சுப்புலட்சுமி ஜெகதீசன்
சுப்புலட்சுமி ஜெகதீசன்

'அதப் படிச்சிட்டு என்னை வந்து பாரு என்றார் கலைஞர்'

நான் 1980ஆம் ஆண்டுல தி.மு.க.வுக்கு வந்தேன். அப்போது தேர்தலும் வந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடறயானு கலைஞர் கேட்டார். ‘இல்லைங்க அண்ணா, இப்போதான் கட்சிக்கு வந்திருக்கேன். எனக்கு முன்னால இயக்கத்துக்காகப் பணியாற்றியவர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க. அவர்களில் யாராவது நிற்க விரும்புவாங்க. புதிதா வந்த நான் நின்னா, அவங்களுக்கு மன வருத்தம் ஏற்படும். அடுத்த தேர்தல்வரை கட்சிப்பணி செய்றேன். அதற்குப் பிறகு போட்டியிட வாய்ப்பு தாங்க' னு சொல்லி, அந்தத் தேர்தலில் நிக்காம ஒதுங்கிட்டேன்.

அப்போதிருந்துதான் என் பொதுக்கூட்டங்கள் ஆரம்பமாச்சு. மாநிலம் முழுவதும் பேசும்படி சொல்லிட்டார், தலைவர். கட்டளைதான், அது. ஐயா பெரியார், அண்ணா வழியில், சமூகத்தில பெண்களின் பங்கேற்பை நடைமுறையில கொண்டுவந்ததுல, கலைஞருடைய பங்கு அதிகம். அந்தக் காலத்துல அரசு அலுவலகங்களுக்குப் போனா, பேருக்கு ரெண்டு மூணு பெண்கள மட்டும்தான் பாக்கமுடியும்; அந்த நிலைய மாத்த அரசு ஊழியர் நியமனத்துல 30% பெண்களுக்கு ஒதுக்கீடு கொண்டுவந்தார். அரசியல்லயும் அவர் கொண்டுவந்த 33% ஒதுக்கீட்டுக்குப் பிறகு இன்னைக்குப் பாருங்க எத்தனை பெண்கள் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் அரசியல்ல செயல்பட்டு வராங்கனு... மேயர்வரைக்கும் வந்திருக்காங்களே... இதெல்லாம் கலைஞர்ங்கிற ஒரு தலைமைப் பண்புள்ள& தொலைநோக்குப் பார்வைகொண்ட ஒருத்தரோட இடைவிடாத கவனமான சிந்தனை, செயல்பாட்டாலதான் உருவாகியிருக்கு. இன்னைக்குத் தலைமுறைக்கு இது மிகச் சாதாரணமானதா இருக்கலாம். இந்த முறையிலதான் என்னைப் போல ஆட்களையும் அவர் வளர்த்தெடுத்தார்.

கட்சியில பேச்சாளர்ங்கிறது உறுதியாகிப் போனதும், ஆறாம் வகுப்பு படிச்சிகிட்டிருந்த மகனை கவனிக்க, எங்க தாயார் வீட்டுக்கு வந்தாங்க. அவங்களால முடியல. அப்போ ஈரோட்டுல குடியிருந்தோம். நகரத்துலயே விடுதி இருக்கிற ஒரு பள்ளியில மகனைச் சேத்துவிட்டுட்டு, நானும் என் கணவரும் பொதுக்கூட்டங்களுக்குப் போய்வந்தோம். மாதம் 20 கூட்டங்களாவது இருக்கும். யாருகிட்ட எந்த வேலையக் கொடுத்தா எப்படி செய்வாங்கனு அவருக்குத் தெரியும். என்னைய நம்பி அவர் தந்த வேலைகளை பாராட்டக்கூடிய அளவுக்கு செய்துமுடிப்பேன். அதனாலதான் என் மீது மதிப்பும் மரியாதையும் அவருக்கு இருந்தது.

ஆனாலும், அரசியல்ல பெண்கள் முன்னேற்றத்தைத் தாங்கிக்க முடியாத சிலர் இருப்பாங்க இல்லீங்களா... அதனால தலைவர்கிட்ட என்னைப் பத்தி குறை சொன்னாலும், 'அந்தப் பொண்ணப் பத்தி எனக்குத் தெரியும்பா; நீங்க போங்க. நான் பாத்துக்கிறேன்'னு சொல்லிடுவார். என் மேல அவருக்கு நம்பிக்கை. அந்த அளவுக்கு அவர் எதை விரும்புவார் எதை வெறுப்பார்னு உணர்ந்து அந்தத் தலைவர்கிட்டப் பணியாற்றியிருக்கோம். அதேசமயம், தப்புன்னா நேரடியா, நீ தப்பு செய்றேனு நம்மகிட்டச் சொல்லிடுவார்.  

அவரைப் போல ஒரு தலைவரை யாரும் பார்க்கமுடியாது. அவருடைய உழைப்பு அவ்வளவு... இரவு 11/12 மணிவரை படிப்பார்... காலை 4/5 மணிக்கு எழுந்திடுவார்... உடனே பேப்பர்களப் படிச்சு, துறைரீதியான செய்திகள் வந்திருந்தா, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை உடனே அழைச்சு, உன் துறையப் பத்தி இப்படி செய்தி வந்திருக்கு; அதப் படிச்சிட்டு என்ன வந்து பாரு'ன்னு சொல்வார். இப்படி பல முறை நடந்திருக்கு. நானும் ஒரு முறை எதிர்கொண்டிருக்கேன். ஒரு நாள் காலைல 6 மணிக்கு ஃபோன் வந்தது. கணவர்தான் எடுத்தார்... தலைவர் பேசுறார்னார்... ‘என்ன செய்துகிட்டிருக்கே'னு கேட்டார். ‘இப்பதான்..ணா தூங்கி எழுந்தேன்'னு சொன்னேன். அப்போ, இந்தியா டுடே தமிழ் இதழ் வந்திட்டிருந்தது. சமூக நலத் துறை என் பொறுப்பு.  அதில, அருப்புக்கோட்டை பகுதியில பெண் சிசுக் கொலை அதிகமா நடக்குதுனு கட்டுரை வந்திருந்தது. அதப் படிச்சிட்டு என்னை வந்து பாருனு சொன்னார்.

அந்தக் கட்டுரையப் படிச்சிட்டு தலைவரைப் பார்த்தேன். நேர்ல போய் விசாரிக்கிறேன்னுட்டு, அன்னைக்கே மதுரைக்குப் போயிட்டேன். மாவட்ட ஆட்சியர், மாவட்ட சமூக நல அலுவலரைக் கூட்டிப் பேசிட்டு, எந்தெந்த ஊராட்சி ஒன்றியத்தில இதுபோல நடக்குதுன்னு அதிகாரிகளையும் அழைச்சிட்டு, அங்க இருந்த மக்கள் பிரதிநிதிகளையும் பாத்தோம். அவங்களுக்கு மக்களோட நெருக்கமான தொடர்பில இருக்கிறவங்கள விசாரிச்சதுல, அது ஓரளவு உண்மைனு தெரியவந்தது.

மீண்டும் மதுரைக்கு வந்து ஆட்சியரோட கலந்து பேசினோம். அப்போ, தெருவோரத்தில விட்டுட்டுப் போற சிசுக்களை எடுத்து வளர்க்கிற தன்னார்வ அமைப்பு ஒண்ணு இருக்கு... அவங்கள நீங்க சந்திக்கமுடியுமானு கேட்டார். அவங்களும் மதுரைக்கு வந்தாங்க... பேசினேன். அவங்க சொன்னங்க...‘எங்களுக்கு அங்கங்கே கிராமங்களில தன்னார்வலர்கள் இருக்காங்க. இந்த மாதிரி பெண் குழந்தைங்க பிறந்து சிசுவை வளர்க்க விரும்பலைனு தெரிஞ்சதும், அவங்க போய் அந்தக் குழந்தைங்களை எங்க மையத்துக்கு கொண்டுகிட்டு வருவாங்க. அந்த சிசுக்களை சின்ன ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வளர்த்திட்டு வரோம். உணவு, மருந்து, உடைகள், மத்த செலவுகள்னு வாங்குறதுக்கு நிதி நெருக்கடியா இருக்கும்மானு சொன்னாங்க. போதுமான நிதியை அரசு தந்தா, இந்தத் திட்டத்தை நல்லா செயல்படுத்துவீங்களானு கேட்டேன். செய்றோம்னாங்க. உடனே ஆட்சியருக்கும் மாவட்ட சமூக நல அதிகாரிக்கும் மனு கொடுங்கனு சொல்லி, வாங்கினோம்.

சென்னைக்குப் போய், முதலமைச்சர் கலைஞரைப் பார்த்து, எங்க போனோம் வந்தோம் நடந்தது என்னனு விவரமா சொன்னோம். அதைக் கேட்டுகிட்டு, உடனே நிதித்துறைக்கு சொல்லி, அதுக்குனு குறிப்பிட்ட தொகைய தலைவர் ஒதுக்கினார். அவங்கள இந்தத் திட்டத்தைச் சிறப்பா செய்யச் சொல்லுனு முனைப்பு காட்டினார். அதுக் கடுத்து, அந்தக் குழந்தைகளைப் பாதுகாக்கிறதுக்கு தனித் திட்டம் கொண்டுவரதா இருந்தது; அதுக்குள்ள 1991இல் கலைஞர் ஆட்சியக் கலைச்சிட்டாங்க. பிறகு வந்த ஜெயலலிதா, தொட்டில் குழந்தை திட்டம்னு கொண்டுவந்தாங்க.

மாதம் ஒரு முறை, ஒவ்வொரு அமைச்சருடைய துறைகள் பத்தியும் ஆய்வுசெய்வார். முதலமைச்சருடைய செயலாளர்களில் அந்தந்த துறைகளப் பாத்துக்கிறவங்க மூலமா இன்ன நடந்துகிட்டிருக்கு, இன்ன நிலுவையில இருங்குங்கிறதை நல்லா கேட்டு தெரிஞ்சு வச்சிக்குவார். பிறகு அமைச்சர்களக் கூப்பிட்டு, உங்க துறையில திட்டங்கள் என்னென்ன நிலைமையில இருக்கு, நிதிநிலை அறிக்கைல அறிவிச்ச திட்டங்கள் என்ன நிலவரம்னு கேப்பார். உண்மைய ஒழுங்கா சொல்லிட்டோம்னா தப்பிச்சோம்... மாத்தி ஏதாவது சொல்லிட்டோம்னா,‘இல்லை, நீ சொல்றது தப்பு; உன் துறையில இப்படி நடந்துகிட்டிருக்கு... இப்படி செய்யுங்க அப்படிச் செய்யுங்க'னு அறிவுரையும் ஆலோசனையும் சொல்வார்... அவர்தான் ஏற்கெனவே சேகரிச்சு வச்சுகிட்டிருக்கிற விவரங்கள கையில வச்சிருக்கார்தானே...!

யார் என்ன கருத்து சொல்றாங்கனு நல்லா கவனிப்பார்.. எனக்கு ஒரு விஷயம்  நல்லா நினைவிருக்கு... இலவச மின்சாரம் பத்தினது!

1984ஆம் ஆண்டோ 86ஆம் ஆண்டோ ஈரோட்டுல விவசாயிகள் மாநாடு நடத்தினோம். ரெண்டு நாள் மாநாடு அது. அப்போ வந்த தலைவர்கிட்ட, எப்படியாவது இலவச மின்சாரம் கொண்டுவரணும்னு வலியுறுத்தினோம். தாங்குமானு கேட்டார், தலைவர். எடுத்துச்சொன்னோம். பிறகு, 1989 தேர்தல்ல அது தேர்தல் வாக்குறுதியா ஆச்சு. ஆட்சிக்கும் வந்தாச்சு. அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில, தலைமைச்செயலாளர், மின்வாரிய அதிகாரிகள்லாம் இலவச மின்சாரம் தர்றதுல சிரமம் இருக்குனாங்க. 'முன்னோட்டமா, 5 எச்.பி. மோட்டார் உள்ளவங்களுக்கு மட்டும் தரலாம். பிறகு அதனோட தாக்கம் எப்படி இருக்கும்கிறதப் பொருத்து மெல்ல மெல்லப் பண்ணலாம்'னு

சொன்னாங்க. அப்போ 12 எச்பி, 15 எச்பி எல்லாம் குறைவு; அதனால 'சிறு விவசாயி, பெரு விவசாயினு பாக்கவேணாம்; விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தரணும்னு வீரபாண்டி ஆறுமுகம், கோசிமணி, நான்'னு தலைவர்கிட்ட வலியுறுத்தினோம்.

விவசாயம் செய்றவங்கதானே... எத்தனை எச்.பி.யா இருந்தாலும் விவசாயத்துக்கு இலவச மின்சாரம்னு அறிவிச்சார். 

1996 மொடக்குறிச்சி தொகுதி தேர்தல்ல ஆயிரம் பேருக்கும் மேல போட்டியிட்டதால, வாக்குச்சீட்டு ஒவ்வொண்ணும் ஒரு புத்தகம்போல ஆயிருச்சு. ஒரு மாதம் கழிச்சுதான் தேர்தல் முடிவு வந்தது. கையோட தலைவரப் போய் பார்த்தேன்.

அதுக்குள்ள அமைச்சரவை அமைஞ்சிருச்சு. ரொம்ப சங்கடமா என்கிட்ட, என்ன செய்யலாம்மானு கேட்டார். அப்போ, என் மேல தடா வழக்கு பதியப்பட்டு, பூந்தமல்லி தனி நீதிமன்றத்துல விசாரணை. நான் சொன்னேன், ‘அண்ணா, வாரம் மூணு நாளாவது விசாரணைக்குப் போகவேண்டியிருக்கும்... வழக்கை முடிச்சிட்டே வரேன்'னு... பக்கத்துல இருந்த முரசொலி மாறனும், 'ஆமாம், அதுதான் சரி'னு சொன்னார். 96, 97, 98, 99 ஆச்சு அந்த வழக்கு முடிய... ஆட்சியே முடியப்போற கட்டமும் வந்துருச்சு. 2001 தேர்தல்ல ஆட்சிக்கு வரல. 2004ஆம் ஆண்டுல மக்களவைத் தேர்தல். தலைவரே கூப்பிட்டு, ‘திருச்செங்கோடு தொகுதிக்கு போட்டி போடு'னு சொன்னார். வெற்றியும் அடைஞ்சு, என்னைய ஒன்றிய அமைச்சரவையிலயும் இடம்பெற வச்சவர், கலைஞர்.   

இத்தனைக்கும் நான் அதிமுகவுல இருந்து வந்திருந்தேன். எம்ஜிஆர் அமைச்சரவையில இருந்த என்னப் பத்தி அப்பப்போ அவர்கிட்ட புகார், குறை சொல்லிகிட்டே இருந்தாங்க. அவரும் அதக் கேட்டுகிட்டு என்கிட்ட கோவிச்சுக்குவார். சில நாள்களில உண்மை தெரிஞ்சதும் சமாதானமா பேசுவார். இது தொடர்ந்துகிட்டே இருக்கவும், ஒரு கட்டத்துல, அரசியலைவிட்டே விலகி, பழையபடி ஆசிரியராவே போயிடலாம்னு என் கணவர்கிட்டச் சொல்லி ஊர்திரும்பத் தயாராகிட்டேன்.  பதில் சொல்லி மாளமுடியாம தூரத்து உறவினரான கோவை செழியன் வீட்டுல போய் சில நாள் தங்கிட்டோம். அவர், கலைஞர்கிட்ட இப்படி சுப்புலட்சுமி நம்ம வீட்டுலதான் தங்கியிருக்குனு சொல்ல... உடனே கலைஞர், துரைமுருகனையும் ஆற்காடு வீராசாமியையும் அனுப்பி என்னச் சந்திக்க வச்சார்.

ஏற்கெனவே, கலைஞர், சட்டமன்றத்துல என்னோட பதிலுரைகள், வாதங்களை எல்லாம் கவனிச்சு கேப்பார்; மரியாதைக்கு வணக்கம் சொல்லிக்குவேன்; மறைந்த அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்துகிட்ட இப்படி ஒரு பெண் நம்ம கட்சியில இல்லையேனு பேசியிருக்கார். இதையெல்லாம் விவரிச்ச ரெண்டு பேரும், ‘அமைச்சராவெல்லாம் இருந்துட்டு மீண்டும் ஆசிரியர் பணிக்குப் போறதெல்லாம் பொருத்தமா... அடுத்து வர்ற (அதிமுக) ஆட்சியால தொந்தரவு வரலாம். பாதுகாப்புக்காகவாவது தி.மு.க.வில சேருங்க'னு சொன்னாங்க. எனக்கும் ஐயா பெரியார், அண்ணா, அடுத்து கலைஞர்னு அரசியல் வழிய அமைச்சுகிட்டேன். 1980 - லயிருந்து 2023வரைக்கும் அதே பயணம்தான்.

கலைஞரைப் போல ஒரு தலைவரை நான் பார்த்ததில்ல. எல்லாருடைய உழைப்பும் எப்படியோ, கலைஞரோட உழைப்பு 150 ஆண்டு கால உழைப்புனு உறுதியா சொல்வேன். அவரைப் போல யாரையும் பார்க்கமுடியும்னு தோணல. 

(நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com