முத்துக்காளை
முத்துக்காளை

முத்துக்காளையின் என்றும் தீராத ஏக்கம்!

வடிவேலுவை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ‘ செத்துச் செத்து விளையாடுவோமா?' என்று கேட்ட ஒரே காமெடியின் மூலம் உலக பேமஸ் ஆனவர் முத்துக்காளை. இது நகைச்சுவை என்றால், சினிமாவில் ஸ்டண்ட் கலைஞர்கள் எடுக்கும் ரிஸ்கானது நிஜத்தில் செத்துச் செத்து விளையாடும் 'கரணம் தப்பினால் மரணம்' விளையாட்டுதான். தன் சினிமா வாழ்நாளின் துவக்கத்தில் ஐந்து ஆண்டுகள் ஸ்டண்ட் கலைஞராகப் பணியாற்றியவர்தான் இந்த முத்துக்காளை என்றால் 2கே கிட்ஸ்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

உற்சாகமாக பழைய நினைவுகள் குறித்துப் பேச ஆரம்பித்தார் முத்துக்காளை.

''ராஜபாளையத்துக்குப் பக்கத்துல இருக்குற சங்கம்பட்டிதான் என்னோட சொந்த பூமி. சஞ்சீவி மலை அடிவாரத்துலதான் என்னோட வீடு. சினிமா மேல அவ்வளவு ஆர்வம். ஆனா நடிகனா இல்ல. ஒரு ஃபைட் மாஸ்டராகணும்னு. சின்ன வயசுலயே புரூஸ்லீ, ஜாக்கி சான் படங்கள்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். 12 வயசுப் பையனுக்கு என்னவெல்லாம் ஆசை இருக்கும்? ஆனா அந்த வயசுல என்னோட ஒரே ஆசை ஃபைட் மாஸ்டர் ஆகுறதுதான். அப்பவே முழு மூச்சா சண்டை கத்துக்க ஆரம்பிச்சி, 18 வயசுலயே கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கிட்டேன்.

அடுத்த நாலஞ்சு வருஷத்துல சென்னைக்கு கிளம்பி வந்து சினிமா சான்ஸ் தேட ஆரம்பிச்சுட்டேன். உடனே நடக்குமா? பிளாக் பெல்ட் வாங்கியிருந்ததால ஸ்டண்ட் யூனியன்ல மெம்பரா சேர்ந்து ஃபைட்டரா வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். ஒரு 30 படங்கள் வரைக்கும் ஃபைட்டரா வேலை செஞ்சிருப்பேன்னா, அதுல 20 படங்கள் ஸ்டண்ட் சிவா மாஸ்டரோடது. அவர் என்னை அவ்வளவு சப்போர்ட் பண்ணுனார்.

அடுத்து நான் சினிமாவுல மறக்க முடியாத நபர்  டைரக்டர் எஸ்.பி. ராஜ்குமார் சார். அவர்தான் ஸ்டண்ட் அசிஸ்டெண்டா இருந்த என்னை நடிகனாக்கினார்.

முரளி கூட நடிச்ச ‘இரணியன்' தான் என்னோட முதல் படம். அடுத்து ‘பொன் மனம்'. மூணாவது படமான ‘ என் புருஷன் குழந்தை மாதிரி' படம் தான் என்னை ஒரு நடிகனா ரொம்ப பிரபலமாக்குச்சு. இன்னைக்கும் அந்தப் படத்தோட ‘செத்துச் செத்து விளையாடுவோமா' காமெடி மீம்ஸ்கள்ல ட்ரெண்டிங்ல இருக்கு. இந்த ரெண்டு படங்களுமே எஸ்.பி. ராஜ்குமார் சார் இயக்கியது.

இவங்க ரெண்டு பேருக்கு அடுத்ததா என்னோட ஆரம்ப காலங்கள்ல நடிகர் வடிவேலுவும் என்னை கொஞ்சம் சப்போர்ட் பண்ணுனார். ஆனா இப்ப நானும் அவரும் தொடர்பு எல்லைக்கு அப்பால போய் பதினைஞ்சு வருஷமாச்சி.

அடுத்த அஞ்சு வருஷங்கள் ஸ்டண்ட் அசிஸ்டெண்டாவும், நடிகராவும் மாறி மாறி வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு. வாழ்க்கையோட லட்சியமான ஃபைட் மாஸ்டராகுறதா, இல்லை நடிகனாவே இருக்கலாமான்னு கொஞ்சம் குழப்பம்.

அந்த சமயத்துல சில படங்களுக்கு ஸ்டண்ட் அசிஸ்டென்டா போனப்ப, மத்த நடிகர்களுக்கு டூப் போடுறதுக்காக கூப்பிட ஆரம்பிச்சாங்க. காரணம் அவ்வளவு துறுதுறுன்னு இருப்பேன். குறிப்பா ஆஸ்கார் ஃபிலிம்ஸ்ல இருந்து வையாபுரிக்கு டூப் போட கூப்பிட்டதை சொல்லணும். டூப் போடுறதுல எனக்கு அவ்வளவா விருப்பம் இல்லை. அப்ப இனி ஸ்டண்ட் அசிஸ்டென்ட்ங்குற அடையாளத்தை மாத்திக்கிட்டு முழுமூச்சா நடிகனாகணும்னு முடிவெடுத்தது அப்பதான்.

சினிமாவுக்கு நுழைஞ்சு 30 வருஷங்கள் ஆச்சி. சரியான நேரத்துக்கு ஷூட்டிங் போறது, சம்பள விஷயத்துல அனுசரிச்சிப்போறது, தயாரிப்பாளர், இயக்குநர்கள் கிட்ட நல்லபடியா நடந்துக்குறதன் மூலமா எப்பவுமே கைவசம் 10 படங்கள் இருந்துக்கிட்டே இருக்கும். ரிலீஸாகுற பத்து படங்கள்ல மூணு படங்கள்லயாவது நான் இருந்துக்கிட்டேயிருப்பேன்.

மறக்க முடியாத விஷயம்னா, ஒரு சமயம், நான் குடிப்பழக்கத்தை அடியோட நிறுத்திட்டேன்னு அறிவிச்சப்ப, அதை ட்விஸ்ட் பண்ணி, குடிப்பழக்கத்தாலேயே நான் இறந்துபோனதா நியூஸ் பரப்பினாங்க. அதைப் படிச்சு துடிச்சுப் போய்ட்டேன் மத்தபடி ஒரு நடிகனா வாழ்க்கை திருப்திகரமாவே போய்க்கிட்டிருக்கு. ஆனா ஃபைட்டரா தொடர்ந்து இயங்கி இருந்தா மாஸ்டராகி, இன்னும் உயரத்துக்குப் போயிருப்போமோங்குற ஏக்கம் மனசோட ஓரத்துல எப்பவுமே இருக்கு. இன்னைக்கும் ஆக்‌ஷன் படங்கள் பாக்குறப்ப, இந்தப்படத்துக்கு நாம ஃபைட் மாஸ்டரா இருந்தா அந்த ஷாட்டை அப்பிடி வச்சிருக்கலாம், இப்பிடி வச்சிருக்கலாம்னு தோணிக்கிட்டேயிருக்கும்.

முதல் காதல் மாதிரி, முதல் ஆசையும் எப்பவும் மனசை விட்டுப் போகாது இல்லையா?' என முடித்தார் முத்துக்காளை.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com