இன்சுலின் இல்லாமல் இனிப்பை வெல்வதா?

இன்சுலின் இல்லாமல் இனிப்பை வெல்வதா?

இன்சுலின் நூற்றாண்டு

சர்க்கரை நோய்க்கு இன்சுலின் மருந்து செலுத்துவதன் மூலம் அதைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டாகிறது. இந்த நூறு ஆண்டுகளில் இன்சுலின் என்பது உயிர்காக்கும் மருந்து என்பது நிறுவப்பட்டுவிட்டது. ஆனால்... இந்த ஆனாலுக்குப் பதிலை இறுதியில் பார்க்கலாம். முதலில் சர்க்கரை( நீரிழிவு) நோய்க்கும் இன்சுலினுக்கும் உள்ள தொடர்பை பார்த்துவிடுவோம்.

மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) தான் நாம் தினமும் இயங்குவதற்கான சக்தியைத் தருகிறது. நாம் உணவு உண்டவுடன் மாவுச்சத்திலிருந்து

சர்க்கரை ரத்தத்தில் அதிகரிக்கிறது. இது அதிகமானவுடன் கணையத்திலிருந்து இன்சுலின் சுரந்து

சர்க்கரையை அனைத்து திசுக்களுக்கும் செலுத்தி உடலுக்கான சக்தியைக் கொடுக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருகிறது. இந்த இடத்தில்தான்

சர்க்கரை நோயாளிகளின் பிரச்னை வருகிறது. சிலருக்கு மரபு ரீதியாகவே இன்சுலின் சுரக்காது. இது டைப் 1 சர்க்கரை நோய். இவர்களுக்கு இன்சுலின் செலுத்துவதன் மூலமே இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.

இரண்டாம் வகையினர் இன்சுலின் குறைவான அளவு சுரக்கும் அல்லது தேவையான அளவை விட அதிக மாவுச்சத்தை உண்பது/ உடல் பருமன், உடற்பயிற்சி இல்லாமல் அதிக அளவு மாவுச்சத்தை

சேர்க்கும்போது உடலில் சுரக்கும் இன்சுலினால் கட்டுப்படுத்தும் அளவைவிட அதிகமாக இன்சுலின் தேவைப்படுபவர்கள். இவர்களுக்கு கணையத்தைத் தூண்டி அதிக அளவில் இன்சுலினை உடல் சுரக்கச் செய்ய வேண்டும் அல்லது இன்சுலினை உடலில் செலுத்த வேண்டும். இது டைப் 2 சர்க்கரை நோய் எனப்படுகிறது. உலகில் அதிக அளவிலான சர்க்கரை நோயாளிகள் இந்த வகையினரே.

1869 இல் ஜெர்மன் மருத்துவர் பால் லாங்கர்ஹான்ஸ் தொடங்கி வைத்த இந்த ஆராய்ச்சியின் முக்கியமான புள்ளியை 1921 &ல் தொட்டார் டொரண்டோ பல்கலைக்கழக டாக்டர் பேண்டிங். தன் ஆராய்ச்சி உதவியாளர் டாக்டர் பெஸ்டுடன் சேர்ந்து நாய்களுக்கு கணையத்தை நீக்கி ரத்த சர்க்கரை அளவு அதிகமானவுடன் இன்சுலினை செலுத்தி அது கட்டுக்குள் வருகிறது என்பதை நிரூபித்தார்கள். 1923 இல் இந்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பேண்டிங்குக்கும் மெக்லீடுக்கும் கிடைத்தது. ஆரம்ப காலத்தில் சுத்தமான இன்சுலினை விலங்குகளின் கணையத்திலிருந்து பிரித்தெடுக்க சிரமப்பட்ட இவர்கள் பின்னாட்களில் அந்த குறைபாட்டை  நீக்கினார்கள்.

விலங்குகளிலிருந்து இன்சுலினை எடுத்ததற்கு  அடுத்தபடியாக ஆய்வகத்திலேயே செயற்கை முறையில் 1978 இல் ஆர்தர் ரிக்ஸ் மற்றும் கெலிச்சி இட்டாகுரா இருவராலும் இன்சுலின் தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக பயன்படுத்தப் பட்டது. சமீபத்தில் குஸும்பா (safflower)  என்ற பூவிலிருந்து இன்சுலினை குறைந்த செலவில் தயாரிக்காலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இப்படி இந்த நூறாண்டுகளில் இன்சுலின் கடந்து வந்த பாதை மிகப்பெரியது. டைப் 1 சர்க்கரை வியாதிக்கு இன்சுலின் மட்டுமே உயிர்காக்கும் மருந்து ஆனால்... முதல் பத்தியில் சொன்ன ஆனால் இங்குதான் வருகிறது. டைப் 2 சர்க்கரை நோயாளிகள் வாழ்நாள் முழுக்க இன்சுலினை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அதற்கு மாற்று  இருக்கிறது என்கிறார் பேலியோ டயட் நூலாசிரியர் நியாண்டர் செல்வன்.

மாவுச்சத்து உள்ள உணவுகளை அதாவது அரிசி, கோதுமை போன்ற உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வதால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாது. இதற்கு பதிலாக கொழுப்பு மற்றும் புரதம் சார்ந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி இன்சுலின் எடுத்துக் கொள்வதிலிருந்து மீளலாம் என்கிறார்கள் இந்த பேலியோ டயட்காரர்கள்.

மாவுச்சத்து உணவை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. உடனே கணையம் இன்சுலினைச் சுரந்து அதைக் குறைக்கிறது. கட்டுப்பாட்டை மீறும்போது இன்சுலின் ஊசியை நாடுகிறோம். அதற்கு பதிலாக மாவுச்சத்து உணவைத் தவிர்த்து கொழுப்பு, புரதம் சார்ந்த உணவுகளை எடுக்கும்போது உடல் அதற்கான சக்திக்காக கொழுப்பை எரிக்கத் தொடங்கும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் ஏறாது. டைப் 2 சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரைப்படி பேலியோ உணவை எடுப்பதன் மூலம் இன்சுலின் ஊசியின் தேவை படிப்படியாகக் குறைந்து ஒரு கட்டத்தில் சர்க்கரை நோயிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்பதை பலர்  முயற்சித்து நிரூபித்தும் இருக்கிறார்கள்.

ஆனால் பன்னாட்டு பெரு நிறுவனங்கள் இந்த வகையில் மக்கள் நலமடைவதை விரும்பமாட்டார்கள். மாவுச்சத்து சார்ந்த உணவுவகைகள், நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் அனைத்துமே இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பவை. இதன் வியாபாரம் பாதிப்பதை விரும்ப மாட்டார்கள். அதனால் இவர்கள் பரிந்துரைப்பது உடல் பருமன்,  சர்க்கரை வியாதிக்கு உடற்பயிற்சியும் மருந்துகளுமே.

2018 கணக்கீட்டின்படி ஓராண்டில் இந்தியாவில் இன்சுலின் வணிகம் சுமார் பதினான்காயிரம் கோடிக்கு நடக்கிறது. வருடத்திற்கு இந்த சந்தை 16.7% வளர்வதாக சொல்கிறது பிஸினஸ்வயர் பத்திரிகை. உணவுமுறையில் மாற்றத்தைக் கொண்டுவருவதன் மூலம் சர்க்கரை நோய் பிரச்னையிலிருந்து நாம் மீளலாம். ஆனால் இவ்வளவு பெரிய வணிகத்தை இழக்க விரும்புமா பன்னாட்டு நிறுவனங்கள்?

டிசம்பர், 2020.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com