கைவிடாத தலைவர்!
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (2016)எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒட்டன்சத்திரத்தில் நான் போட்டியிட்டு முன்னிலை வகிக்கிறேன். தலைவர் கலைஞர் திருவாரூரில் போட்டியிடுகிறார். நான் முன்னிலை வகிப்பதை வாக்குகள் எண்ணப்படும் சாவடியிலிருந்து கலைஞர் அவர்களுக்கு கழகத் தோழர் ஒருவர் அலைபேசியில் தெரிவிக்கிறார். அத்துடன் தலைவரை விட அதிக வாக்குகள் முன்னிலை வகிப்பதாகவும் நம்மளை விட முந்திருவாரு போல இருக்கே என்றும் சொல்லுகிறார். அதைக்கேட்ட தலைவர் அமைதியாக ஒரே கேள்வி கேட்டிருக்கிறார்.
‘சக்கரபாணி எந்த கட்சிப்பா? நம்ம கட்சிதானே?' என்று. நம்ம கட்சிக்காரன் தானே அதிக வாக்குகளைப் பெறுகிறான்.. அதில் தானே நமக்கு மகிழ்ச்சி என்று இதற்கு அர்த்தம்.
என்றைக்கும் கட்சியையும் கட்சிக்காரர்களையும் கைவிடாத தலைவர் அவர்!
1999, செப்டம்பர் 11 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒட்டன்சத்திரம் வருகிறார். அந்த சமயத்தில் நான் மாவட்டச் செயலாளராக இருக்கிறேன். அன்று முதல்வராக இருந்த கலைஞர் பிரசாரத்தில் பேசுகையில் இவ்வாறு சொன்னார்: 'நான் வருகிற வழியிலே நம் கழகக்கொடிகள் நடப்பட்டிருப்பதைக் கண்டேன். சாலையின் இருபுறமும் கம்பங்களை நட்டு சேதப்படுத்தாமல் சாலையில் நடுவே குரோட்டன்ஸ் செடிகள் போல கொடிகளை வைத்து வரவேற்றதைக் கண்டு மகிழ்ந்தேன். சாலையையும் சேதப்படுத்தக்கூடாது; தலைவரையும் வரவேற்கவேண்டும்; இருவண்ணக் கொடிகளும் பறக்கவேண்டும் என்கிற எண்ணத் தில் இப்படியொரு நற்செயலை அன்புத்தம்பி சக்கரபாணி செய்துள்ளார். இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழகத்தின் அனைத்துக்கழகத்தொண்டர்களையும் எப்படி ஒட்டன்சத்திரத்தில் சாலையை சேதப்படுத்தாமல் கொடி நட்டுள்ளார்களோ அதேபோல் நடவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.; தலைவரிடம் இருந்து பெற்ற இந்தப் பாராட்டு எனக்குக் கிடைத்த அரிய பரிசு.
2011 - இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தலைவர் உட்பட நாங்கள் 23 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வானோம். அறிவாலயத்திலே கூட்டம். பேராசிரியர், ஆற்காட்டார் போன்றவர்கள் வந்து அமர்ந்தார்கள். கழகத்தின் இன்றைய தலைவர் முதலமைச்சரும் பொதுச்செயலாளரும் இருந்தார்கள். சட்டமன்றத்தில் கழகத்தின் தலைவரையும் பிற நிர்வாகிகளையும் தேர்வு செய்யும் கூட்டம் அது. தலைவர் கலைஞர் தன் சட்டைப்பையில் இருந்து ஒரு தாளை எடுத்து வாசித்தார். இந்த சட்டமன்றத்தில் திமுக சட்டப்பேரவைக் கட்சித்தலைவராக மு.க. ஸ்டாலின்; துணைத்தலைவராக துரைமுருகன் என்று அறிவித்தவர், அடுத்துச் சொன்ன வார்த்தைகள் என் மனதில் கல்வெட்டாகப் பதிந்துவிட்டன. ‘ஆளுங்கட்சியில் அரசுக் கொறடாவாக இருந்து அருமையாக, செம்மையாக, திறமையாக, சிறப்பாக பணியாற்றிய தம்பி சக்கரபாணி அவர்களை மீண்டும் கட்சியின் கொறடாவாக நியமிக்கிறேன்' என்றார். இப்படி நான்கு அடைமொழிகளைப் பயன்படுத்தி என் பெயரை அவர் அறிவித்தது மிகமிக அரிதாக நடக்கக்கூடிய செயல். வசிட்டர் வாயால் பெற்ற பட்டம் என்று அருகில் இருந்த பிற சட்டமன்ற உறுப்பினர்கள் சொன்னார்கள்.
அது 2010 ஆம் ஆண்டு. கலைஞர் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க ஒரு மாலை நேரம் சென்றேன். அவரை அறையில் சென்று பார்க்கமுடியாது. மாலையில் சக்கரநாற்காலியில் புல்வெளிக்கு அழைத்துவரப்படுவார் அப்போது காணலாம் என்று சொல்லப்பட்டது. தலைவரின் உதவியாளர் சண்முகநாதனிடம் விவரத்தைக்கூறி, தலைவரிடம் ஒரு கடிதம் கொடுக்கவேண்டும், தொகுதிப்பிரச்னை பற்றியது என்றேன். எனக்கு ஒரு முகக்கவசம் அணிவித்துப் போய்ப்பாருங்கள் எனறார்கள். நான் ஒரு சிறுதாளில்,'மாண்புமிகு முதல்வர் கவனத்துக்கு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் கொத்தியம் என்ற இடத்தில் நல்லதங்காள் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. நாளை நிதிநிலை அறிக்கைக்கூட்டம் நடைபெறும் காரணத்தால் இத்திட்டத்தை அறிவித்தால் அங்குள்ள பொதுமக்களும் விவசாயிகளும் பெரிதும் பலனடைவார்கள். எனவே இத்திட்டத்தை அறிவிக்க உதவி செயுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று மட்டும் எழுதி இருந்தேன். வாங்கிப் படித்துப் பார்த்தார். அதை உதவியாளரிடம் அளித்து நிதிச்செயலருக்கு தெரியப்படுத்துமாறு கூறினார். வேறொன்றும் சொல்லவில்லை. நான் திரும்பிவந்துவிட்டேன்.
மறுநாள் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கலைஞர் மருத்துவமனையில் இருந்ததால் கலந்துகொள்ளவில்லை. பேராசிரியர் வாசித்த நிதிநிலை அறிக்கையில் வேறெந்த திட்டங்களும் மாநிலத்தில் அறிவிக்கப்படவில்லை; அறிக்கையின் பத்தாவது பக்கத் தில் நல்லதங்காள் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டபோது சட்டமன்றத்தில் இரண்டு பேரின் கரங்கள் ஓயாது தட்டிக்கொண்டே இருந்தன. ஒன்று என்னுடைய கரங்கள். இன்னொருவர் எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஐ பெரியசாமி.
இந்த அணைத்திட்டம் வந்ததனால் இன்று அங்குள்ள ஐம்பது கிராம மக்கள் பயனடைந்து வருகிறார்கள். சில இடங்களில் உப்புத்தண்ணீர் நல்ல தண்ணீராக மாறிவருகிறது. விவசாயிகள் பலன் அடைந்துவருகிறார்கள்.
அப்படி ஒரு அறிவிப்பு வரும் என்று நான் எதிர்பார்த்திருக்கவே இல்லை. கூட்டம் முடிந்ததும் அப்போதைய நிதிச்செயலர் ஞானதேசிகனிடம் இந்த தகவல் முதலமைச்சரிடம் இருந்து உங்களுக்கு எப்போது வந்தது என்று கேட்டேன். இரவு பத்துமணிக்கே வந்துவிட்டது எனப் பதிலளித்தார்.