக்கியிருப்பதைப் பறைசாற்றும் படிப்பினைகள். இளைஞர்கள் படிக்க வேண்டிய பகுதிகள் இவை.

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

மகுடம்

கவிதா பாரதி எழுதிய நுண்கலை ஆவணம் என்னும் தலைப்பில் வெளியான எழுத்தோவியம் அருமையிலும் அருமை. அவர் குறிப்பிட்டுள்ளதைப் போல டிராட்ஸ்கி மருது என்பது வெறும் பெயரன்று, நுண்கலைகளில் வாழும் வரலாற்று ஆவணம் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

நாம் ரிஸ்க் எடுத்தது கிடையாது என்னும் கரு பழனியப்பனின் எழுத்தும்,  அந்த ரிஸ்க்கை நான் எடுத்திராவிட்டால் என்னும் மதுரா டிராவல்ஸ் வி.கே.டி பலனின் எழுத்தும், உள்ளத்தை வெகுவாக கொள்ளை கொண்டன. மீடூவில் போட்டுத்தள்ளி விடுவார்களோ என்னும் சாருநிவேதிதாவின் படைப்பு இதழுக்கே மகுடமாக அமைத்திருந்தது.

தங்க. சங்கரபாண்டியன் சென்னை

அறச்சீற்றம்

தமிழாசிரியர்கள் நாட்டின் நடப்புகளால் அறச்சீற்றத்தின்பாற்பட்டாலும் அன்றாட வாழ்க்கையைச் சலனமின்றி நகர்த்துவதற்காக சமரசப்போக்கைக் கையாள்

வதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருந்த நாஞ்சில் நாடனின் படையும் பாடையும் சிறுகதை. உண்மை நிலையை உணர்த்த முயலும் அருமையான சிறுகதையே!

தமிழாசிரியர்கள் பற்றிய கதையென்றால் தமிழிலக்கிய மேற்கொள்கள் இல்லாமல் இருப்பதில்லை என்ற நிலையையும் கதை உறுதிப்படுத்தியது!

முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்

சொல்

கவிஞர் மகுடேசுவரன் ‘ரிஸ்க்’ என்றால் தமிழில் ‘இடர் கோள்’ எனச் சொல்வதாக அந்திமழை இளங்கோவன் பக்கம் 41 இல் குறிப்பிட்டுள்ளார். மகுடேசுவரனின் இடர்கோள் என்ற சொல்லே ரிஸ்க்கிற்கு பெரும்பாலும் இணையான, பொருத்தமான சொல்லாகப்படுகிறது. இதைவிடச் சிறப்பான சொல் கண்டறியப்படும் வரை ஊடகங்களும் எழுத்தாளர்களும் ‘இடர்கோள்’ என்ற சொல்லைத்தாராளமாகப் பயன்படுத்தலாம்.

தி. வெற்றிச்செல்வன், மேலைச்சிவபுரி

பதிவுகள்

ஏப்ரல் இதழில் முத்தாய்ப்பாக மலையாள திரைப்படம் மஞ்ஞுமல் பாய்ஸ் விமர்சனம் ரொம்ப சிறப்பு.

தேர்தல் களத்தில் பாவலர் வரதராஜன் பாடல்களால் பொதுவுடைமை இயக்கம் வெற்றி பெற்ற காலம். சிவகிரி கார்க்கி வில்லிசை, பிச்சைக்குட்டி வில்லிசை பெயர் பெற்ற காலம், மக்களை விழித்தெழச் செய்தது. பின் அது தலைவர்களைப் பாராட்டும் தொழிலாக மாறியது. இன்று காசுக்காக பிரச்சாரம்.

கால்நடை மருத்துவர் முத்துகிருஷ்ணன் சாதூர்யம் பாராட்டுக்குரியது. மதுரா டிராவல்ஸ் பாலன் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. டிராட்ஸ்கி மருது ஒரு அற்புத கலைஞன். இந்த மாத அந்திமழை சிறந்த பெட்டகமாக, வாழ்வில் நடந்த சுவாரஸ்யங்களைப் பதிவு செய்கிறது.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

மகிழ்ச்சி

தமிழகத்தில் எந்தெந்த கட்சியில் என்னென்ன பெயரில் கலைக்குழுக்கள் இயங்குகின்றன. அவற்றிற்கு அதிகப் பங்களிப்பினைத் தந்து வருபவர்கள் யார், யார் பேசுபொருள்கள் எவ்வாறு கருவாகி உருவாகிறது என்பவை குறித்த தகவல்களின் திரட்டாக அமைந்த சிறப்புப் பக்கங்கள் படிக்கத் தக்கவை பாரட்டத்தக்கவை.

எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே வாழ்க்கையின் விதி. உடைந்த, அழுக்கான கிருஷ்ணன் பொம்மை மனிதனின் முழுமையற்ற தன்மையின் குறியீடு எனலாம். வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள அ. முத்துலிங்கத்தின் மொழி் பெயர்ப்புச் சிறுகதை சிலை விளையாட்டு சிந்திக்கவும் சிலிர்க்கவும் வைத்தது.

ஆங்கிலத்தில் எழுதும் இளைய தலைமுறை தமிழ் எழுத்தாளர்களின் இது போன்ற ஆழமான எழுத்துகள் நம்பிக்கை ஊட்டுவனாக இருப்பது மகிழ்வையும், பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது.

மு.இராமு, திருச்சி

மாய உலகு

இளையராஜாவின் பயோபிக் சிறப்புக் கட்டுரை படித்து மனசு குளிர்ந்தது, அவரது தனித்த இசை ஞாபகம் குளிர்வித்தது; அவர் மீதான வன்மக் கட்டுக்கதைகளால் கனத்தது; அன்னக்கிளி பாடல்களின் இசை ஞாபகங்களால் மறுபடி மறுபடி களவாடப்பட்டு இலேசானது. எண்பத்து இரண்டு வயது, நாற்பத்தெட்டு வருட பயணம், ஆயிரத்து ஐநூறு திரைப்படங்கள், கணக்கிலடங்கா திரைக்கலைஞர்களுடனான பரிச்சயம், ஏற்ற இறக்கங்க ளுடனான வாழ்க்கை, தனி வாழ்க்கை இழப்புகள் என்று பயோபிக்கை காட்சிகளால் தளும்பத் தளும்ப நிறைத்திட கொட்டிக்கிடக்கும் அவரது வாழ்க்கை வழித்தட சுவடுகள் கண் முன்னே விரிந்தன. இசை ஞானியின் மாய உலகை மூடுபனியாய் காட்டியிருந்தது கட்டுரையின் தனிச்சிறப்பு.

பேரா. கரு. பாலகிருஷ்ணன், பெரிய காரை-630 311.

சிந்தனைப் பொறிகள்

சுபிட்ச முருகன் ‘கனவின்குரல்’ என ஆசீர்வதிக்க நாவல் பிறந்த கதை என்று சரவணன் சந்திரனின் பேனா சிந்திய துளிகள் எல்லாமே சிந்தனைப் பொறிகள்! சுபிட்ச முருகன் என்ற சொல்லே தித்திப்புதான் என்ற நிறைவான அனுபவத்தை திரை விலக்கிப் புரிந்தபோது இலக்கிய மேகம் கனத்து கறுத்துப் புரண்டு திரண்டு  பொழிந்த விதத்தில் என் கனத்த இதயமும் நனைந்து கரைந்தது!

என்.ஜானகிராமன்

செல்வ மருதூர்

ஒரு சந்தோஷம்

 இந்தியாவில் ஒரே ஆண்டில் ஆணுறைகள் விற்பனை இருமடங்காக உயர்ந்திருக்கும் சாதனையை விளக்கினீர், ஹைகூ சைஸ் நியூஸ்சாக இருந்தாலும் புல்லரிக்க வைத்தது. எப்படியோ, குப்பைத் தொட்டிகளுக்கு குழந்தைகள் போகாமல் அதிகரிக்கும் ஆணுறைகள் தடுக்குமென்பதில் ஒரு சந்தோஷமே.

அண்ணா அன்பழகன் அந்தணப்பேட்டை.

லட்டு

குழலிமாணிக்கவேலின் ஆங்கிலமும் முத்துலிங்கத்தின் தமிழ் ஆக்கமும் கலந்து கட்டிய இலக்கியத்தேனடை ‘சிலை விளையாட்டு.” சிறந்த கலை ஆராட்டு! எட்டுப்பக்கமும் லட்டு லட்டாக.

ஆர்.உமா காயத்திரி

திசையன் விளை

காத்திருப்போம்

எம்ஜிஆர் முதல் கமல்ஹாசன் வரை காதலித்து கைவிட்ட கதையை மணிரத்தினம் கையிலெடுத்தபோது இணைய உபயத்தில் எத்தனை வன்ம வெளிப்பாடுகள். குந்தவைக்கு திரிஷாவா முதல் வந்திய தேவனாக கார்த்தியா வரை எத்தனை நக்கல்கள். பொன்னியின் செல்வன் படம் வந்த பிறகு இரண்டு பாகங்களாக கொண்டாடப்பட்டதே. இளையராஜா பயோபிக் படமும் வரட்டும். அதுவரை காத்திருப்பதே சுகம். டிரைலராக அசத்தியது, அந்திமழை அட்டைப்படம்.

மல்லிகா அன்பழகன்

சென்னை-78

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com