ஆக்கிரமிக்கப்பட முடியாத ஒரு தூய நிலம் மனிதனுக்குள் இருக்கிறது!

என்னை மாற்றிய ஒரே ஒரு புத்தகம் என்று எதையாவது சொல்லமுடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. என்னை அதிகம் பாதித்த புத்தகங்கள் எவை என்ற ஒரு சிறிய பட்டியலை என்னால் கொடுக்க முடியும். முன்பொரு இடத்தில் முப்பது புத்தகங்களை அவ்வாறு பட்டியல் இட்டிருக்கிறேன். இதில் என்னை முதல் முதலாக வெகுவாகப் பாதித்த புத்தகம் என்று விவிலியத்தைத்தான் சொல்வேன்.

எனது இளமைக்காலத்தில் என்னைச் சுற்றி நாத்திகர்களும் நாத்திகமும் அதிகம் இல்லை எனினும் என் மனிதர்கள்  மத /கலாச்சார ரீதியாக அதிகத் துடிப்புடையவர்கள் ஆகவும் இருக்கவில்லை. டி.ஆர். நாகராஜ் சொல்கிற கலாச்சார மறதி என்ற நோயினால் பீடிக்கப் பட்டவர்கள் போலத்தான் அவர்கள் இருந்தார்கள். ஆகவே மீ உலகத்துடனுனான எனது முதல் தொடர்பு விவிலியம் மூலமாகவே நிகழ்ந்தது.ஒவ்வொரு சிறுவனும் அவன் வாழ்க்கைப்பாதையில் சந்திக்கவேண்டிய நாயக&தியாகி இணையாக எனக்கு ஏசுவே இருந்தார். பின்னர் ஜோசப் காம்பெலின் ‘நாயகனின் ஆயிரம் முகங்கள்' படிக்கிற வரைக்கும் அறிவுப் பூர்வமாக இதிலிருந்து என்னால் விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. பிறகு மார்க்சிம் கார்க்கியின் ‘தாய்' நாவல் என்னை முழுமையாக ஆட்கொண்டது. அதை முதல்முதலாக படித்தபோது அடைந்த கிளர்ச்சி இப்போதும் நினைவிருக்கிறது.பொதுவுடைமை சமுதாயம்  பற்றி கார்க்கி கொடுத்த சித்திரம் போல இன்னமும் ஒரு கிளர்ச்சி ஊட்டும் சித்திரம் இலக்கியத்தில் அளிக்கப்படவில்லை என்பதே என் நிலை.

அய்ன் ராண்ட் படிக்கிற வரை ஒரு உலகளாவிய பொதுவுடைமை சமூகம் பற்றிய எனது இந்தக் கனவு நீடித்தது. ஆனால் தாய் தனிமனிதர் பற்றி எதுவுமே சொல்லவில்லை அல்லது அது சொன்னது எதுவும் போதுமானதாக இல்லை என்பதை அய்ன் ராண்டின் அட்லஸ் ஷ்ரக்ட் போன்ற நூல்களைப் படிக்கும்போது உணர்ந்தேன். ஹேன்க் ரியர்டன் போன்ற ஒரு எஃகு ஆளுமையின் மீது ஒரு விருப்பமும் அவனைப்போல என்னை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையும் இருந்தது. ஆனால் செவ்விந்தியர்கள் போன்ற பூர்வ குடிகள் பற்றிய அய்ன் ராண்டின் பார்வை என்னை அவரிடமிருந்து விலக்கியது.இவ்வுலகென்பது இதன் மக்கள் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை என்று கருதினேன்.

கார்க்கியின் பொதுவுடைமை, அயன்ராண்டின் தனி நபர்வாதம் இரண்டிலுமே நிலம் மீதான மக்களின் உணர்வுப் பூர்வமான பிணைப்பிற்கு இடமில்லை என்று நான் கண்டேன். நிலம் மீதான அதன் பயன்மதிப்பு சார்ந்த பிணைப்பைத் தவிர வேறுவிதமான பிணைப்புகள் மனிதர்க்கு இருக்கக் கூடும் என்பதை இரண்டு சித்தாந்தங்களும் கவனிக்க மறுத்தன என்பதை நான் கண்டேன். இது நிலம் குறித்தானது மட்டுமல்ல என்று போதம் வருகையில்தான் புத்துயிர்ப்பு எனக்கு நிகழ்ந்தது. டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு. இன்றும் நான் திரும்ப திரும்ப ஆன்மாவில்  சோர்வு அடையும்போதெல்லாம் திரும்பும் புத்தகமாக டால்ஸ்டாயின் புத்துயிர்ப்புதான் இருக்கிறது.

ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை? என்ற சிறிய துண்டுப் பிரசுரத்திலிருந்து டால்ஸ்டாய் இந்த நாவலை எழுப்பி எழுதினார்  என்று ஒருவர் சொல்லமுடியும். அதன் கதைவடிவமே இது. ஆனால் இங்கே நிலம் என்பது ஒரு மனிதனின் ஆன்மாவுக்குள் இருப்பது. அதில் எவ்வளவை அவனால்  பிறர்க்கு அளிக்க முடிகிறது என்பதற்கான பதிலாகவே இந்நாவலை நான் கருதுகிறேன். யாராலும் ஆக்கிரமிக்கப்பட முடியாத ஒரு தூய நிலம் மனிதனுக்குள் இருக்கிறது என்பதை புத்துயிர்ப்பு எனக்கு காட்டியது. அது இயல்பிலேயே அவனுக்கு மேலிருந்தோ உள்ளிருந்தோ அளிக்கப்பட்டது.

அவனது வாழ்நாள் பணி அதை விஸ்தரித்துக் கொண்டே போய் வானோடு பிணைத்து விடுவதுதான்.

ஜூலை, 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com