மதுரா டிராவல்ஸ் பாலன்
மதுரா டிராவல்ஸ் பாலன்

அந்த ரிஸ்கை நான் எடுத்திராவிட்டால்…

மதுரா டிராவல்ஸ் பாலன்

1987-இல் எங்கள் மதுரா டிராவல்ஸ் மூலமாக சீர்காழி கோவிந்தராஜன் குழுவினரை லண்டன், டென்மார்க், ஜெர்மனி சுவிட்சர்லாந்து என பல நாடுகளுக்கும் அனுப்பினேன். அதன் பின்னர் டி எம் சுந்தரராஜன், சில்க் ஸ்மிதா உட்பட பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வாய்ப்பு கிடைத்தது.

எங்கள் மூன்றாவது நிகழ்ச்சியாக எஸ்.எஸ்.சந்திரன், கோவை சரளா மற்றும் சில நண்பர்கள் எல்லாம் இணைந்த 15 பேர் கொண்ட குழுவினரை பிரான்ஸுக்கு அனுப்பினோம். நண்பர் கோவை நந்தன் என்பவர்தான் இதற்காக ஏற்பாடு செய்திருந்தார். அவர்களுடைய ஐந்து நிகழ்ச்சிகளை அங்கே ஏற்பாடு செய்திருந்தார். கலைஞர்களுக்கு விமான டிக்கெட் விசா எடுப்பது போன்றவற்றுக்காக 4 லட்ச ரூபாய் செலவு. நிகழ்ச்சிக்கு அவர்கள் செல்லும் தினம் வந்தது. சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை வழியாக பிரான்ஸ் அனுப்பவேண்டும். இரவு பத்துமணி வாக்கில் அவர்களை வழி அனுப்பினேன். கொழும்பு சென்று அங்கிருந்து பிரான்ஸ் செல்லும் ஏர்லங்கா விமானத்தை இரவு 2 மணிக்கு அவர்கள் பிடிக்கவேண்டும்.

அவர்கள் கிளம்பியபிறகு வீடு திரும்பினேன். என் மனைவிக்கு அன்று இரவே பிரசவவலி வந்துவிட்டது. அது இரண்டாவது குழந்தை. அவரை உடனே கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தேன். காலை ஏழுமணிக்குள் குழந்தை பிறந்துவிட வாய்ப்புண்டு என்றனர். வீட்டுக்கு வந்து காலை ஐந்துமணிக்கு மருத்துவமனை போகலாம் என்று திரும்பினேன். இரவு இரண்டுமணி இருக்கும். வீட்டு போன் ஒலித்தது. எடுத்தால் எஸ்.எஸ்.சந்திரன் பேசினார். ’நாங்கள் கொழும்பு ஏர்போர்ட்டில் இருக்கிறோம். எங்களை விமானத்தில் ஏற்ற மறுக்கிறார்கள். இந்த விமானம் ஜெர்மன் போய்தான் பிரான்ஸ் செல்கிறதாம். ஜெர்மன் செல்ல விசாவும் எடுக்கவேண்டும். அதுதான் சட்டமாம். நம்மிடம் அது இல்லாததால் மறுக்கிறார்கள்…’ என்றார். இது பேரிடியாய் என்னைத் தாக்கியது. அந்த பிரான்ஸ் விமானமும் இவர்களை ஏற்றாமலே போய்விட்டது. அடடா இவர்கள் போகாவிட்டால் அந்த கலைநிகழ்ச்சி ஏற்பாடுகள் எல்லாம் வீணாகிப் போய்விடுமே என்ற பதற்றம் என்னைத் தொற்றிக்கொண்டது. அந்த இரவிலேயே ஏர்லங்கா மேனேஜரை தொடர்புகொண்டு எழுப்பினேன். விவரத்தைச் சொன்னேன். ஏதாவது ஏற்பாடு செய்யுங்க ப்ளீஸ் என்றேன். அவரும் உடனே இலங்கைக்குத் தொடர்புகொண்டார். பிறகு இதற்கு அடுத்ததாக காலை ஐந்துமணிக்கு யுடிஏ விமானம் உள்ளது. அதில் அனுப்பலாம். ஆனால் ஒரு லட்சம் கூடுதலாக செலவாகும் என்றார்.

அப்போது நமக்கு ஏர்லைன்ஸ் பணம் கட்ட ஒரு வாரம் டைம் தருவார்கள். எனவே நான் கட்டிவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு, நண்பர் நந்தனிடம் தொடர்புகொண்டேன். விவரத்தைச் சொன்னேன். கூடுதலாக ஒரு லட்சம் செலவாகிறது. அதை ஏற்றுக்கொள்ளமுடியுமா என்றேன். ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. இது உங்கள் தவறு. நீங்கள் கேட்ட காசை நான் கொடுத்துவிட்டேன். நீங்கள்தான் பொறுப்பேற்று அனுப்பி வைக்கவேண்டும்’ என்று தடாலடியாகச் சொல்லிவிட்டார். அவர் கையை விரித்ததும் நான் இடிந்துபோய்விட்டேன். அதில் எனக்கு மொத்தமே இருபதாயிரம் ரூபாய்தான் லாபம்! கையை விட்டு நான் இப்போது ஒருலட்சரூபாய் கட்டவேண்டும். இப்படிக் கட்டுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அந்த பயணிகளை சென்னைக்குத் திருப்பி அனுப்பிவிடுவார்கள். கோவை நந்தன் செலவு செய்த நான்கு லட்சமும் காலி. அவர் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு செய்த பல லட்சரூபாயும் காலி. இந்த ஒரு லட்ச ரூபாய் நஷ்டத்தை நான் தவிர்க்க நினைத்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பல லட்சரூபாய் இழப்பு ஏற்படும்.

எனக்கோ என்ன செய்வது என்ற தவிப்பு. அச்சமயம் நான் மண்ணடியில் ஆயிரம் ரூபாய் வாடகையில் பத்தாயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து அலுவலகம் எடுத்து நடத்திவந்தேன். என் மாத வருவாயோ சில ஆயிரங்கள்தான். வீட்டுவாடகை 600 ரூபாய். இந்த ஒரு லட்சம் என்பது அன்றைய தினம் பெரிய பணம். என்னுடைய தவறால் நடந்தது இது. ஆனால் அந்த தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? மனைவியோ பிரசவத்துக்காக மருத்துவமனையில்.

சட்டென்று முடிவு செய்தேன். நான் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. அவர்களை விமானத்தில் அனுப்பிவிடுவோம் என. உடனே ஏர்லங்கா மேனேஜருக்கு அடித்து, ‘அய்யா அவர்களை யுடிஏ விமானத்தில் பிரான்ஸ் அனுப்பிவிடுங்கள். மேற்கொண்டு ஒரு லட்சம் தருகிறேன்’ என உத்தரவாதம் சொல்லிவிட்டேன். அவர்களும் அதிகாலை 4 மணிக்கு கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.

இந்த ஒரு லட்சம் எப்படிக் கட்டுவது என்ற பெரிய ரிஸ்குடன் காலை மருத்துவமனைக்குச் சென்றேன். என் மகன் பிறந்திருந்தான். மனைவி சோர்வுடன் படுத்திருந்தார். மகன் பிறந்ததைக் கொண்டாடுவதா? ஒரு லட்சம் நஷ்டம் தந்த வேதனையை நினைப்பதா? மனைவி கண் திறக்க எவ்வளவு நேரமாகுமோ? அப்படியே அயர்ந்து அமர்ந்துவிட்டேன்.

பிறகு குழந்தையை வீட்டுக்குக் கூட்டிவந்தேன். வழமைபோல் அலுவலக வேலைகள் தொடங்கின. எப்படி ஒரு லட்ச ரூபாய் கட்டுவது என்ற வேதனையுடன் நாட்கள் நகர்ந்தன.

வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒரு வாரம். கலைஞர்கள் அதை முடித்துக்கொண்டு நாடு திரும்பினர். கோவை நந்தனும் எங்கள் மண்ணடி அலுவலகத்துக்கு வந்தார்.

 ‘பாலன் எப்படி இருக்கீங்க?’ என்றார்.’நல்லா இருக்கேன்’ என்றதுடன் அமைதி காத்தேன்.

‘ நிகழ்ச்சி எல்லா நாடுகளிலும் நல்லா நடந்தது. நமக்கு நல்ல பெயர். நீங்கள் நல்லவேளை எப்படியோ கலைஞர்களை அனுப்பிவிட்டீர்கள். நீங்கள் அனுப்பாமல் போயிருந்தால் நான் தற்கொலைதான் பண்ணியிருக்கணும். ரொம்ப நன்றி பாலன்’ என்றார்.

பிறகு ‘உங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது என கேள்விப்பட்டேன். வாங்க அவனைப் போய் பார்ப்போமே?’ என்றார். எனக்கோ ஒரு லட்சரூபாய் நஷ்டத்தை என் தலையில் போட்டுவிட்டீர்களே என்ற எண்ணம். இருந்தாலும் நாங்கள் ஒரு ஆட்டோவில் மண்ணடியில் இருந்து மந்தைவெளியில் இருந்த என் வீட்டுக்குச் சென்றோம்.

அறைக்குள் குழந்தை அழுதுகொண்டிருந்தான். அவனைப் பார்த்து கையில் ஏதோ கொடுத்துவிட்டு வந்தார். நானும் மனைவியும் என்னவென்று பார்த்தோம். அது ஒரு சவரன் தங்கம்!

 ‘இது யானைப்பசிக்கு சோளப்பொரி போல.. என் பெரிய கடனுக்கு முன்னால் இது எம்மாத்திரம். இதைக் கொடுத்து என்னை திருப்திப்படுத்த முடியுமா?’ என்ற வேதனையுடன் வந்து அவர் பக்கத்தில் அமர்ந்தேன்.

அவர் பெட்டியைத் திறந்தார். காகிதம் சுற்றப்பட்டிருந்த ஒரு கட்டை எடுத்து கையில் கொடுத்தார். ‘பாலன் நீங்கள் ஒரு லட்சரூபாய் நஷ்டப்பட்டிருக்கீங்க. உங்களால் எங்கள் நிகழ்ச்சி நன்றாக நடந்தது. இதில் ஒரு லட்சம் உள்ளது. இதை வைத்து ஏர்லைன்ஸுக்குக் கட்டவேண்டிய தொகையை கட்டுங்கள்’ என்றார்.

கையில் வாங்கியதும் வெடித்து அழுதுவிட்டேன். எவ்வளவு பெரிய கடன் இது.. வருசக்கணக்காக ஆனாலும் என்னால் கட்டமுடியாத கடன். அதைத் தீர்த்துவிட்டாரே… ‘நீங்கள் ஒரு லட்சரூபாய் கடனை ஏற்றுக்கொண்டுதானே அனுப்பினீர்கள்.. எவ்வளவு பெரிய விஷயம்?’ என்று சொல்லிவேறு தருகிறார்..

எனக்கு குற்ற உணர்ச்சி. ஒரு சமயம் அனுப்பாமல் கூட இருந்துவிடலாமா என்று நினைத்தேனே…. என்று.

ஆனால் அந்த ரிஸ்க் எடுத்து நான் அவர்களை அனுப்பி வைத்ததால் அவர் மனதில் இடம் பிடித்தேன். அவர் என் கடனில் இருந்து மீள உதவினார். அன்று மட்டும் நான் ரிஸ்க் எடுக்காமல் இருந்திருந்தால் உலகம் முழுக்க என் பெயர் கெட்டிருக்கும். மதுரா டிராவல்ஸ் பாலன் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டார் என்று ஆகியிருக்கும். வெளிநாட்டுக்கு நான் அதிகமான கலை நிகழ்ச்சிகள் நடத்த கலைஞர்களை அனுப்பியதால் எனக்கு கலைமாமணி விருது கிடைதத்து. லிம்கா புக் ஆப் ரிக்கார்ட் அதிக கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ததை சாதனையாகப் பதிந்தது. அந்த ஒரு லட்ச ரூபாய்க்கு ரிஸ்க் எடுக்காமல் இருந்தால் இந்த நிலைக்கு நான் வந்திருக்கமாட்டேன்.

பின்குறிப்பு: அந்த ஒரு லட்சரூபாய் நஷ்ட சமயத்தில் பிறந்த என் அன்பு மகன் ஶ்ரீகரன் இன்று இந்த மதுரா டிராவல்ஸை சிறப்பாக நிர்வகிக்கிறான். மிகப்பெரிய நிறுவனமாக வளர்த்துவருகிறான்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com