ஃபேஸ் புக் இல்லாத உலகு: என் இனிய ‘லைக்’கியவாதிகளே...

ஃபேஸ் புக் இல்லாத உலகு: என் இனிய ‘லைக்’கியவாதிகளே...

திடீரென்று ஒருநாள் ஃபேஸ்புக் சகாப்தம் முடிந்தது என்று செய்தி வந்தால் என்னாகும்? என்று நண்பர் கேட்டார்.

என்ன, குறைந்தது அஞ்சு லட்சம் பேராவது ஹார்ட் அட்டாக்குல செத்துருவாங்க... தப்பிப் பிழைத்தவர்களில் பல லட்சம் பேர் மன நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தஞ்சமடைவார்கள். அவ்வளவுதான். என்றேன். அதிர்ந்து போனார், நண்பர்.

பின்னே... இயல்பான வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு அப்பத்தாக்களிடமும் அப்பாருகளிடமும் ‘உங்க ஐ.டி என்ன அப்புச்சி?' என கேணத்தனமாகக் கேட்கிற தலைமுறைக்கு முகநூலைத் தாண்டியும் பரந்து விரிந்திருக்கிற உலகோடு தொடர்பிருந்தால்தானே? வாழ்வின் சகல இன்ப துன்பங்களுக்கும் சர்வரோக நிவாரணியாக இத்தலைமுறை கருதுவது இந்த முகநூலை மட்டும்தான்.

இவர்களன்றி கொஞ்சம் சமூக அக்கறை கொண்ட முகநூலாளர் என்றால் வரும் சிக்கல்கள் வேறு விதம்.

நீங்கள் கோமாவில் படுத்திருந்தாலும் நாளொன்றுக்கு மூன்று நிலைப்பாடுகளாவது எடுத்தாக வேண்டும்.

காலையில் நிகழ்ந்த ஒரு கொலைக்கு நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என்கிற நிலைப்பாடு.

மதியம் பிரேக்கிங் நியூசில் வந்த பாலியல் வன்புணர்வுக்கு உங்கள் கண்டனம் என்ன என்பது இன்னொன்று.

இரவு நடந்த வன்முறை வெறியாட்டத்துக்கு எதிரான உங்கள் எதிர்வினை என்பது மற்றொன்று.

கடந்த மாதம் இதைப்போலவே நிகழ்ந்த சம்பவங்களுக்கு எதிராக நீங்கள் எவ்வளவு உச்சகட்டமாக குரல் கொடுத்திருந்தாலும் சரி. அது கணக்கில் வராது. ஒவ்வொரு மாதமும்... ஒவ்வொரு வாரமும்.... ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். போலீஸ்.... ராணுவத்துக்காவது விடுமுறை உண்டு. ஆனால் இந்த முகநூல் பணிக்கு மட்டும் பர்மிஷனோ லீவோ கிடையாது.

ஆபரேஷன் தியேட்டரிலேயே படுத்திருந்தாலும் உங்கள் நிலைப்பாட்டை போஸ்டிங்காக போட்ட பிற்பாடு

நீங்கள் மண்டையைப் போடலாம்.

24 * 7 அம்புட்டு அலர்ட்டா இருக்கணும். அதுதான் முக்கியம்.

இந்த இலக்கியவாதிகள் படுத்தும்பாடு ஒருபுறம் என்றால்... இந்த ‘லைக்'கியவாதிகள் படுத்தும்பாடு பெரும்பாடு. இந்த சனியன்களுக்கு லைக் போட்டால் மட்டும் போதாது. இதுகளுக்குப் பிடிக்காதவர்கள் யார் யார் என்று ஆய்வு செய்து கண்டுபிடித்து அவர்களுக்கு எந்த லைக்கும் நாம் போடாமல் இருந்துவிட வேண்டியது நம் தலையாய கடமை. அதிலும் நமது நெருங்கியவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பது நட்புக்கு நல்லது. நள்ளிரவில் அவர்கள் போடும் ஒரு பதிவுக்கு குறைந்தபட்சம் நீங்கள் அதிகாலையிலாவது அலாரம் வைத்து எழுந்து ஒரு லைக்கைப் போட்டுவிட்டு உங்கள் தூக்கத்தைத் தொடர்வது உத்தமமான காரியம். இல்லாவிட்டால் ‘காரியம்'தான்.

நமக்கு எந்த நோயாக இருந்தாலும் கவலையே பட வேண்டாம். டாக்டரிடம் போகிறோமோ இல்லையோ முகநூலில் ஒரு போஸ்ட் போதும். பொங்கியெழுந்து வரும் ஃபேஸ்புக் மருத்துவக் குழு.

வயிற்றுப் போக்கிலிருந்து பக்கவாதம் வரைக்கும் சகலத்துக்குமான ஆலோசனைகள் அடுத்த அரைமணி நேரத்தில் வந்து குவிந்திருக்கும். அவற்றைக் கேட்டும் நீங்கள் உயிர்தப்பிப் பிழைத்திருந்தீர்கள் என்றால் சும்மா லைக் பிச்சுக்கும். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு R.I.P

‘என்னோட முதல் பிரசவத்துல வயித்தை சரியா இறுக்கிக் கட்டாம விட்டதால வயிறு பெருத்துப் போச்சு....' என்று எழுதினோம் என்றால்.... ‘கவலையை விடுங்கள் தோழி அடுத்த பிரசவத்தின்போது கயிறோடு காத்திருக்கிறோம்' என்று கருணையைப் பொழிவார்கள்.

‘எல்லோருமே போலியாக இருக்கிறார்கள். வாழ்வே பிடிக்கவில்லை. முடித்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்,' என்கிற இருவரித் தகவல் போதும்....

‘அய்யோ தோழி... அவசரப்பட்டு எதுவும் செய்துவிடாதீர்கள். உங்கள் பட்டுப் போன்ற கழுத்து சட்டென்று முறிவதைக் கற்பனை செய்யவே மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பேசா மல் பூச்சி மருந்தைக் குடித்து விடுங்கள். அதுதான் வலியற்ற ஒரே வழி...' என வந்துவிழும் அடுத்த ஆலோசனை. அதைப்பார்த்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்தவர் கொலை முயற்சியை நோக்கித் தள்ளப்படுவார்.

அடுத்து ஒரு தரம்... ரெண்டு தரம்... மூணு தரம்... என்று நம் அந்தரங்கத்தையெல்லாம் ஏலம் போடுவது...

அவளும் நானும் எப்ப சந்தித்தோம்....? அவ முதல்ல என்ன கொடுத்தா...? அந்த நேரத்துல என்ன டிரெஸ் போட்டிருந்தோம்... எப்பப் போடாம இருந்தோம்... முதலிரவுல என்ன குடுத்தாங்க முறுக்கா... முருங்கக்காயா...? என எதுவும் மிச்சம் இருக்கக் கூடாது. எல்லாத்தையும் போட்டு ஏத்தீரனும். நம்ம வீட்டுக்கு திருட வர்ற திருடன்கூட... ‘ஏம்மா... இது உன் பர்ஸ்ட் நைட்ல போட்டிருந்த நைட்டிதானே?'என்று கேட்கும் அளவுக்கு இருக்க வேண்டும் நம் ‘அந்தரங்க' வாழ்வு.

இதிலெல்லாம் வேறுபட்ட அசகாய சூரர்கள் இருக்கிறார்கள்.... அவர்கள் தனி ரகம். சமூகப் பிரச்சனைகளுக்காக கொந்தளிப்பதோ... குமுறுவதோ... அதற்காக கவிதை எழுதுவதோ.... பொதுவெளியில் ஆறுதல் சொல்வதோ என எதுவும் இருக்காது. ஆனாலும் இயங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். இன்பாக்ஸில் மட்டும். நமக்கு பாக்ஸர்களைத் தெரியும். ஆனால் இவர்கள் இன்பாக்ஸ்சர்ஸ். அதில் இரு தரப்பும் பலகுடும்பங்களை ஒரே நேரத்தில் மெயிண்டெய்ன் பண்ணிக் கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம் எழுத வந்தால் நிச்சயம் மாதத்துக்கு மூவாயிரம் பருவகாலக் கதைகளாவது Confirm.

இந்த முகநூலில் பரிதாபத்துக்குரிய ஜீவராசிகள் என்றால் அது நம் அறிவுஜீவிகள்தான். அதில் நான் பலபேரைக் கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறேன்.

‘இந்த ஃபேஸ்புக் எல்லாம் உங்குளுக்கு சுத்தமா ஆகாது. இங்க வள்ளலாரே வந்தாலும் வீச்சரிவாளோடு வந்தால்தான் வாழ முடியும். நீங்களுண்டு.... உங்கள் ஆய்வுகள் உண்டு... என்று இருங்கள்... அதை புத்தகங்களாகக் கொண்டுவரும் வழியைப் பாருங்கள்....' என்று கத்தியிருக்கிறேன்... கதறியிருக்கிறேன்... குமுறியிருக்கிறேன்.... கேட்டால்தானே?

இப்போதோ அதில் சிலர் ‘நான் அவரை நட்பு நீக்கம் பண்ணீட்டேன்.... இவர பிளாக் பண்ணீட்டேன்.... நேர்ல பார்த்தா பொளக்காம விடமாட்டேன்' என அரிவாளோடு உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

விமர்சனங்கள் இருந்தாலும் என்றோ தொலைத்த பள்ளி... கல்லூரி காலத்து நட்புகள்... உலகின் ஏதோ மூலையில் நம்மைத் தேடிக் கொண்டிருந்த ஒத்த கருத்துள்ள உள்ளங்கள்... யுத்தங்களின் பொருட்டு திசைக்கு ஒன்றாய் சிதறிப் போன குடும்பங்கள்.... என எண்ணற்ற உறவுகளுக்குப் பாலம் அமைத்துத் தந்ததும் இதே முகநூல்தான்.

எந்தவொரு தொழில் நுட்பத்தையும் அறிந்து கொள்வதோ... பயன்படுத்துவதோ தவறில்லைதான். ஆனால் அது எந்தளவுக்கு என்பதுதான் கேள்வி.

எண்ணற்ற ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுத்த ஒரு உயிர் நண்பனைச் சந்தித்தாலும்... உளமார உரையாடுவதற்கு பதிலாக அவனோடு எடுத்த செல்பிக்கு எத்தனை லைக் வருகிறது என்று பார்த்துக் கொண்டிருப்பதுதான் அசல் பைத்தியகாரத்தனம்.

நிகழ்கால மகிழ்வைத் தொலைத்துவிட்டு நிழலைத் தடவிக் கொண்டிருக்கிறோம் நாம்.

கழிப்பறை தினம்... கங்காரு தினம்...

குயில்கள் தினம்... குருவிகள் தினம்...

கொளுந்தியாள்கள் தினம்... கோட்டன்கள் தினம்...

என ஐ.நா அறிவித்த 365 நாட்கள் போக... திருமண நாள்... பிறந்தநாள்... வயசுக்கு வந்த நாள்... வராத நாள்... என எல்லாவ்ற்றுக்கும் இருக்கவே இருக்கு செல்பி.

வெளியில் வந்த குழந்தையை தாதி குளிப்பாட்டி கையில் கொடுக்கும் முன்பே ‘எங்கள் வீட்டு இளவரசன்'ன்னு ஒரு செல்பி.

பாடையேறப் போகும் பாட்டியுடன் ‘மிஸ் யூ'ன்னு ஒரு செல்பி.

நல்லவேளையாக முதலிரவின் உச்சகட்ட செல்பியை யாரும் போடாததால் தப்பித்தோம் நாம்.

ஆனாலும் இப்படி எல்லாக் கண்றாவி-களையும் அனுமதிக்கும் மூஞ்சி புக் உண்மையில் அவ்வளவு ஜனநாயக பூர்வமானதா? என்கிற கேள்வி உங்களுக்குள் எழுந்தால் நீங்கள் நிச்சயம் இம்முகநூலை சரியாக கணித்து வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஆம்.... உண்மைதான்.

அவர்கள் எல்லாவற்றையும் அனுமதிக்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால் நம்மை விட மறை கழண்டவர்கள் யாரும் இருக்க முடியாது.

நம்மை... நமது மகிழ்வான பொழுது-களை... துயரமான தருணங்களை... நமது விளையாட்டுகளை... விடலைத்தனங்களை... நமது ரசனையை... நமது ஒவ்வாமைகளை என எல்லாவற்றையும் அனுமதிக்கும் ஃபேஸ்புக்கை விட வேறு எது மனித உரிமைகளை மதிக்கக்கூடிய சக்தி? இது இயல்பாக எழக்கூடிய கேள்வி.

ஆனால்.... ஈழவிடுதலையின் மீது நாட்டம் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும் ‘எல்லாவற்றையும்' அனுமதிக்கும் இந்த முகநூல் தமிழ் மக்களின் நேசிப்பிற்குரிய தலைவர் பிரபாகரன் அவர்களது படங்களைப் பதிவேற்றினால் மட்டும் ஏன் பாய்ந்து வருகிறதென்று.

இந்நிலை ஈழ மக்களுக்கு மட்டுமென்றில்லை.

அமெரிக்காவின் வியட்நாம் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போது உடலெல்லாம் பற்றியெரிய பரிதவித்து ஓடி வரும் ஒரு சிறுமியின் நெஞ்சை உலுக்கும் ஒரு படம் நமக்கெல்லாம் நினைவிருக்கும்... அவளது அந்த ஒளிப்படத்துக்கும் கூட தடைதான்.

பாலஸ்தீன மக்களின் மீது இரக்கமற்ற தாக்குதல்களைத் தொடுக்கும் இஸ்ரேல் குறித்து எந்தவொரு செய்தியையோ புகைப்படத்தையோ பதிவேற்றிவிட முடியாது என்பதும்... அதன் பாதுகாப்பு அமைச்சரோடு நடத்திய பேச்சு வார்த்தைகளும் அதன் விளைவாக அமைக்கப்பட்ட குழுவும் சொல்லாத சேதிகள் ஏராளம்.

அரசியலற்று உலவிக் கொண்டிருப்பவர்களுக்கு முகநூல் ஒரு சொர்க்கபுரிதான். சந்தேகமில்லை.

ஆனால் அவர்கள் அப்படியே உலவ வேண்டும் என்பதுதான் முகநூலின் அரசியல்புரி.

இவையன்றி இன்னும் என்னென்ன விஷயங்களில் எல்லாம் முகநூல் தன் சித்து வேலைகளைக் காட்டியிருக்கிறது என்பதை எல்லாம் ஈழத்து இளைஞர் ரூபன் சிவராஜா எழுதிய ‘அதிகார நலனும் அரசியல் நகர்வும்' என்கிற நூலை வாசித்தபோது அதிர்ந்து போனேன் நான்.

நமக்கு எது பிடிக்கும்... எது பிடிக்காது... யாரைப் பிடிக்கும்... யாரைப் பிடிக்காது... யாரோடு உடன்பாடு... யாரோடு முரண்பாடு... நாம் விரும்பும் கொள்கையை... நாம் கடைபிடிக்கும் தத்துவத்தை... நாம் பின்பற்றும் அமைப்பை... அதை வைத்து நாம் நாளை அடியெடுத்து வைக்க இருக்கும் அடுத்த கட்ட நகர்வை என அனைத்தையும் ஒரே ஒரு மைக்ரோ நொடிக்குள் எடுத்துவிடும் வல்லமை கொண்டதுதான் இந்த ஃபேஸ்புக்.

உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும்... எட்டுத் திக்கிலும்... சரியான அரசியலை நோக்கி யார் யாரெல்லாம் தயாராவார்கள்... அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என அனைத்தையுமே துல்லியமாகக் கணித்து வைத்திருக்கும் அமைப்புதான் ‘முகநூல்'

ஒவ்வொரு நாளும் முகநூலைத் திறக்கும்போது ‘உங்கள் மனதில் என்ன இருக்கிறது, பாமரன்?'என்கிற கேள்விக்கு நான் வேண்டுமானால் உளறிக் கொட்டலாம்.

ஆனால்...

நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் துல்லியமாக விரல் நுனியில் வைத்திருக்கும் ஃபேஸ்புக்... அவற்றை யாருக்கு கொடுக்கும்....? எப்போது கொடுக்கும்....? எதற்குக் கொடுக்கும்....? என்று தன் மனதில் உள்ளதையெல்லாம் அது

சொல்ல நம்மைப் போன்ற கேணப்பயலா என்ன...?

ஏப்ரல், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com