105 மாணவர்கள் கொண்ட பள்ளியை ஓரே ஆளாக பல ஆண்டுகளாக நிர்வகிக்கும் ஆசிரியர்!
ரவி பாலட்

105 மாணவர்கள் கொண்ட பள்ளியை ஓரே ஆளாக பல ஆண்டுகளாக நிர்வகிக்கும் ஆசிரியர்!

அசோக் உண்மையிலேயே வெளியே தெரியாத நாயகன்தான். இவரது பள்ளியில் நீங்கள் ஒரு நாள் கழித்தால், கர்நாடகாவின் தொலைதூர குக்கிராமம் ஒன்றில் இவர் ஒற்றை ஆளாக செய்துவரும் சாதனையைக் கண்டு அசந்துபோகாமல் இருக்கமுடியாது.

2000மாவது ஆண்டில் கர்நாடக மாநில கல்விப்பணியில் சேர்ந்தபோது அவருக்கு வயது 20. ஹெம்மடாகியில் உள்ள கீழ்நிலை ஆரம்பப்பள்ளியில்தான் அவருக்கு முதல்பணி நியமனம். இதே பள்ளியில் இப்போது வரை பதினேழு ஆண்டுகளாகப் பணிபுரிகிறார் அசோக். ஹெம்மடாகி கிராமத்தில் ஆயிரத்துக்கும் குறைவான மக்களே உள்ளனர். குருபா, எஸ்.சி. எஸ்.டி,. லிங்காயத்து ஆகிய இன மக்களின் கலவை. அனைவரும் கடினமான வாழ்க்கையையே வாழ்கிறார்கள். திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கமே இன்றும் உள்ளது. கழிப்பறையுடன் கூடிய வீட்டைக் கண்டுபிடிப்பது சிரமம். ஆனால்

அசோக் பணிபுரிந்துவரும்கடந்த பதினேழு ஆண்டுகளில் இச்சமூகம் கல்வியின் மதிப்பை உணர்ந்துள்ளது. அனைத்து குழந்தைகளும் பள்ளிக்குச் செல்கின்றனர்.

ஆசிரியராக அசோக்கின் பயணம் சுயமாகக் கண்டடைதல், சுயமாகக் கற்றல், தொடர் முன்னேற்றம் ஆகியவற்றைக் கொண்டது.  இந்த தூரத்து பணியிடத்தில் ஆரம்பநாட்கள் தனிமையான காலம் என்கிறார். அதுமட்டுமல்ல முயற்சிகளும்

சறுக்கல்களும் கொண்டவை. பியூசி முடித்து, பின் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு முடித்திருந்தபோதும் அவருக்கு பணி அனுபவம் இல்லை. வழக்கமான வழிமுறைகளை அவர் பின்பற்றினார்.  மாணவர்கள் எப்படிக்கற்றுக்கொள்கிறார்கள் என்று புரியாமல் கற்பித்தலில் சிரமப்பட்டார். 2004-இல் கர்நாடக அரசும் அசீம்பிரேம்ஜி அறக்கட்டளையும் வழங்கிய

பயிற்சித் திட்டத்தில்தான் உருப்படியான முதல் பயிற்சியை அவர் பெற்றார். இத்திட்டத்தின் வாயிலாக ஆசிரியர்களுக்கு நலி-கலி என்கிற (விளையாட்டின் மூலம் கற்பித்தல்) பயிற்சி அளிக்கப்பட்டது.

அசோக் இதை நன்கு பிடித்துக்கொண்டார். அதன் நோக்கம், உள்ளடக்கம் ஆகியவற்றில் அவர் தேர்ந்தார். தன் மாணவர்களுக்கு நன்கு கற்பிப்பதற்கான வாய்ப்பை இந்த கற்பித்தல் முறையில் அவர் கண்டார். ‘முன்பு என் வழக்கமான கற்பித்தல் முறையில் இருபது பேரில் பத்துப்பேர் கற்றுக்கொள்வர். நலிகலி முறையில் நிறைய நேரமும் முயற்சியும் தேவைப்பட்டாலும் அனைத்து குழந்தைகளும் கற்றுக்கொள்வர்.' இந்த முறையில் அவருக்கு இருந்த நல்ல திறன் காரணமாக அந்த மாவட்டத்தில் இந்த கற்பித்தல் முறையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பவராகவும் அவர் உள்ளார்.

ஹெம்மடாகி கிராமப் பள்ளிக்கு அவர் வந்ததில் இருந்து ஒரு குழந்தையும் இடைநிற்கவில்லை என்பது அவர் ஒவ்வொரு குழந்தைமீதும் காட்டும் அக்கறையைக் காட்டுகிறது. பள்ளியில் இருந்து தேர்வாகிப் போனபிறகும் அனைத்து குழந்தைகளும் மேனிலை ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்படுவதை அவர் உறுதி செய்துகொள்கிறார். இந்த குக்கிராமத்திலாவது அனைவருக்கும் கல்வி என்ற முக்கிய இலக்கை உறுதி செய்வதில் அவர் குழந்தைகளின் பிரச்னைகளான வீட்டில் சகோதர சகோதரிகளைப் பார்த்துக்கொள்ளும் தேவை, வீட்டு வேலைகள், கிராமத்தில் அங்கன்வாடி இல்லாமை போன்ற தடங்கல்களை சமாளித்துள்ளார்.

இந்த பள்ளியில் நூற்றி ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

சாலையின் இருபுறமும் இரண்டு அறைகளைக்கொண்ட, இப்பள்ளியில் ஐந்து வகுப்புகளையும் கவனிக்க ஒருநாளில் பலமுறை இந்த சாலையை அவர் கடக்கவேண்டும். பதினேழு ஆண்டுகளுக்கு முன்பாக இங்கே வந்தபோது, ஹெம்மடாகிக்கு பேருந்து

சேவை இல்லை. எனவே பக்கத்தில் உள்ள சுகூர் கிராமத்தில் தங்கிக் கொண்டார். சுகூரில் தங்கியதால் தினந்தோறும் காலை எட்டுமணிக்கு பள்ளிக்குச் செல்லவும், எவ்வளவு தாமதமாகவேண்டுமானாலும் வீடு திரும்பவும் இயன்றது. குழந்தைகளுடன் அவர் விரும்பிய நல்லுறவைக் கட்டியமைக்க அது உதவியது. ‘ நகரத்தில் வாழ்வதை விட கிராமத்தில் வாழ்வதற்கான செலவு குறைவு என்பதால் எனக்கு செலவும் மிச்சம். திருமணத்துக்குப் பின்னும் சுகூரில்தான்வாழ்கிறேன். எனது மகனும் என் பள்ளியில்தான் படிக்கிறான்‘ என்கிறார் இனிய புன்னகையுடன்.

 அப்பள்ளியின் அலங்கோலமான பழைய கட்டடங்கள், அடிப்படை வசதிகள் இன்மை ஆகியவற்றை மீறிப் பார்த்தால், சுறுசுறுப்பான,

உற்சாகமான அச்சமற்ற, தேடல்கொண்ட குழந்தைகளை பார்க்கலாம். முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை (ஒன்றாக நடக்கிறது) அசோக் பிஸியாக பாடம் எடுத்துக்கொண்டிருக்கையில், சாலையின் மறுபக்கம் நான்கு மற்றும் ஐந்தாம்வகுப்புகளுக்குச் சென்றால் குழந்தைகள் சுயமாக படிப்பதையும் அசோக் சொல்லித் தந்த கருதுகோள்களை பயன்படுத்திக்கொண்டிருப்பதையும் கண்டு ஆச்சர்யப் படுவீர்கள். நான்கைந்து மாணவர்கள் முன்னின்று மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்கள். அவர்களே சொந்தமாக கணிதத்தில் பயிற்சிக் கணக்குகளை உருவாக்கி, அனைவருமாக சேர்ந்து விடை கண்டுபிடிக்கிறார்கள். புரிந்துகொள்வதில் பிரச்னை உள்ள ஒரு சில மாணவர்களையும் கவனமாக  சேர்த்துக்கொள்கிறார்கள்.  அவர்களின் வேகமும் கூர்மையும் பல பள்ளிகளில் பார்க்கும் மாணவர்களிடம் இருந்து வேறுபட்டிருக்கிறது. ‘என்னுடைய வேலைகளில் பாதி இந்த குழந்தைகளே செய்கிறார்கள். இங்கே நூற்றி ஐந்து மாணவர்கள் உள்ளனர். அனைவரையும் இணைத்துக் கொண்டு செயல்படாவிட்டால் அவ்வளவு பேருக்கும் பாடம் நடத்துவது எனக்கு சாத்தியமாகாது. ஒவ்வொரு நாளும் காலையில் பள்ளியைத் திறப்பது, சுத்தம் செய்வது, மாலையில் மூடுவது போன்ற வேலைகளைச் செய்வதற்காக குழந்தைகளே ஒரு குழுவை அமைப்பதற்கு நான் உதவி உள்ளேன். எட்டு ஆண்டுகளாக பிரச்னையில்லாமல் நடந்துகொண்டுள்ளது. நான் சில நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் பள்ளி சரியான நேரத்துக்கு தொடங்குவதை குழந்தைகளே உறுதி செய்வார்கள். காலை கூட்டம் மற்றும் பிரார்த்தனையை அவர்களே ஒழுங்கு செய்கிறார்கள்.'

2016-இல் கர்நாடக அரசு செய்த மதிப்பீட்டில் கணிதம், சுற்றுச்சூழல் கல்வியில் இந்த ஹெம்மடாகி பள்ளி  சிறந்த பள்ளிகளில் ஒன்றாக இடம் பெற்றது. இதை மேலும் மேம்படுத்த அசோக் கவனம் செலுத்துகிறார். ‘அடுத்த முறை மொழிப்பாட மதிப்பீட்டில் இப்பள்ளி மேலும் முன்னேறவேண்டும்.'

குழந்தைகளுக்கும் அசோக்கும் இடையே இருக்கும் பரஸ்பர நல்லுறவு வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்களுக்கு வீட்டில் கற்பதற்கான சூழல் இல்லாததால், அவர்களுக்கு தினமும் வீட்டுப்பாடம் கொடுப்பதை வலியுறுத்துகிறார்.  ஒவ்வொருவர் செய்த வீட்டுப்பாடத்தையும் திருத்தி கருத்துகள் சொல்லத் தவறுவதில்லை. மாலையில் கிளம்புவதற்கு முன்னால் அன்றைய நிர்வாக வேலைகளையும் முடித்துவிடுகிறார். நன்றியுள்ள மாணவர்கள் பழைய மாணவர்கள் சங்கம் ஒன்று தொடங்கி பள்ளிக்கு உதவிசெய்கிறார்கள். நூலகம் அமைத்தல், அசோக் இல்லாத சமயங்களில் பள்ளியைக் கவனித்துக்கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். ‘நான் என் வேலையை செய்கிறேன். அவர்கள் அதை மதிக்கிறார்கள். பள்ளி மேலாண்மைக் குழு தேர்தல்களைத் தவிர வேறு எப்போதும் நான் கிராம விஷயங்களில் தலையிடுவதே இல்லை. இந்த தேர்தல் நியாயமாக நடப்பதை மட்டும் உறுதி செய்கிறேன்,' என்று தனக்கும் கிராமத்துக்கும் உள்ள அற்புதமான உறவை விளக்குகிறார் அசோக்.

பல ஆண்டுகளாக இந்த பள்ளியின் ஒரே ஆசிரியராக அசோக் மட்டுமே இருக்கிறார் என்பதே சோகமான விஷயம். இங்கே பணியமர்த்தப்பட்ட இன்னொரு ஆசிரியர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி நல்ல இடத்துக்கு மாறுதல் வாங்கிச் சென்றுவிட்டார். கோபமடைந்த உள்ளூர் மக்கள், ஒன்றாகச்  சேர்ந்து பள்ளியைப் பூட்டி விட்டு போராட்டம் நடத்தி டிவி சானல்கள் உள்ளிட்ட உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தனர். இந்த போராட்டம் வெற்றி அடைந்தது. திரும்பவும் அந்த  ஆசிரியர் இங்கே பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் தன்னுடைய சுய கற்றல், வளர்ச்சிக்காக ஒவ்வொரு வழியையும் அதே தீவிரத்துடன் அசோக் தொடர்கிறார்.   ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி மையம் அவரது வீட்டில் இருந்து பதினெட்டு கிமீ தூரத்தில் இருந்தாலும் அசோக், தொடர்ந்து அங்கே  செல்கிறார். சக ஆசிரியர்களுடன் கற்பித்தல் மற்றும் பாடங்களை வளர்த்தெடுப்பது தொடர்பான அம்சங்களை விவாதிக்கிறார். நலிகலி கற்பித்தல் முறையில் இவரது திறமைக்காக மதிக்கப்படும்

அசோக், இந்த அமைப்புகளுக்கு அளிக்கும் பங்களிப்புக்காக  எல்லோராலும் பாராட்டப்படுகிறார். தங்கள் நல்லகுணத்தால் சிலர் நம்மிடையே நீடித்து நிற்கும் நினைவை ஏற்படுத்துகிறார்கள். அசோக்கிடம் அந்த கண்ணுக்குப் புலனாகாத ஈர்ப்பு சக்தி இருக்கிறது.

(எஸ்.கிரிதர் எழுதிய Ordinary People, Extraordinary Teacher நூலில் ஒரு பகுதியின் மொழிபெயர்ப்பு)

நவம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com